November 28th, 2011 12:01 AM
பாலுமகேந்திராவின் படப் பாடல்கள் என்றுமே தனித்த சிறப்பு மிக்கவை. காரணம் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை… இசைஞானி இளையராஜா.
அழியாத கோலங்கள் (சலீல் சவுத்ரி) என்ற ஒரு படம் தவிர, பாலு மகேந்திராவின் மீதி எல்லா படங்களுக்கும் ராஜாதான் இசையமைப்பாளர்.
முதல்முறையாக பாலு மகேந்திராவின் பட பாடல்களை மட்டுமே பாடும் கச்சேரி ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளார், தமிழ் சினிமாவின் தலைசிறந்த கலைஞர்களை தேடிப் பிடித்து பாராட்டு நடத்துவதில் தனி இடம்பிடித்துவிட்ட ஸ்ரீதேவி பைன் ஆர்ட்ஸ் தலைவர் சிவசங்கர்.
பாலுமகேந்திரா ஹிட்ஸ் என்ற தலைப்பில் அவர் படங்களில் வந்த மறக்கமுடியாத பல பாடல்களைப் மேடையில் பாடவிருக்கிறார்கள் எஸ்பி பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பிரபல பாடகர்கள்.
4-12-11 ஞாயிறு மாலை 6.30 மணிக்கு காமராஜர் அரங்கத்தில் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். குருநாதரை கவுரவிக்க அவரது சிஷ்யர்களான பாலா, அறிவுமதி, சீமான், வெற்றிமாறன், சீனு ராமசாமி போன்றவர்கள் வரவிருக்கிறார்களாம்.
பாட்டோடு நின்றுவிடாமல், பாலு மகேந்திரா குறித்த பல சுவையான தகவல்களை மேடையில் சொல்லி சுவாரஸ்யம் தரவிருக்கிறார்கள்.
இலங்கை மட்டக்களப்பு அருகே அமர்தகழி என்ற ஊரில் பிறந்தவர் பாலுமகேந்திரா. இவரது அண்டை வீட்டுக்காரர்தான் கவிஞர் காசி ஆனந்தன். பாலுமகேந்திரா இயக்கிய முதல் படமான அழியாத கோலங்கள் படத்தில் வரும் மூன்று சிறுவர்களில் ஒருவர் காசி ஆனந்தன் என்றால் நம்ப முடிகிறதா.
உங்களுக்குத் தெரியாத இதுபோன்ற சுவாரஸ்யமான சமாச்சாரங்களை இந்த விழாவில் ரசிகர்களுக்கு பந்தி வைக்கப் போகிறார்கள்.

No comments:
Post a Comment