Sunday 27 November 2011

பாலை திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழன் உருக்கமிகு கடிதம்!

முகம் தெரியாத உறவுகளுக்கு வணக்கம்.

‘பாலை’ என்ற திரைப்படத்தை எழுதி இயக்கியவன் நான். என் பெயர் ம.செந்தமிழன்.

‘பாலை’ படத்தில் அதன் நாயகி காயாம்பூ பேசும் வசனங்களில் எனக்கு நெருக்கமானது, ‘பிழைப்போமா அழிவோமா தெரியாது… வாழ்ந்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்’ என்பது.

‘பாலை’ குழுவினர் உங்களிடம் கூற விரும்புவதும் ஏறத்தாழ இதுவே.

‘பாலை படம் தமிழினத்தில் பதிவாகுமா அழிந்து போகுமா தெரியாது… இப்படி ஒரு படம் எடுத்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்’

சில நாட்களுக்கு முன் பாலையின் முன்னோட்டக் காட்சியைப் பார்த்த இயக்குனர் பாலுமகேந்திரா, “பாலை உலகத் திரைப்பட வரலாற்றில் குறிக்கத்தக்க இந்தியப் படமாக இருக்கும். இது ஒரு தமிழ்ப் படம் என்பதில் எனக்குத் தனிப்பட்ட கர்வம் உண்டு. எனது 45 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் எந்தப் படத்தைப் பார்த்தும் ’இந்தப் படத்தை நான் இயக்கவில்லையே’ என ஆதங்கப்பட்டதில்லை. பாலை படம் என்னை அப்படி ஏங்கச் செய்கிறது’” என்று கடிதம் எழுதிக் கொடுத்தார்.

சத்தியமாக இவ்வார்த்தைகளுக்கான தகுதி எனக்கில்லை. இவை ஒரு மூத்த படைப்பாளியின் உணர்ச்சிவய வார்த்தைகள்.

முன்னோட்டக் காட்சி பார்த்த கார்ட்டூனிஸ்ட் பாலா முதல் மென்பொருள் இளம் பொறியாளர் விர்ஜினியா ஜோசபின் வரை பாலையை மனமார வாழ்த்துகிறார்கள்.

இவர்கள் அனைவரின் வேண்டுகோளும் மக்களை நோக்கி இருக்கிறது. ‘அவசியம் பாலை படத்தைப் பாருங்கள்’ என்கிறார்கள் இவர்கள்.

எனக்கும் என் குழுவினருக்குமான வேண்டுகோள் மக்களை நோக்கி இல்லை. அதற்கான சூழலும் எழவில்லை. எங்கள் வேண்டுகோள் திரையுலகை நோக்கி இருக்கிறது.

தமிழகத்தின் சரி பாதி பகுதிகளில் பாலையைத் திரையிட ஒரு திரை அரங்கு கூட கிடைக்கவில்லை. இதற்கான காரணங்கள் நிறைய. அவற்றை நான் அடுக்க விரும்பவும் இல்லை; இப்போது அதற்கான அவகாசமும் இல்லை.

ஓர் உண்மையை உரத்துச் சொல்ல விரும்புகிறேன்.

அதிகாரமும் பெரும் பணமும் இருந்தால் குப்பைகளுக்கும் திரையரங்குகள் திறக்கும். இல்லையென்றால், இயக்குனர், தயாரிப்பாளர் முகங்களில் குப்பை வீசப்படும்

இன்றைக்குத் தமிழகத்தில் உள்ள ஆயிரத்து இருநூறு திரையரங்குகளில் சரி பாதியை மிகச் சில படங்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இவை ஓடும் திரையரங்குகளுக்குச் சென்று பாருங்கள். மக்கள் கூட்டம் அலைமோதுகிறதா அல்லது இவை வெறுமனே பணபலத்தாலும் அதிகார பலத்தாலும் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளனவா என்பதை நீங்களே உணரலாம்.

ஒவ்வொரு அரங்கத்துக்கும் இலட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டு, அவ்வரங்குகளில் வேறு படங்கள் வராமல் பாதுகாக்கப்படுகின்றன.

திரைப்படங்களால் நிரம்ப வேண்டிய அவ்வரங்குகள் மிகச் சில முதலைகளின் கழிவுகளால் நாற்றமெடுத்துக் கிடக்கின்றன.

தமிழகத்தில் DAM-999 என்ற படத்துக்குக் கிடைத்த திரையரங்குகளில் 25% கூட பாலைக்குக் கிடைக்கவில்லை! முல்லைப் பெரியாறு அணையின் உரிமையை மலையாளிகளுக்குப் பிடுங்கித் தரும் படமாக இருந்தாலும் பரவாயில்லை; தமிழரின் வரலாற்றைப் பதிவு செய்யும் படத்துக்கு அரங்கு இல்லை. அழுவதைத் தவிர வேறு என்ன வழி?

இப்போது DAM-999 படம் தடை செய்யப்பட்டுவிட்டது. ஆனாலும் அந்தத் திரை அரங்குகளில் மிகச் சில கூட பாலைக்குக் கிடைக்கவில்லை. அவ்வரங்கங்கள், வேறு ஒரு Warner Brothers தயாரிப்புப் படத்துக்காகக் காத்திருக்கின்றன. ஜாக்கிசானின் 1911 படத்துக்குக் கிடைத்த அரங்குகளின் எச்சில் துளி கூட எங்களுக்குக் கிடைக்கவில்லை.

கிடைத்த அரங்குகளில் பாலை இன்று (25/11/11) வெளியாகிறது. எமக்கு அரங்கு கொடுத்த அரங்க உரிமையாளர்கள், மேலாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் இப்பணியில் தம்மை அளவுக்கு மீறி ஈடுபடுத்திக் கொண்டதால் மிக மோசமான உடல் உபாதையில் சிக்கித் தவிக்கும் என் இனிய நண்பர் ‘செங்கோட்டை’ திரைப்பட இயக்குனர் சசிகுமார் உள்ளிட்ட அனைவருக்கும் எமது மனமுருகிய நன்றிகள்!

இக்கடிதத்தை எழுதுவதால் என்ன பலன் என எனக்குப் புரியவில்லை.

ஆனால், நான் ஒரு போதும் நம்பிக்கையை விடுவதில்லை. இயற்கையின் பேராற்றலை வேண்டுகிறேன். அப்பேராற்றலின் அங்கங்களாகவும் படைப்புகளாகவும் விளங்கும் மக்களை நம்புகிறேன்.

நாங்கள் பந்தயத்தில் பரிசு கேட்கவில்லை

நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம்!

பாலை குழுவுக்காக,

ம.செந்தமிழன்

2000ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகத்தை சித்தரிக்கும் 'பாலை' திரைப்படம் வெளியீடு!

2000ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகத்தை சித்தரிக்கும் பாலை திரைப்படம் வெளியீடு!

2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்நாட்டு வரலாற்றை சித்தரிக்கும் "பாலை" திரைப்படம் நவம்பர் 25 அன்று தமிழகம் முழுவதும் வெளியாகின்றது.

இதுவரை மன்னர்களின் வரலாறே தமிழ்நாட்டின் வரலாறு என்றிருந்த தமிழ்த் திரையுலகின் மரபுகளை உடைத்தெறிந்து, முதன் முறையாக 2000ஆண்டுகளுக்கு முந்தைய எளிய தமிழ் மக்களின் வாழ்வியலைப் பற்றி சித்தரிப்பதாக இத்திரைப்படம் அமைந்துள்ளது.

இத்திரைப்படத்தை தமிழ் உணர்வாளரும், ஆய்வாளருமான திரு. ம.செந்தமிழன் இயக்கியுள்ளார். அதோடு படத்தின் பாடல்களையும் அவரே எழுதியுள்ளார். சங்க இலக்கியங்களில் உள்ள குறிப்புகளை சுமார் 6 ஆண்டுகள் ஆய்வு செய்து இத்திரைப்படத்தின் கருவை உருவாக்கியுள்ளதாக அவர் கூறுகிறார். ஏ.ஆர்.ரகுமானிடம் இசைப் பயின்ற திரு. வேத் ஷங்கர், இசையமத்துள்ள  படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

தேசிய விருது பெற்ற "போஸ்ட் மேன்" குறும்படத்தின் ஒளிப்பதிவாளரான திரு அபிநந்தன் இராமனுஜம் இப்படத்தின் ஒளிப்பதிவாளர். இவர் எல்.ஜி.பிரசாத் திரைப்பள்ளியின் மாணவர். படத்தொகுப்பாளர் திரு. ரிச்சர்ட் சென்னை திரைப்படப் பள்ளியின் முன்னாள் மாணவராவார். இவர் தொகுத்த பல படங்கள் கோவா திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளன.

தஞ்சை, புதுக்கோட்டை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. பழங்குடித் தமிழர்களான இருளர்கள், பூம்பூம் மாட்டுக்காரர்கள் பலர் இத்திரைப்படத்தில் முதல் முறையாக திரையில் அவர்களாகவே தோன்றுகின்றனர். படத்தின் கதாநாயகன் சுனில் மற்றும் கதாநாயகி ஷம்மு ஆகியோர் தம் பாத்திரத்தை சிறப்புறச் செய்திருகின்றனர். இவ்விருவரைத் தவிர்த்து, படத்தில் நடிக்கும் அனைவரும் திரையுலகம் சாராத நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திரு. நாகை தி.இரவி படத்தை தயாரித்துள்ளார்.

கடந்த மாதம் முக்கியப் பிரமுகர்களுக்காக திரையிடப்பட்ட படத்தின் விசேட காட்சியைக் கண்ட தமிழ்த் திரையுலகின் முக்கிய இயக்குநர்களான திரு. தங்கர் பச்சான், திரு. வெற்றிமாறன் ஆகியோர் படத்தை வெகுவாகப் பாராட்டினர். தமிழறிஞர் மா.பொ.சி.யின் பெயர்த்தி திருமதி. பரமேஸ்வரி, எழுத்தாளர் யுவபாரதி, பத்திரிக்கையாளர் பாரதி தம்பி உள்ளிட்ட திரளான தமிழ் உணர்வாளர்களும், எழுத்தாளர்களும், ஊடகவியலாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு திரைப்படத்தையும், படக்குழுவினரையும் பாராட்டினர்.

இயக்குநர் பாலு மகேந்திரா படக்குழுவினரை நேரில் தம் இல்லத்திற்கு அழைத்து அவர்களது முயற்சியை பாராட்டினார். தமது 45 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையில் இப்படியொரு திரைப்படத்தை இயக்கவில்லையே என்றும், இப்படம் உலக வரலாற்றுத் திரைப்படங்களின் வரிசையில் முக்கியப் படமாக அமையும் என்றும் அவர் படக்குழுவினரிடம் தெரிவித்தார்.





சென்னை சாந்தி திரையங்கு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் நவம்பர் 25 அன்று இத்திரைப்படம் வெளியாகிறது. தமிழ் மக்களின் வரலாற்றைப் பிரதிபலிக்கும் இத்திரைப்படம் குறித்து, தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பு நிலவுகின்றது

Wednesday 16 November 2011


விளம்பரப்பட இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரியின் ராபர்ட் ஆராக்கியம் அறக்கட்டளையின் சாரல் விருது வழங்கும் விழா 9.1.2010 சனிக்கிழமை மாலை சென்னை பிலிம் சேம்பரில் சுவாமிமலை மணிமாறனின் நாதஸ்வர இசைக் கச்சேரியோடு துவங்கியது.
தன் இலக்கியப் பங்களிப்பிற்காக 2009-க்கான சாரல் இலக்கிய விருதினைக் கவிஞர்.ஞானக்கூத்தன் பெற்றார். கூத்துப்பட்டறை ந. முத்துசாமி அவ்விருதினை அவருக்கு வழங்கினார்.
இந்த விருது 50,000/= (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) பணமும் கலைநயம் மிக்க சிற்பமும் சான்றிதழும் அடங்கியது. இவ் விழாவில் ஜேடி-ஜெர்ரியினுடைய நாதஸ்வர ஆவணப்பட திரைக்கதை நூலும் ஜேடி எழுதிய கனவுகளைப் பேச வந்தவன் கவிதை நூலின் இரண்டாம் பதிப்பும் வெளியிடப்பட்டது







விழாவில் கலந்து கொண்ட
இயக்குனர் பாலு மகேந்திரா
என்னுடைய பதின்வயதுகளில் முயற்சித்து தேடத்துவங்கிய இலக்கிய ரசனை இன்னும் என்னிடம் இருக்கிறது.
நான் ஒரு இலக்கிய உபாசகன். எனக்கு இலக்கியத்தில் ஏற்பட்ட தீவிரமான பிடிப்பே என் படைப்புகளில் மேன்மையைச் சேர்க்கிறது என்று நம்புகிறேன். அதனாலேயே, நான் நடத்தும் திரைப்படப் பள்ளியில் தமிழ் இலக்கியங்களைப் பாடமாகப் படிக்க வைக்கிறேன். எழுத்து ஓவியம் சிற்பம் என எல்லாப் படைப்புகளுக்கும் இன்னொரு கலையின் அனுசரனை தேவைப்படுகிறது. அதுவே ஒரு படைப்பின் உருவத்தையும் உள்ளடக்கத்தையும் செழுமையுறப்பண்ணுகிறது. நான் ஞானக்கூத்தனின் நீண்ட நாள் வாசகன். நவீன கவிதை என்பது அவரிடம் இருந்துதான் தொடங்கியிருக்கும் என்று நான் நம்புகிறேன். மிகச்சிறந்த படைப்பாளியான அவருக்குச் சாரல் விருது வழங்கப் பட்டிருப்பதில் ஒரு வாசகனாக நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

மறுபடியும்






காலையில் மற்றவர்களுக்கு முன்னால் சீக்கிரம் எழுந்து வாசல் தெளித்துக் கோலம் போட்டு அம்மாவுக்கு அடுப்படியில் உதவியாக இருந்து அப்படியே முடிந்தால் வீட்டுப்பாடம் செய்து விட்டுப் பள்ளிக்குக் கிளம்ப வேண்டும். பள்ளிக்குப் போகும் வழியில் யாரையும் முக்கியமாக ஆண்களைப் பார்க்கக் கூடாது. பேசக் கூடாது. வனொலி கேட்பது, திரைப்படம் பார்ப்பது, கண்ட கதைப் புத்தகங்களைப் படிப்பது இவற்றையெல்லாம் நல்ல பெண்கள் செய்ய மாட்டார்கள். முடிந்தால் நன்றாகப் படித்துப் பட்டம் பெறலாம். பிறகு ஆசிரியை, வங்கியில் வேலை, அரசாங்கம், அஞ்சல் துறை போன்ற இடங்களில் எழுத்தர் வேலை. மேலே படிக்க வேண்டும் என்று யோசிக்கக் கூடாது. பின்னால் அதற்கு மேலே படித்தவனைத் திருமணம் செய்து வைப்பது கல்யாணச் சந்தையில் கொஞ்சம் கஷ்டம்.

உரக்கப் பேசக் கூடாது. தலையை விரித்துப் போட்டுக் கொண்டு போகக் கூடாது. வீட்டில் விளக்கு வைப்பதற்கு முன்னால் எங்கே போனாலும் திரும்பி வந்து விட வேண்டும். வீட்டில் ஒரு பெண் இருக்கிறாளா என்று அக்கம் பக்கத்து வீட்டுக் காரர்கள் விசாரிக்கும் அளவுக்குக் கட்டி வைத்த பசு மாடு போல் பெண்ணை வளர்த்து யாரோ ஒருவனிடம் கன்னிமையைக் காப்பாற்றி ஒப்படைக்கும் வரை வயதுப் பெண்ணை வைத்திருப்பது வீட்டில் அப்பா அம்மாவுக்கு வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பது போல் இருக்கும். இவன்தான் உனக்கு நாங்கள் பார்த்திருக்கும் மாப்பிள்ளை. நல்ல சம்பந்தம். ஒரே பிள்ளை. நன்றாகப் படித்து பாங்கில் ஆஃபிஸராக இருக்கான். பிக்கல் பிடுங்கல் ஒண்ணும் கிடையாது. போற இடத்துல ஜாம் ஜாம்மென்று மகாராணி மாதிரி இருக்கலாம் என்று போட்டோவில் காட்டப்படும் முகம் மட்டும் தெரிந்த அந்த மனிதனுக்காகத் தன் வாழ் நாளை அர்ப்பணிக்கத் தயாராகும் நம் கண்மணிகள்.

மூக்குக் குத்திக் கொள்ள வேண்டும். பிறகு அவர்கள் வீட்டில் வேலைக்குப் போக வேண்டாம் என்றால் வீட்டில் இருந்து விட வேண்டும். கல்யாணம் ஆகி ஒரு வருடத்திற்குள் ஒரு குழந்தை. ரொம்ப சமர்த்துப் பெண்ணாக இருந்தால் ஆண் குழந்தை பெற்றுக் கொண்டு விட வேண்டும். இவ்வளவு விஷயங்களையும் எதற்காகச் செய்ய வேண்டும்? ஒரு ஆண் தான் ஒரு பெண்ணுக்குப் பாதுகாப்புத் தர முடியும். இந்திய சமூகத்தில் திருமணம் செய்து கொள்வது மூலம் மட்டுமே ஒரு பெண்ணுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது போன்ற நடுத்தர மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கைகளின் அஸ்திவாரம் தான் நான் தொடக்கத்தில் எழுதிய குறிப்புகளின் பொருள். கிட்டத்தட்ட இந்த விழுமியங்களின் வார்ப்பாகத்தான் நானும் வளர்ந்தேன். இவை யாவும் தேவதைக் கதைகளில் வரும் முடிவைப் போல் பிறகு இளவரசனும் இளவரசியும் இனிது வாழ்ந்தனர் என்ற முடிவை எதிர்பார்த்து எழுதப்படும் கதைகளைப் போல் அபத்தமானவை என்பதை நன்கு படித்த பெண்கள், சிந்திக்கத் தெரிந்த பெண்கள் தெரிந்து இருந்தாலும் இத்தகைய முடிவை எதிர் நோக்கும் கதைகளைப் போல் ஒரு சில எதிர்பார்ப்புகளுடன் திருமணம் என்பதைத் தவிர்க்க முடியாதவர்களாக இருக்கிறார்கள்.

செய்தித் தாளில் பெண் கற்பழிக்கப் பட்டுக் கொலை என்று படிப்பது நமக்கு ஒரு செய்தி மட்டுமே. பக்கத்து வீட்டுக்காரி எதிர் வீட்டுக்காரனுடன் ஓடிப் போய் விட்டாள் என்பது உப்புச்சப்பில்லாத நம் வாழ்க்கையில் ஒரு பரபரப்புக்குரிய சம்பவம். நெருங்கிய தோழி காதல் வசப்பட்டிருக்கிறாள் என்பது நமக்கு கிளுகிளுப்பைத் தரும் ஒரு கிசுகிசு. நமக்குப் பரிச்சயமான ஒரு நபர் தன் மனைவியை விவாகரத்து செய்து விட்டு வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார் என்பது சற்று அதிர்ச்சி தரும் நிகழ்வு. இதில் நமக்கு எதுவும் நிகழாத வரை நம்மால் இவற்றைப் பற்றி படிக்க முடியும் பேச முடியும். ஆனால் இதில் ஏதாவது ஒன்று நமக்கு நடந்தால் அதை எப்படிச் சமாளிப்போம் என்பது கற்பனைக்கு அப்பாற்பட்ட விஷயம்.

ஒரு சராசரி பெண். நடுத்தர வர்க்கத்துப் பெண்.அவள் இப்படிப்பட்ட நம்பிக்கைகளுடன் தன் திருமண வாழ்க்கையைத் தன் மனதுக்குப் பிடித்தவனுடன் தொடங்குகிறாள். இப்படியே தன் வாழ்க்கை ஒரு பாதுகாப்பான வளையத்தில் முடிந்து விடும் என்று நினைக்கிறாள். இதில் ஒரே அசாதாரண விஷயம். அந்தப் பெண்ணின் கணவன் ஒரு திரைப்பட இயக்குனர். சுற்றிலும் நிறையப் பெண்கள். அதிலும் அழகான பெண்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புகள் அதிகம் உள்ள ஒரு துறை.

‘நிழல்கள் ரவி’ திரைப்பட இயக்குனர். ரேவதி மனைவி. இயக்குனரை வெறி பிடித்தவள் போல் காதலிக்கும் நடிகை ரோகிணி. மும்முனைப் போட்டியில் யார் வெற்றி பெற்றது என்று பார்த்தால் யாருமே இல்லை. ரேவதி தன் மண வாழ்க்கையில் தோற்றுப் போனவளாக, ஆதரவற்ற தன் வேலைக்காரியின் பெண் குழந்தையைத் தன் பொறுப்பில் வளர்க்கிறாள். நடிகை ரோகிணி “நீ எனக்காக உன் பெண்டாட்டிய விட்டுட்டு வந்தே. நாளைக்கு இன்னொருத்திக்காக என்ன விட்டுட்டுப் போக மாட்டேன்னு என்ன நிச்சயம்? என்று நிழல்கள் ரவியை விட்டு விலகி விடுவாள். நிழல்கள் ரவி போக இடமில்லாமல் மீண்டும் மனைவிடம் சேர முயற்சிப்பார். நீங்க இப்படி வந்து நின்ன மாதிரி நான் வந்திருந்தா நீங்க என்ன செஞ்சிருப்பீங்க? என்று கேட்டுட தன் வாழ்க்கையைத் தொடரும் ரேவதி.

இந்தப் படத்தில் பெண்ணீயம் என்று பெரிதாகப் பேசப்படவில்லை என்றாலும் சமூகத்தில் இரு தளங்களில் இருக்கும் இரு பெண்கள். ஆனால் இருவருமே ஆண்களால் ஏமாற்றப்படுகிறார்கள். ஆனால் ஆண்கள் இல்லாமல் வாழ முடியும் என்ற முடிவுக்கு வருகிறார்கள். ரேவதி, ரோகிணி இருவருமே நடிப்பில் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருப்பார்கள். ரேவதி ஒரு பார்ட்டியில் தன் கணவனையும் அவனுடன் ரோகிணியையும் பார்த்து விட்டுக் குடித்து விட்டு உளருவது, ரோகிணியிடம் போனில் தன் புருஷனை விட்டுத் தரும்படி கெஞ்சுவது என்று உணர்ச்சிப் பிழம்பாக அசத்தியிருப்பார். ரோகிணி மன அழுத்த நோயாளியாக, நிழல்கள் ரவியைப் பாடாய் படுத்தியெடுப்பார். ‘அர்த்’ என்ற ஹிந்தி படத்தைத் தழுவி எடுத்த படம். தழுவி என்று சொல்லமுடியாது. அப்படியே அதைத் தமிழில் எடுத்தார் என்று சொல்லலாம். ஹிந்தியில் ஷப்னா ஆஸ்மி, ஸ்மிதா பாட்டில், குல்பூஷன் கர்பந்தா நடித்த படம். மஹேஷ் பட் என்ற இயக்குனர் தன் சொந்த வாழ்க்கை அனுபவங்களை அப்படியே பதிவு செய்தார் என்று அவரே சொல்லியிருக்கிறார். அவர் பர்வீன்பாபி என்ற நடிகையுடன் இருந்த போது அவர் மனைவிக்கும் பர்வீன்பாபிக்கும் நடந்த போராட்டத்தை அப்படியே திரையில் காட்டினார்.

நிஜ வாழ்க்கையிலும் பர்வீன் பாபி மன நிலை பிழன்றவராகக் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் இருந்தார். 2005 ஆம் ஆண்டு நீரிழிவு நோய் முற்றிய நிலையில் யாருமற்ற அனாதையாகத் தன் வீட்டில் இறந்து கிடந்தார். அவர் இறந்த பிறகு மஹேஷ் பட் மீண்டும் ‘வொ லம்ஹே’ (அந்த கணங்கள்) என்ற திரைப்படத்தை எடுத்தார். அதுதான் பர்வீன்பாபியின் உண்மையான கதை என்று சொல்கிறார். அதை மறுக்கவோ, மறைக்கவோ அப்போது பர்வீன்பாபி இல்லை.

மகேஷ் பட், பாலு மகேந்திரா என்ற இரு இயக்குனர்களும் அந்த அப்பாவி மனைவி படும் பாட்டை ஒரு குற்ற உணர்வோடு பதிவு செய்திருக்கிறார்கள். பாலு மகேந்திரா தன் கதாநாயகியரோடு கொண்டிருந்த உறவை அகிலாம்மா என்று வாஞ்சையோடு அழைக்கப்படும் திருமதி பாலு மகேந்திரா எந்த மன நிலையில் ஏற்றுக் கொண்டார் என்பது பாலு மகேந்திராவுக்கு மட்டும் தான் தெரியும். மகேஷ் பட்டும் பர்வீன்பாபி மட்டுமல்லாது தன் இரண்டாவது மனைவி என்று பல பெண்களோடு பழகிய இயக்குனர். திரைப்படம் என்ற ஒன்று தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இயக்குனர்கள், நடிகைகள் காதல் என்பது இயல்பான ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. ஹாலிவுட், பாலிவுட் என்ற பேதமில்லாமல் இயக்குனர்கள் தன் திரைப்படத்தில் தொடர்ந்து ஒரு நடிகைக்கு வாய்ப்புத் தருவது, அந்த நடிகைக்கு நண்பன், பாதுகாவலன், காதலன், கணவன் என்று அவதாரமெடுப்பதை இன்று வரை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதில் முரண்பாடான ஒன்று ஹிந்தித் திரைப்பட உலகில் வித்தியாசமாகச் சிந்திக்கும் அறிவுஜீவிகள் என்று கருதப்பட்ட ஷப்னா ஆஸ்மி, ஸ்மிதா பாட்டில் இருவரும் இந்தத் திரைப்படத்தில் சிறப்பாக நடித்துப் பல விருதுகள் பெற்றனர். ஆனால் இருவருமே இரண்டாவது மனைவியாக மூத்த மனையிவிடமிருந்து தங்கள் துணவர்களைக் கவர்ந்து கொண்டவர்கள். ஸ்மிதா பாட்டில் ராஜ் பாபரோடு வாழ்ந்து ஒரு குழந்தை பிறந்ததும் உடல் நலமில்லாமல் இறந்து போனார். ராஜ் பாபர் மீண்டும் தன் முதல் மனைவியிடம் சரணடைந்து அந்தப் பெண்மணி கணவனையும் மன்னித்து, ஸ்மிதா பாட்டிலின் குழந்தையையும் வளர்த்தார்.

நிராதரவாக நிற்கும் ரேவதிக்கு உதவி செய்யும் நல்ல நண்பனாக வரும் அரவிந்த் சாமி. அவர் ரேவதியிடம் தன் காதலைச் சொல்லியதும் அதை அவர் ஏன் மறுக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. ஆண்கள் எத்தனை முறை இடறினாலும் அதைப் பெருந்தன்மையோடு ஏற்கும் சமூகம், பெண் மறுமணம் செய்து கொள்ள நினைப்பதைக் கூடத் தவிர்க்கிறது. சாதாரண நடுத்தர வர்க்கத்துப் பெண்ணான ரேவதி நிழல்கள் ரவி மறுபடியும் மனம் மாறி வரும் போது ஏற்க மறுப்பது மட்டுமே அவள் பெண்ணீயத்தின் தொடக்கம். பிறகு மீண்டும் அவளது புது வாழ்வு ஒரு ஏழைப் பெண்ணின் தாயாகத் தொடருவது அவளை உன்னத நிலைக்குக் கொண்டு செல்வது. மறுமணம் செய்து கொண்டால் அந்த அவள் அந்த உன்னத நிலையிலிருந்து தாழ்ந்து விடுவாள் என்று எந்த ஆண் துணையும் எனக்கு வேண்டாம் என்று முடிவெடுக்கிறாளோ என்று நினைக்கத் தோன்றியது.

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் மீண்டும் ஒரு கிராம அலை அடித்து பிரபு, கார்த்திக், சத்தியராஜ், சரத்குமார் போன்ற கதாநாயகர்கள் கிராம ராஜன்களாக வலம் வந்து, தாலி செண்டிமெண்ட், கோவில் கொடை, தீமிதி, மஞ்சள் புடவை என்று குலவையிட்டுக் கொண்டிருந்த போது ‘மறுபடியும்’ திரைப்படம் ஒரு யதார்த்தத் திரைப்படத்தைப் பார்த்த திருப்தியை ஏற்படுத்தியது.

‘மறுபடியும்’ மறுபடியும் பார்க்க முடிந்தால், இந்தப் பின் கதைகளுடன் பார்த்தால் கோவலன் மாதவியிடம் இருந்து விட்டால் ஏது சிலப்பதிகாரம்? என்று நினைக்கத் தோன்றும்.

"அவள் பெயர் தமிழரசி" திரைப்பட இசை/முன்னோட்ட வெளியீட்டு விழா

அவள் பெயர் தமிழரசி" விழா இனிதே நடந்தது

"அவள் பெயர் தமிழரசி" திரைப்பட இசை/முன்னோட்ட வெளியீட்டு விழா


விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.

தயாரிப்பாளர் தனஞ்சயன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

* முதலில் படத்திலிருந்து பாடல்கள் திரையிடப்பட்டன.

நீ ஒத்த சொல்லு சொல்லு...
குஜு குஜு கூட்சு வண்டி
வடக்கா..தெக்கா

* பின்னர் முன்னோட்டம் திரையிடப்பட்டது

பாலுமகேந்திரா வாழ்த்துரை

"இயக்குனர் இலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவன். என்னை மாதம் ஒரு முறையேனும் சந்தித்து தன் சினிமா ரசனையையும், வாசிப்பையும் பகிர்ந்துகொள்வான்.

நல்ல சினிமா வாழ்க்கைப் பதிவிலிருந்து எடுக்கப்படவேண்டும். இவன் காதலின் அழகியலை மட்டும் திரையில் பதிவு செய்ய மாட்டான். மனித உணர்வுகளையும் பதிவு செய்வான். எதிர்காலத்தில் சாதனை இயக்குனர்களின் மத்தியில் இவனும் வீற்றிருப்பான்.

இந்த படத்தின் கதையை என்னிடம் சொன்னான். திரைக்கதையாக்கச்சொன்னேன். பிறகொருநாள் படத்தை ஒரு குறும்படமாக எடுத்து வந்து என்னை ஆச்சரியப் படுத்தினான். அதன் தரத்தில் நான் மயங்கிப் போனேன்.

அந்த குறும்படத்தில் நடித்த பெண்ணையும் ஒளிப்பதிவாளரையும் இதை திரைப்படமாக எடுக்கும்போதும் பயன்படுத்த வேண்டும் என்று சொன்னேன். இன்றைக்கு பார்த்தால் அவர்கள் இருவரும் இந்த படத்தில் இருக்கிறார்கள் மகிழ்ச்சி".


இயக்குனர் மகேந்திரன்: "இந்த படத்தின் பாடல்களைப் பார்க்கும்போது தி.ஜா, கி.ரா வின் நாவல்களில் வரும் ஏதோ ஒரு கிராமத்தைப் பார்த்த நிறைவு ஏற்ப்படுகிறது.







நான் பொது மேடைகளில் அதிகம் காணப்படுவதில்லை என்று எல்லோரும் சொல்கிறார்கள். நான் உங்கள் எல்லோரையும் தூரத்தில் இருந்துகொண்டே ரசிக்கிறேன், நேசிக்கிறேன். உங்கள் எல்லோரையும் எனக்குப் பிடிக்கும். அருகில் இருந்து கொண்டே மனத்தால் விலகி இருப்பதை விட, தூரத்தில் இருந்து மனத்தால் நெருங்கி இருப்பது நல்லதுதானே..?

நடிகர் பார்த்திபன்: உதவி இயக்குனர்களின் பெயரை அழைப்பிதழில் போட்ட முதல் திரைப்படம் இதுதான்.

இயக்குனர் தங்கர் பச்சான்: ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு திரைக்கதை முக்கியம். முழு படத்தின் திரைக்கதையும் தீர்மானிக்கப்பட்ட பின்னர் திரைப்படம் தொடங்கப் படுமானால் நல்ல தரமான படங்கள் கிடைக்கும்.


பாலு மகேந்திரா திரைப்பட இசை ஒலிப் பேழையை வெளியிட ஸக்சேனா பெற்றுக் கொண்டார்.






இயக்குனர்கள் அமீர், சசிகுமார், வசந்த், மிஷ்கின், விநியோகஸ்தர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், , நடிகர் பரத், உள்ளிட்டோர் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

படக்குழுவினர் இசையமைப்பளர் விஜய் ஆண்டனி, இயக்குனர் மீராகதிரவன், நடிகர் ஜெய், அறிமுக நடிகை நந்தகி, படத்தின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

தயாரிப்பாளர் லலிதா நன்றி கூறினார்

2011 புத்தகக் காட்சி - ஒளிப்படங்கள்

     2011 புத்தகக் காட்சியில் வம்சி அரங்கில் எழுத்தாளர் ஷைலஜா, இயக்குனர் பாலு மகேந்திரா, எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், எழுத்தாளர் அழகியப் பெரியவன், எழுத்தாளர் பவா செல்லத்துரை
2011 புத்தகக் காட்சியில் வம்சி அரங்கில் ஜான் ஆபிரகாம் புத்தக வெளியீட்டு விழாவில் இயக்குனர் பாலு மகேந்திரா வெளியிட எழுத்தாளர் மிஸ்கின் பெற்றுக் கொள்கிறார். உடன் நூலாசிரியர் ஆர்.ஆர். சீனிவாசன்
      2011 புத்தகக் காட்சியில் வம்சி அரங்கில் ஜான் ஆபிரகாம் புத்தக வெளியீட்டு விழாவில் இயக்குனர் பாலு மகேந்திரா வெளியிட எழுத்தாளர் மிஸ்கின் பெற்றுக் கொள்கிறார். உடன் நூலாசிரியர் ஆர்.ஆர். சீனிவாசன், பவா செல்லத்துரை, தேர்ந்த குட்டி கதைசொல்லி மானசி.
அரங்கில், எழுத்தாளர் ஷைலஜா, இயக்குனர் பாலு மகேந்திரா
அரங்கில், எழுத்தாளர் ஷைலஜா, இயக்குனர் பாலு மகேந்திரா, எழுத்தாளர் மிஸ்கின், இசை விமர்சிகர் ஷாஜி, எழுத்தாளர் பவா செல்லத்துரை

திரைப்படம் காலத்தின் ஆவண குறிப்பு

உலகத்தின் முதல் படம் திரையிடப்படுகிறது. ரயில் வண்டி திரையில் ஓடுகிறது,எங்கு தம் மீது மோதிவிடுமோ என்று அனைவரும் சிதறுகின்றனர். ஆம் திரைப்படம் மாய பிம்பம்,அது தனி உலகம்....மாய வலையில் கட்டிப்போடும் உலகம்.கண்முன்னே நடப்பது உண்மை என்ற பிம்பத்தை ஏற்படுத்தும் உலகம்.அந்த உலகத்தின் கடவுள் இயக்குனர். ஆம் திரைப்பட உலகத்தை இயக்குபவர்.அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது .கதாப்பாத்திரங்களை படைக்கிறார். ஒளி ஒலி கோர்க்கிறார். படச்சுருளில் ஒரு கவிதை எழுதுகிறார். தான் நினைக்கும் காட்சிகளை படம் பிடிக்கிறார்.காதல் சொல்கிறார்,நட்பு சொல்கிறார்.முதல் பிரேம் முதல் வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச் செல்கிறார்.
ஆம் இயக்குனர் ஒரு ஆளுமை .மண்ணை பதிவு செய்பவனே மனதில் பதிவாகிறான்.
மஜீத் முதல் பாரதிராஜா வரை மண்ணை பதிவு செய்தவர்களே.திரைப்படம் காலத்தின் பதிவு, 1982 மதுரை சுற்றி கிராமம் எப்படி இருந்தது என்று தெரிய வேணுமா பாருங்கள் எங்கள் பாரதிராஜாவை..பாரதிராஜா படங்களில் கிராம இலக்கியத்தை காணலாம்,கிராம வழக்கு மொழிகளை காணலாம் . பல்வேறு பழமொழிகள் கிராம வழக்கங்களை அழுத்தமாய் பதிவு செய்தவர் பாரதிராஜா.ஈரான் பற்றி சுவடு வேண்டுமா பாருங்கள் மஜீத் படங்கள் ஈரான் குழந்தைகளின் அக வெளிப்பாடு.

இயக்குனர் என்பவர் ஒரு ஆளுமை.இயக்குனரின் மனம் எவ்வளவு ஆழமாய் உள்ளதோ அதைப் பொருத்து அவன் படைப்பு வெளிப்படும். சேரனின் படங்களில் அவர் மனித உறவுகளை எவ்வளவு மதிப்பவர் என்று வெளிப்படும்.ஆட்டோகிராப் படத்தில் அவர் தொலைந்த வாழ்க்கையை அசை போடுவார். பழைய காதலிகளை
சந்திப்பார் அது ஒரு உணர்வுப்பூர்வமான கவிதை. பாண்டவர் பூமி பார்த்து சற்று குலுங்கித் தான் போனேன்.தொலைந்த வாழ்க்கையை சேரனின் படச்சுருள் தேடிக்கொண்டே இருக்கிறது. பாலா தொலைந்த ,யாருமே கண்டு கொள்ளாத மனிதர்களையே காட்டுகிறார். ஒரு படம் இயக்குனரின் அக வெளிப்பாடு, அன்புக்காக ஏங்கித் துடிக்கும் இயக்குனர் அதை படைப்பாய்
வெளிப்படுத்துகிறார்.பாலாவின் படங்கள் உலகப் படங்கள் பார்ப்பது போல மனதை உலுக்கி விடும்.மன ரீதியான அதிக வலிகளை கொண்டவரே அப்படிப்பட்ட படைப்பை படைக்க முடியும்.

செல்வராகவனின் படங்கள் மனதிற்கு மிக நெருக்கமாக இருக்கிறது. இவர் படங்களும் பாலாவை போலவே இருக்கின்றன.மனதை போட்டு ஒரு வழி செய்கின்றன."நினைத்து நினைத்து " பாட்டு பார்க்கும் பொழுது திரையரங்கில் எத்தனை பேர் அழுதிருப்பார்கள்
என்பது அப்பொழுது விளக்கை போட்டு இருந்தால் தெரிந்திருக்கும் . காதலி இறக்கும் போது ஒரு வெறுமை இருக்குமே அதை பதிவு செய்திருப்பார் செல்வா. இவர்களின் வேர் ஆதர்ஷ இயக்குனர் பாலு மகேந்திரா.

ஒரு பெண் எப்படி தன்னை எப்படி உலுக்குகிறாள் என்பதை சொன்ன படம் 'மூன்றாம் பிறை'.
முன்றாம் பிறை படத்தை ஷோபாவின் நீட்சியாக பார்க்கலாம்."கனவு காணும்" பாடல் காட்சி அமைப்பு போதும் அவர் எவ்வளவு பக்குவப்பட்டவர் என்று. அதனால் தான் என்னவோ அவர் வியாபாரத்திலே வெற்றி பெற வில்லை. உங்களால் வியாபாரத்தில் வெற்றி அடைய முடியாது என்ற போது எடுத்த படம் "நீங்கள் கேட்டவை".....அதாவது ரசிகர்களுக்காக எடுத்த படம் என்றே சொல்லலாம்.ஆட்டோகிராப் படத்தின் தந்தை 'அழியாத கோலங்கள்...'
அவரின் வாரிசுகள் இன்று கலக்குகிறார்கள்........பாலா ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் .ராம் கற்றது தமிழ் .ஆளுமை என்றால் அது பாலு மகேந்திரா....தலைவருக்கு பிடித்த இடம் கேத்தி.

ஒரு சிறந்த இயக்குனர் தனிமையாகவே இருக்கிறான்.அவன் படைப்பு பேசப்படுகிறது,அகத் தனிமையாக இருக்கிறான்.திரையில் ஏதோ தேடிக்கொண்டே இருக்கிறான்.அவன் எவ்வளவுக்கு எவ்வளவு மனதில் அடி வாங்குகிறானோ,அந்த அளவு அவன் படைப்பு ஆழமாய் வருகிறது. ஒரு தொலைந்தவனின் ஆழமான பதிவாய் வெயில் படம் இருக்கிறது.அது வசந்த பாலனின்
கதை. ஆம் உலகத்தை சந்தோஷ படுத்தி மௌனமாய் அழுது கொண்டே இருக்கிறான் என் இயக்குனர்.அவன் தனிமைக்கு வடிகாலாய் இருக்கிறது திரைப்படம்.

காலத்தை இயக்குனர் டைரியில் பதிவு செய்வதை போல பதிவு செய்து கொண்டே இருக்கிறான்.ஈரான் மண்ணின் வாசனை மஜீத் படங்களில் அடிக்கிறது.தேனியின் செம்மண் பாரதிராஜா படங்களில் படிந்து இருக்கிறது.எந்த ஊர் மண் என்றாலும்,மண்ணின் வெளிப்பாடு இயக்குனர்.திரைப்படம் காலத்தின் ஆவண குறிப்பு.குறிப்பு எடுத்துக்கொண்டே இருக்கிறான் இயக்குனர்.
தமிழ் இளைஞன் தோற்கக் கூடாது என்பதற்காக ஓட்டுப் போட்டேன் பாலு மகேந்திரா !

February 25, 2009



தமிழ் இளைஞன் தோற்கக் கூடாது என்பதற்காக தேசிய விருது தேர்வில் ரஹ்மானுக்கு ஓட்டுப் போட்டேன் என்றார் இயக்குனர் பாலு மகேந்திரா.

ஸ்ரீகாந்த், நமீதா, விவேக் நடிப்பில் ராஜேஸ்வர் இயக்கியுள்ள படம் “இந்திர விழா’. இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இவ் விழாவில் இயக்குநர் பாலு மகேந்திரா பேசியதாவது:

ஏ.ஆர்.ரஹ்மானின் “ரோஜா’வும், இளையராஜாவின் “தேவர் மகனும்’ ஒரே நேரத்தில் தேசிய விருது தேர்வுக்கு வந்தன. அப்போது என் தலைமையில்தான் தேர்வுக் குழு செயல்பட்டது.

இரண்டு படங்களையும் பார்த்தேன், நன்றாக இருந்தது. ஓட்டெடுப்புக்கு பின் இளையராஜாவுக்கு 7 வாக்குகளும், ரஹ்மானுக்கு 7 வாக்குகளும் கிடைத்திருந்தன. தேர்வுக் குழுவின் தலைவர் என்ற முறையில் என் ஓட்டை பொறுத்தே ரஹ்மானா, இளையராஜாவா என உறுதி செய்யப்பட வேண்டிய நிலை.

இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறேன் “என் கடவுளே எனக்கு துணை புரிந்து அருள்வாய்’ என இறைவனை வேண்டி கொண்டு, முதல் படத்திலேயே இவ்வளவு பெரிய இடத்துக்கு வந்த தமிழ் இளைஞன் தோற்று விடக் கூடாது என்பதற்காக என்னுடைய ஓட்டை ரஹ்மானுக்கு கொடுத்திருந்தேன்.

விருது வழங்கும் விழாவில் மணிரத்னம் ரஹ்மானை “குட்டி பையா’ என அழைத்தது இன்னும் ஞாபகமிருக்கிறது. எனக்கு அந்த நிகழ்வு பூரிப்பை ஏற்படுத்தியது. இப்போது ரஹ்மானின் ஆஸ்கர் காட்சிகளை டி.வி.யில் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

ரஹ்மானின் “சின்ன சின்ன ஆசை’ எனக்கு மிகவும் பிடித்த பாடலாகும் என்றார்.

வைரமுத்து: தமிழ் சினிமா, இந்திய சினிமாவுக்கு தலைமை தாங்கவும் இந்திய சினிமா, உலக சினிமாவுக்கு தலைமை தாங்கவும் கூடிய நிலை ரஹ்மானால் வந்திருக்கிறது.

இந்திய கலாசாரத்தை, தமிழ் கலாசாரத்தை, சோமாலியர்களின் பஞ்சத்தை படமாக எடுங்கள். ஏன் இந்தியர்களிடம் வாழ்க்கை இல்லையா, தமிழர்களிடம் கலாசாரம் இல்லையா? அதையெல்லாம் சினிமாவாக எடுங்கள். அதற்கான ராஜ கதவைத்தான் ரஹ்மான் நமக்குத் திறந்து விட்டிருக்கிறார் என்றார்

தமிழ் ஸ்டுடியோ விருது விழாவில் பாலு மகேந்திரா