தமிழ்சினிமா பட்டுப்புடவை என்றால் அதிலிருக்கும் ஜரிகைதான் பாலுமகேந்திரா, மகேந்திரன், பாலசந்தர், பாரதிராஜா போன்றவர்கள் எல்லாம். அப்படியொரு ஜரிகைக்குதான் விழா எடுக்கப் போகிறார்கள் இப்போது. இலங்கை மட்டக்களப்பு அருகே அமர்தகழி என்ற ஊரில் பிறந்தவர் பாலுமகேந்திரா. இவரது அண்டை வீட்டுக்காரர்தான் கவிஞர் காசி ஆனந்தன். பாலுமகேந்திரா இயக்கிய முதல் படமான அழியாத கோலங்கள் படத்தில் வரும் மூன்று சிறுவர்களில் ஒருவர் காசி ஆனந்தன் என்பதை இப்போது கேட்கும் போது பெரும் வியப்பாக இருக்கிறதல்லவா?
இது போன்ற பாலுமகேந்திராவை பற்றிய சின்ன சின்ன சுவாரஸ்யமான தகவல்களை சொல்லி அவருக்கு பாராட்டு திருவிழாவையும், பாட்டு திருவிழாவையும் நடத்தப் போகிறது ஸ்ரீதேவி பைன் ஆர்ட்ஸ். இந்த அமைப்பின் தலைவர் சிவசங்கர், மூத்த கலைஞர்களை தேடி தேடி சிறப்பித்துக் கொண்டி ருக்கிறார். அண்மையில் எல்.ஆர்.ஈஸ்வரிக்கு இவர் நடித்திய மாபெரும் பாட்டு திருவிழாவை பார்த்துவிட்டு தான் தனது படத்தில் பாட அழைத்தாராம் சிம்பு.
மரம் பழசாக இருந்தாலும் கிளையை புதுசாக வைத்துக் கொள்வதற்கு தேவை புத்துணர்ச்சி. அது இப்பவும் இருக்கிறது பாலுமகேந்திராவுக்கு. தமிழ்சினிமாவின் முக்கியமான மேடைகளில் எல்லாம் மனப்பூர்வமாக கலந்து கொள்கிற இந்த கலைஞனுக்கு திரையுலகத்தின் முக்கியஸ்தர்கள் கூடி நடத்தப்போகிற விழாவாக இருக்கும் இந்த பாலுமகேந்திரா ஹிட்ஸ் என்ற நிகழ்ச்சி.
இதில் பாலுமகேந்திரா படத்தில் இடம்பெற்ற பாடல்களை மட்டும் மேடையில் பாடவிருக்கிறார்கள்.
4-12-11 ஞாயிறு மாலை 6.30 மணிக்கு காமராஜர் அரங்கத்தில் இந்த விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். குருநாதரை கவுரவிக்க அவரது சிஷ்யர்களான பாலா, அறிவுமதி, சீமான், வெற்றிமாறன், சீனு ராமசாமி, சுரேஷ், சுகா போன்றவர்கள் வரவிருக்கிறார்களாம்.
04/12/2011

No comments:
Post a Comment