Wednesday, 16 November 2011

படப்பெட்டி இதழ் வெளியீட்டு விழா

மாலை நேர சந்திப்புகள் எப்பொழுதும் இனிய நினைவலைகளின் வசீகரத்தை பரவசப்படுத்தகூடியது. அண்ணாசாலை போன்ற வீதிகளில் எப்போதுமே இருக்ககூடிய திசையறியா மனிதர்களும்,ஏக போக வாழ்க்கையினதும், இயந்திர தனமான வாழ்வின் அடையாளமாய் இன்றும் கவனிக்கப்படும் கட்டிடங்களும், மாலை நேரங்களின் அமைதியை குழைத்து புகையையும், கரியையும் பூசிச் செல்லும் வண்டிகளும் நிறைந்த அந்த வீதியை முற்றிலும் தனிமைப்படுத்தி இருக்ககூடிய "book point" என்று அறியப்படுகின்ற புத்தகசாலையினுள் சினிமாவை காதலிக்க கூடியவர்களும், நல்ல விமர்சகர்களும், சிறந்த ஆவணப்பட இயக்குனர்களும், பல மாணவர்களும் நிறைந்து தங்களின் ஆளுமைகளை மறந்து "நல்ல சினிமா" என்ற ஒற்றை வார்த்தைகளுக்குள் அமிழ்ந்து அந்த நேர்மையான இதழின் உள் நெகிழ்ந்திருந்தனர். நிகழ்வு ஆரம்பிக்கிறது.


"படப்பெட்டி" இதழ் வெளியீட்டு விழா. நிகழ்விற்கு கனம் தங்கிய இயக்குனர் பாலு மகேந்திரா அவர்களும்,முனைவர் அரசு அவர்களும்,ஓவியர் ட்ராட்ஸ்கி மருது அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக வ்ந்திருந்தனர். இதழைப் பற்றிய அறிமுகம் சார்ந்த பேச்சும், இயக்குனர் பாலு மகேந்திராவைப்பற்றிய அறிமுகத்தின் பின் பாலு மகேந்திரா சிறப்புரையாற்றினார். பாலு மகேந்திரா அவர்களின் பேச்சிலிருந்து.


இயக்குனர் பாலு மகேந்திரா

படப்பெட்டி இதழ் சிறிது காலம் வெளிவந்தது. பின்னான காலங்களில் நிறுத்தப்பட்டது. இந்த அட்டையில் உள்ள எம்.பி.சீனிவாசன் என்னுடைய நண்பர், இந்த கலைஞன் இடதுசாரி சிந்தனையுள்ளவன். எனக்கு மிகவும் நெருக்கமானவன், இதைப் பார்த்தவுடனேயே எனக்கு நெகிழ்வாய் போய்விட்டது. இவரின் தாக்கமும், சிந்தனையும் இன்று வரை என்னுள் உள்ளது. இந்த பத்திரிக்கையை வெளிக்கொணர பாடுபட்டு உழைத்த அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள், நன்றிகள். எனக்கொரு சந்தேகம். அதாவது மக்களால், மக்களுக்கு,மக்களிடமிருந்து சினிமா எடுக்கிறோம். ஆனால் ஒரு சராசரி பார்வையாளனுக்கு இந்த கட்டுரை எப்படி இருக்கும்?. இதிலுள்ள கட்டுரைகள் ஆனந்த் விகடனில் வெளிவந்த செழியனின் கட்டுரைகளில் இருந்து வேறுபடுகிறது. இந்த கட்டுரைகள் ஒரு ஆய்வுசார் மாணவனுக்குரியது. இதை நான் நுணுக்கமாக படிக்கவேண்டியிருக்கிறது. இதை இரண்டுதரம் படித்தால் மட்டுமே புரிந்து கொள்ளகூடியதாய் இருக்கிறது. இது யாருக்கு என்பதுதான் என் கேள்வி? அதனால்தான் நான் இங்கு செழியனின் கட்டுரையை குறிப்பிடவேண்டியிருக்கிறது. அந்த கட்டுரைகளின் மூலம் உலக சினிமாக்களை தேடிப்பிடித்து பார்த்த சராசரிமனிதர்கள் ஏராளம். அதற்கு பின்னான காலங்களில் உலக சினிமா DVD விற்பனை அளவு அதிகரித்துள்ளது. அந்த கட்டுரைகளின் இலகுத்தன்மையே இதற்கு காரணம்.


பள்ளிகளில் சினிமா ரசனை என்பதை குழந்தைகள் பாடமாக வைக்க வேண்டுமென பல இடங்களில் வலியுறுத்திக்கொண்டே இருக்கிறேன்.அன்றைய முதல்வர் எண்பத்தெட்டாவது பிறந்தநாள் விழாவின்போது அவரின் முன்னிலையில் கூறினேன். இது வரைக்கும் எதுவும் நடந்தததாய் தெரியவில்லை. மீண்டும் மீண்டும் இதைக் கூறி மனப்பாடம் ஆகிப் போனதுதான் மிச்சம். தயவுசெய்து இந்த ரசனை என்பதை குழந்தைகள் பாடத்திட்டத்தில் அனுமதியுங்கள். நீங்கள் கற்பிக்ககூடிய சரித்திரம், பூகோளம் ஆகிய பாடங்கள் அவர்களின் வாழ்வியலோடு எங்கே சந்தித்துக் கொள்கிறது.

சினிமா என்பது இந்த வாழ்வியல் ஒவ்வொன்றோடும் ஒவ்வொரு புள்ளியிலும் இணைந்துதான் செயல் படுகிறது. பாடல்களும், ஓவியங்களும், பேச்சுமொழி, இவை அனைத்துமே ஒன்றோடொன்று இணைந்தே செயல்படுகிறது. அரசியலில் அண்ணா தொடங்கி ஜெயலலிதா வரை அனைத்துமே சினிமா என்ற மொழியிலிருந்தே வந்தவர்கள். இடையில் வந்தவர்களை கோமாளிகளாக மட்டுமே கொள்ளலாம். தமிழ் படைப்புகளை பாதுகாத்து வைக்ககூடிய சேமிப்பகம் எதுவுமே நம்மிடம் இல்லை. நான் நேரடியாக பாதிக்கப்பட்டவன். என் "வீடு, சந்தியா ராகம்" ஆகிய படங்களின் நகல் என்னிடம் இல்லை. நான் என்ன செய்ய முடியும். புனே சேமிப்பகத்தை பி.கே.நாயர் என்பர் உருவாக்கினார். ஆனால் இங்கு இல்லை. நான் பல முறை நினைத்ததுண்டு ஏன் இங்கு அந்த நாயர் இல்லை என. நம் அன்றாட வாழ்வினில் அரசியல் என்பது முற்று முழுதாய் பதிந்து போயுள்ளது. ஒரு நடிகனின் பேச்சு ஒரு அரசியல் விளைவையே மாற்றிப் போட்டது. சினிமா என்பது என்ன? அது என்ன கெட்டவார்த்தையா? இல்லை. அதுஒரு அழகிய வார்த்தை. நாம்தான் அதை கெட்டதாக்கி வைத்திருக்கிறோம். நல்ல சினிமா வேண்டும் என்றும், நல்ல சினிமா பார்க்க வேண்டுமென்றும் ஆசைப்படுகிறோம். ஆனால் அதற்காக நாம் என்ன செய்யவேண்டும் என்பது நமக்கு புரியவில்லை. சினிமாவை பள்ளிகளில் பயிற்றுவியுங்கள் என்றால் என்ன அர்த்தம்? நான் சினிமா எடுக்க கற்றுத்தர சொல்கிறேனா? இல்லவே இல்லை. சினிமா ரசனை என்றால் என்னவென்பதை அறிமுகப்படுத்துங்கள். அதைத்தான் வேண்டுகிறேன். நச்சு சினிமா என்றால் என்ன? நல்ல சினிமா என்றால் என்னவென்பதை அப்பொழுதுதான் அவர்களால் புரிந்துகொள்ளமுடியும். சினிமா நயம் என்பது முக்கியம். நான் படம் பார்க்க சுமார் 30 km வரை போனதாய் ஞாபகம். ஆனால் இபோழுது சிடிசன் கேன் என்ற திரைப்படம் வெறும் காய்கறிகளுக்கு மத்தியில் ஒரு சுமாரான பல்பொருள் அங்காடியில் கிடைக்கிறது. எவ்வளவு ஆரோக்கியமானது இந்த விஷயம். சினிமாவின் மொழியையும், அதன் இலக்கியத்தையும் என்னால் கற்றுத்தரமுடியும் என் மாணவர்களுக்கு. நீ என்னருகில் இருக்கும் வரையும் தான் என்னால் கற்றுத்தர முடியும். நீ என்னருகில் இருக்கும் வரை நல்ல சினிமாவுக்கான பாதையை நோக்கி உந்தி தள்ளுவேன். ஆனால் வெளியே சென்று கூட்டத்தோடு கோவிந்தா என்றால் நான் என்ன செய்யமுடியும். நீ ஒரு படைப்பை உருவாக்குகிறாய் நான் சில வேளைகளில் உனக்கு முத்தமும் தரலாம், செருப்பாலும் அடிக்கலாம். என்னிடம் நீ என்னிடம் இருக்கும் வரை நல்ல சினிமாவுக்கான நமது பயணம் தொடரும். நான் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும்போது நான் கற்றுக்கொள்கிறேன். என்னை புதுப்பித்துக்கொள்கிறேன்.

இலக்கியம் எப்படி சினிமாவாய் மாறுகிறது. அது ஆத்மாவா? இல்லை உருவமா? சிறுகதை என்னுள் ஏற்ப்படுத்திய அதிர்வு ஆத்மாவா? உருவமா?.அழிவது உடல்தான். ஆனால் ஆத்மா பிறந்துகொண்டே இருக்கும். ஒரு பிறவியில் சிறுகதையாய் இருப்பது, அடுத்த பிறவியில் குறும்படமாய் மாறுகிறது. ஒரு பிறவியில் பாட்டியின் கழுத்தில் இருக்ககூடிய காசுமாலை அடுத்த பிறவியில் அவளின் பேத்தியின் கழுத்தில் புதிய வகை நெக்ளசாக இருக்கிறது. ஆனால் தங்கம் அதே தங்கம்தான். வடிவம் மட்டும்தான் மாறுகிறது. விசுவாசம் என்பதில் நம்பிக்கையில்லாதவன் நான். நான் என் மனைவிக்கே விசுவாசமானவனாய் இருந்ததில்லை. ஏன் நான் எழுத்தாளனுக்கு விசுவாசமானவாய் இருக்க வேண்டும். சம்பந்தமேயில்லை. அவன் வேறு நான் வேறு. இந்த சினிமா என்ற பதத்தை மக்கள் புரிந்துகொண்டாலேயே எனக்கு சந்தோசம்தான். செழியனின் கட்டுரையை வெளியிட்ட ஆனந்தவிகடனுக்கு நன்றி. ஒரு ஜனரஞ்சக பத்திரிகையில் இது சார்ந்த கட்டுரைகள் வெளிவரவேண்டும். எதிலும் சமரசம் செய்து கொள்ளாதே. பாமரன் படிக்கவேண்டிய அளவுகளில் பத்திரிகைகள் வெளிவரவேண்டும். நான் பேச்சாளன் கிடையாது. எழுத்தாளனும் கிடையாது. ஆசிரியனும் கிடையாது. நான் பில்ம் மேக்கர். நவீன தமிழ் இலக்கியத்தை நான் மதிக்கிறேன். தமிழ் ஆளுமையை மதிக்கிறேன் / நீ எழுதும் ஒரு வரியை நான் படமாக்க எனக்கு மூன்று சீகுன்ஸ் தேவைப்படலாம். நீ பக்கம் பக்கமாக எழுதிய ஒரு காட்சியை நான் ஒரு ஷாடில் படமாக்கலாம். சினிமா மொழி வேறு, தமிழ் மொழி வேறு. இதுதான் ஆரோக்கியமாக இருக்கும். அமைதியாக உள்ளேன் சினிமா இருப்பதால். நன்றி.

இவ்வாறு தன் ஆதங்கத்தையும், சினிமாவின் ரசனை பற்றியும் தெளிவுடன் பேசி அமர்ந்துகொண்டார். இந்த அமர்வைத்தொடந்து படப்பெட்டி இதழ் வழங்கப்பட்டது. பின்முனைவர் அரசு தன் உரையைத் தொடர்ந்தார்.

பேராசிரியர் அரசு


பத்திரிக்கையை மீண்டும் வெளிக்கொணர்ந்ததுக்கு நன்றி. இது மிக ம்க்கியமான வேலை நேரம். உங்களின் தளத்தில் இந்த பத்திரிகை மிக சிறப்பாக செயல்படுகிறது. எங்குமே சினிமா ஏன்? நாடகம், அழகியல் எந்த துறைகளுமே இங்கு பாடத்திட்டத்தில் இல்லை. இந்த துறையில் இருப்பவர்களுக்கே இது பற்றி எந்த அறிவுமே கிடையாது. வெகுசன மொழியில் பதிந்தவர்கள் தங்களின் நேர்மைக்காக மக்கள் விசுவாசமாய் ஓட்டு குத்துகின்றனர். இது யார் பணம்.கருப்பு பணம். இது சரியா?

பாலு மகேந்திரா சொல்வது, அவர்களின், அதாவது பணமுதலைகளின் குப்பைகள் இந்த விகடன்கள். நாம் ஏன் அந்த குப்பைகளுக்குள் போய் அடங்க வேண்டும். அந்த மாதிரியான வணிக குப்பைகள் போல் நாமும் செயல்பட வேண்டுமா? நம் இதழின் இந்த உருவாக்கம் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தும். நாம் எப்படி வெகுசன சினிமாவில் புகுந்து வேலை செய்ய முடியும்?. இது ஓட்டு வாங்கி ஜெயிப்பது போன்றது அல்ல. ஆனந்த விகடனுக்கு இந்த கட்டுரைகள் ஒரு புதிய "மேட்டர்" அவ்வளவுதான். வித்தியாசமான விஷயம் அவ்வளவுதான். இந்த இரண்டு விதமான அதாவது, அரைகுறை தளத்தில் தான் அது இயங்குகிறது. பாலு அவர்களின் தளத்தில் இருப்பவர்கள் வாசிக்கவேண்டும். இதில் எப்படி பாமரன், விஷயம் தெரிந்தவன் என பிரிப்பீர்கள்?. ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கானவர்களின் மனநிலையை நீங்க எப்படி நிர்ணயிக்கிறீர்கள்?. இந்த உடன்பாடுகள் வரலாற்று முழுக்க முற்று பெறாது.நான் பாலு மகேந்திராவின் வாரிசுகளை இந்த படபெட்டிக்கு வரவேற்கிறேன். படப்பெட்டி மாற்று மனிதர்களுக்கானது. முப்பது, நாற்பது ஆண்டுகளாக மக்கள் சார்ந்த அறிவில் செயல்பட்டவர்கள் ஆவணப் படங்களில் செயல்படவேண்டும். பாலு மகேந்திராவின் படங்கள் ஆவணப்படங்களை போன்றவைதான். இன்று நிறைய பேர் வெறும் ஆவணப்படங்கள் மட்டும்தான் எடுப்பேன் என்கிறார்கள். இது எவ்வளவு பெரிய மாற்றம்.ஆவணப்படம் எடுத்தால் நாம் தணிக்கை அலுவலகமே போகத்தேவையில்லை. அமுதன், செல்லப்பா, சோமிதரன் போன்றவர்கள் ஏற்படுத்திய மக்கள் பிரச்சனைகள் எவ்வளவு பெரியது.

எம்.பி.எஸ் அவர்கள் கேரளத்தில் மாற்று சினிமாவுக்காக இயக்கத்தை எப்படி பயன்படுத்தினார். நிமாஷ் கோய் ஏற்ப்படுத்திய மாற்று இயக்கம் இங்கு மிக முக்கியமானது. முக்கியமாக மாற்று இயக்கம் அமைக்கும் நாம் மற்றைய அரசியலோடு இயங்க கூடாது. இதை பாலுவும் ஏற்றுக் கொள்வார் என நம்புகிறேன்.

தமிழ் சமூகம் எந்தவித சொரனையுமின்றி இருப்பது போல, கருணாநிதியை நாம் ஆவணப்படுத்தும்போது அதில் எம்.ஜி.ஆரை மையப்படுத்தாமல் எம்மால் ஆவணப் படுத்த முடியுமா?ஆனால் அவர்கள் இல்லாமல் ஆவணம் முற்றுப்பெறுமா?.அப்படி ஆவணப்படுத்தினால் அதுதான் நேர்மை. பில்ம் நியூஸ் ஆனந்தன் சேகரித்த விஷயங்கள் யாரால் செய்ய முடிந்தது. அது ஆவணம். இப்படியான ஆவணங்களை சேகரிக்கும்போதுதான் இப்படியான ஆரோக்கியமான தன்மைகளை நம்மால் உருவாக்க முடியும். பல பாலு மகேந்திராக்களை உருவாக்க முடியும். இந்த படப்பெட்டி உங்களில் இருந்து அதாவது சிறு குழுவிலிருந்து பெரிய கூட்டமாய் மாறவேண்டும். வெகுசன மக்களின் ஏழ்மையை நாம் பதிவு செய்ய வேண்டும். அச்சு ஊடகத்தில் வரக்கூடிய இது போன்ற வாசகர்கள், இந்த பத்திரிக்கையை தேடிப்பிடித்து படிக்ககூடியவர்கள், தமிழ் சினிமாவில் வளமானதொரு எதிர்காலம்.

ஓவியர் டிராட்ஸ்கி மருது


முதலில் இந்த அரிய பணியை செய்த அனைத்து உள்ளங்களுக்கும் என் வாழ்த்துகள். இருவரின் ஆதங்கமும், அடிப்படையில் உள்ள கல்வி திட்டத்தை பற்றி அமைந்தது. சினிமா என்பது விசுவலாக ஒரு விஷயத்தை அதாவது நகரும் ஓவியம் எனலாம் சினிமாவை. ஓவியம்,எழுத்துக்கு இடையில் பெரிய இடைவெளி. ஓவியம் என்பது கடைசி தளமாகவும்,வேர்டு ஓவியங்கள் வரைவதுமான தளமாகவே அமைந்து போனது. கற்பனை தளத்தை எப்படி பார்க்கமுடிகிறது. அடிப்படை தெளிவில்லா காரணமே. உள்ளடக்கம் என்ன என்பதை மட்டுமே ஒரு சினிமாவில் தேடுகிறோம். அதில் அழகியலை காண்பதில்லையே. ஹிட்ச்காக், குரசோவா சினிமாக்கள் இதையும் தாண்டியவைதான். நகரக்கூடிய பேசும் ஓவியமாய் சினிமா இருக்க வேண்டும். ஒரு விஷயத்தை கத்தியின்றி கூறமுடியும்.தமிழில் பல விஷயங்கள் பதிவு செய்யப்படாமலேயே போய் விட்டன.அரசியல் விளம்பரங்கள்,காமிக்ஸ் என்றால் என்பது பற்றியே பேசுவதற்கான சூழ்நிலையே நம்மிடம் கிடையாது. போலோக்ராப்ய், ஓவியம் பற்றிய பதிவுகள் எதுவுமே நம்மிடம் கிடையாது. சினிமாவில் ஸ்டோரி போர்டு மிக முக்கியம். ஒரு கதை எழுதுபவன் இலகுவாய் எழுதிவிடுவான். அந்த கதையை இயக்குனரும், ஒளிப்பதிவாளரும் புரிந்துகொள்ள இங்கே ஸ்டோரி போர்டு மிக முக்கியம். அது சார்ந்த பதிவு செய்யப்படவேண்டும். என் தாத்தா சோலைமலை அவர்கள். அவருக்கு தொழில்நுட்பம் தெரியவில்லை. அதனால் அவர் படம் எதுவும் இயக்கவில்லை. அதற்கு மேல் கதை எழுத அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளமே போதுமானதாய் இருந்தது. இந்த மாதிரியான சில சில விசயங்கெல்லாம் படபெட்டியில் பதிவாக வேண்டும். பிரசாத், வாகினி ஆகிய லாப் ஆகியவற்றில் வேலை செய்தவர்கள் ஆரம்பத்தில் எங்கிருந்து வந்தார்கள், அவர்கள் யார் இந்த மாதிரியான வரலாறுகள் பதிவு செய்தல் தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு அவசியமானது. நாடக விளம்பரங்கள், விழா பேச்சுகள் சார்ந்த பதிவுகளும் பதிவாக வேண்டும். வரலாறுகளும், அதன் பின்புலங்களும் பதிவாகுதல் மிக முக்கியமாய் கருதுகிறேன். இதற்கு படப்பெட்டி இதழ் பதிவுசெய்ய முழு உரிமை தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

அதன் பின் திரு.சிவா செந்தில் நாதன் அவர்கள் நன்றியுரை கூற நிகழ்வு இனிது நிறைவேறியது.

No comments:

Post a Comment