Wednesday, 21 December 2011

கமலுக்கு தேசியவிருது கிடைத்தது எப்படி? பாலுமகேந்திரா ருசிகரம்!

மூன்றாம் பிறை படத்தில் ஸ்ரீதேவி சிறப்பாக நடித்திருந்தும், கமல்ஹாசனுக்கு தேசிய விருது கிடைத்தது எப்படி? என்பது பற்றி டைரக்டர் பாலுமகேந்திரா ருசிகர தகவலை வெளியிட்டுள்ளார். எழுத்தாளர் மணா எழுதிய `கமல் நம் காலத்து நாயகன் என்ற புத்தக வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. புத்தகத்தை டைரக்டர் பாலுமகேந்திரா வெளியிட, பட்டிமன்ற நடுவர் கு.ஞானசம்பந்தன் பெற்றுக்கொண்டார்.

விழாவில் டைரக்டர் பாலுமகேந்திரா, கமல்ஹாசனைப் பற்றி பேசிய பேச்சு அனைவரையும் கவர்ந்தது. அவர் பேசுகையில், "மூன்றாம் பிறை படத்தின் கதையை முதலில் ஸ்ரீதேவியிடம்தான் கூறினேன். அதைக் கேட்டவுடன், அவர் உருகி அழத்தொடங்கி விட்டார். பிறகு கமல்ஹாசனிடம் கதையை சொன்னேன். "எனக்கு இது சரிப்பட்டு வருமா? என்று கமல் முதலில் சந்தேகப்பட்டார். "நிச்சயமாக இது உங்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்று சொல்லி சம்மதிக்க செய்தேன். அந்த படம், கதாநாயகியை மையமாக கொண்ட படம் என்பதால், எல்லா காட்சிகளிலும் ஸ்ரீதேவியே வருவார். படத்தில் அவர் பிரமாதமாக நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

கமல், ஸ்ரீதேவியுடன் தோன்றுகிற காட்சிகளில் எல்லாம், "நீங்கள் நடிக்க முயற்சிக்காதீர்கள். இயல்பாக இருங்கள் என்று கமலிடம் சொன்னேன். அவரும் அதை அப்படியே செய்தார். மலையில் இருந்து கொட்டுகிற அருவி, பாறையின் மீது பட்டுத் தெறிக்கும்போது, தோன்றும் அழகே தனிதான். அதுபோல் கொட்டுகிற அருவியாக ஸ்ரீதேவி இருந்தார். பட்டுத் தெறிக்கிற பாறையாக கமல் இருந்தார். அதனால்தான் அவருக்கு தேசிய விருது கிடைத்தது.

கமல்ஹாசன் தேடல் உள்ள ஒரு அற்புதமான கலைஞர். ஆரம்ப காலங்களில், என்னிடம் எப்போதும் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்பார். அவரிடம் இருக்கக்கூடிய நகைச்சுவை உணர்வு, எனக்கு மிகவும் பிடிக்கும். கமல்ஹாசனை நான் ஒரு ரசிகனாகவே பார்க்கிறேன். பட்டத்து இளவரசனுக்கு முடிசூடும்போது எப்படி நாடே மகிழுமோ, அதுபோல் அவரை பாராட்டுகிறபோது, நானும் மகிழ்கிறேன், என்றார்.

விழாவில், டைரக்டர் - நடிகர் பார்த்திபன் பேசும்போது, கமல் ஒரு பரிசோதனை கூடம் போன்றவர். திரைப்படத்தின் பல்வேறு கூறுகளை, தன்னை முன்னிலையாகக் கொண்டு பரிசோதித்து பார்ப்பவர். அவர் முதல் படத்துக்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? 250 ரூபாய்தான். அதில் இருந்து நாள்தோறும் வளர்ந்து, இன்றைக்கு இந்த உயர்வை எட்டியிருக்கிறார். அவரே ஒரு தொகுப்புதான். அவருக்கு ஒரு தொகுப்பு நூல் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, என்று குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில்  நடிகர்கள் சார்லி, சண்முகராஜா, நடிகை ரோகிணி, கவிஞர் நா.முத்துக்குமார், கு.ஞானசம்பந்தன் ஆகியோரும் கமலை பாராட்டி பேசினார்கள்.

1 comment: