விளம்பரப்பட இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரியின் ராபர்ட் ஆராக்கியம் அறக்கட்டளையின் சாரல் விருது வழங்கும் விழா 9.1.2010 சனிக்கிழமை மாலை சென்னை பிலிம் சேம்பரில் சுவாமிமலை மணிமாறனின் நாதஸ்வர இசைக் கச்சேரியோடு துவங்கியது.
தன் இலக்கியப் பங்களிப்பிற்காக 2009-க்கான சாரல் இலக்கிய விருதினைக் கவிஞர்.ஞானக்கூத்தன் பெற்றார். கூத்துப்பட்டறை ந. முத்துசாமி அவ்விருதினை அவருக்கு வழங்கினார்.
இந்த விருது 50,000/= (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) பணமும் கலைநயம் மிக்க சிற்பமும் சான்றிதழும் அடங்கியது. இவ் விழாவில் ஜேடி-ஜெர்ரியினுடைய நாதஸ்வர ஆவணப்பட திரைக்கதை நூலும் ஜேடி எழுதிய கனவுகளைப் பேச வந்தவன் கவிதை நூலின் இரண்டாம் பதிப்பும் வெளியிடப்பட்டது
இயக்குனர் பாலு மகேந்திரா
என்னுடைய பதின்வயதுகளில் முயற்சித்து தேடத்துவங்கிய இலக்கிய ரசனை இன்னும் என்னிடம் இருக்கிறது.
நான் ஒரு இலக்கிய உபாசகன். எனக்கு இலக்கியத்தில் ஏற்பட்ட தீவிரமான பிடிப்பே என் படைப்புகளில் மேன்மையைச் சேர்க்கிறது என்று நம்புகிறேன். அதனாலேயே, நான் நடத்தும் திரைப்படப் பள்ளியில் தமிழ் இலக்கியங்களைப் பாடமாகப் படிக்க வைக்கிறேன். எழுத்து ஓவியம் சிற்பம் என எல்லாப் படைப்புகளுக்கும் இன்னொரு கலையின் அனுசரனை தேவைப்படுகிறது. அதுவே ஒரு படைப்பின் உருவத்தையும் உள்ளடக்கத்தையும் செழுமையுறப்பண்ணுகிறது. நான் ஞானக்கூத்தனின் நீண்ட நாள் வாசகன். நவீன கவிதை என்பது அவரிடம் இருந்துதான் தொடங்கியிருக்கும் என்று நான் நம்புகிறேன். மிகச்சிறந்த படைப்பாளியான அவருக்குச் சாரல் விருது வழங்கப் பட்டிருப்பதில் ஒரு வாசகனாக நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

No comments:
Post a Comment