Wednesday, 16 November 2011

மறுபடியும்






காலையில் மற்றவர்களுக்கு முன்னால் சீக்கிரம் எழுந்து வாசல் தெளித்துக் கோலம் போட்டு அம்மாவுக்கு அடுப்படியில் உதவியாக இருந்து அப்படியே முடிந்தால் வீட்டுப்பாடம் செய்து விட்டுப் பள்ளிக்குக் கிளம்ப வேண்டும். பள்ளிக்குப் போகும் வழியில் யாரையும் முக்கியமாக ஆண்களைப் பார்க்கக் கூடாது. பேசக் கூடாது. வனொலி கேட்பது, திரைப்படம் பார்ப்பது, கண்ட கதைப் புத்தகங்களைப் படிப்பது இவற்றையெல்லாம் நல்ல பெண்கள் செய்ய மாட்டார்கள். முடிந்தால் நன்றாகப் படித்துப் பட்டம் பெறலாம். பிறகு ஆசிரியை, வங்கியில் வேலை, அரசாங்கம், அஞ்சல் துறை போன்ற இடங்களில் எழுத்தர் வேலை. மேலே படிக்க வேண்டும் என்று யோசிக்கக் கூடாது. பின்னால் அதற்கு மேலே படித்தவனைத் திருமணம் செய்து வைப்பது கல்யாணச் சந்தையில் கொஞ்சம் கஷ்டம்.

உரக்கப் பேசக் கூடாது. தலையை விரித்துப் போட்டுக் கொண்டு போகக் கூடாது. வீட்டில் விளக்கு வைப்பதற்கு முன்னால் எங்கே போனாலும் திரும்பி வந்து விட வேண்டும். வீட்டில் ஒரு பெண் இருக்கிறாளா என்று அக்கம் பக்கத்து வீட்டுக் காரர்கள் விசாரிக்கும் அளவுக்குக் கட்டி வைத்த பசு மாடு போல் பெண்ணை வளர்த்து யாரோ ஒருவனிடம் கன்னிமையைக் காப்பாற்றி ஒப்படைக்கும் வரை வயதுப் பெண்ணை வைத்திருப்பது வீட்டில் அப்பா அம்மாவுக்கு வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பது போல் இருக்கும். இவன்தான் உனக்கு நாங்கள் பார்த்திருக்கும் மாப்பிள்ளை. நல்ல சம்பந்தம். ஒரே பிள்ளை. நன்றாகப் படித்து பாங்கில் ஆஃபிஸராக இருக்கான். பிக்கல் பிடுங்கல் ஒண்ணும் கிடையாது. போற இடத்துல ஜாம் ஜாம்மென்று மகாராணி மாதிரி இருக்கலாம் என்று போட்டோவில் காட்டப்படும் முகம் மட்டும் தெரிந்த அந்த மனிதனுக்காகத் தன் வாழ் நாளை அர்ப்பணிக்கத் தயாராகும் நம் கண்மணிகள்.

மூக்குக் குத்திக் கொள்ள வேண்டும். பிறகு அவர்கள் வீட்டில் வேலைக்குப் போக வேண்டாம் என்றால் வீட்டில் இருந்து விட வேண்டும். கல்யாணம் ஆகி ஒரு வருடத்திற்குள் ஒரு குழந்தை. ரொம்ப சமர்த்துப் பெண்ணாக இருந்தால் ஆண் குழந்தை பெற்றுக் கொண்டு விட வேண்டும். இவ்வளவு விஷயங்களையும் எதற்காகச் செய்ய வேண்டும்? ஒரு ஆண் தான் ஒரு பெண்ணுக்குப் பாதுகாப்புத் தர முடியும். இந்திய சமூகத்தில் திருமணம் செய்து கொள்வது மூலம் மட்டுமே ஒரு பெண்ணுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது போன்ற நடுத்தர மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கைகளின் அஸ்திவாரம் தான் நான் தொடக்கத்தில் எழுதிய குறிப்புகளின் பொருள். கிட்டத்தட்ட இந்த விழுமியங்களின் வார்ப்பாகத்தான் நானும் வளர்ந்தேன். இவை யாவும் தேவதைக் கதைகளில் வரும் முடிவைப் போல் பிறகு இளவரசனும் இளவரசியும் இனிது வாழ்ந்தனர் என்ற முடிவை எதிர்பார்த்து எழுதப்படும் கதைகளைப் போல் அபத்தமானவை என்பதை நன்கு படித்த பெண்கள், சிந்திக்கத் தெரிந்த பெண்கள் தெரிந்து இருந்தாலும் இத்தகைய முடிவை எதிர் நோக்கும் கதைகளைப் போல் ஒரு சில எதிர்பார்ப்புகளுடன் திருமணம் என்பதைத் தவிர்க்க முடியாதவர்களாக இருக்கிறார்கள்.

செய்தித் தாளில் பெண் கற்பழிக்கப் பட்டுக் கொலை என்று படிப்பது நமக்கு ஒரு செய்தி மட்டுமே. பக்கத்து வீட்டுக்காரி எதிர் வீட்டுக்காரனுடன் ஓடிப் போய் விட்டாள் என்பது உப்புச்சப்பில்லாத நம் வாழ்க்கையில் ஒரு பரபரப்புக்குரிய சம்பவம். நெருங்கிய தோழி காதல் வசப்பட்டிருக்கிறாள் என்பது நமக்கு கிளுகிளுப்பைத் தரும் ஒரு கிசுகிசு. நமக்குப் பரிச்சயமான ஒரு நபர் தன் மனைவியை விவாகரத்து செய்து விட்டு வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார் என்பது சற்று அதிர்ச்சி தரும் நிகழ்வு. இதில் நமக்கு எதுவும் நிகழாத வரை நம்மால் இவற்றைப் பற்றி படிக்க முடியும் பேச முடியும். ஆனால் இதில் ஏதாவது ஒன்று நமக்கு நடந்தால் அதை எப்படிச் சமாளிப்போம் என்பது கற்பனைக்கு அப்பாற்பட்ட விஷயம்.

ஒரு சராசரி பெண். நடுத்தர வர்க்கத்துப் பெண்.அவள் இப்படிப்பட்ட நம்பிக்கைகளுடன் தன் திருமண வாழ்க்கையைத் தன் மனதுக்குப் பிடித்தவனுடன் தொடங்குகிறாள். இப்படியே தன் வாழ்க்கை ஒரு பாதுகாப்பான வளையத்தில் முடிந்து விடும் என்று நினைக்கிறாள். இதில் ஒரே அசாதாரண விஷயம். அந்தப் பெண்ணின் கணவன் ஒரு திரைப்பட இயக்குனர். சுற்றிலும் நிறையப் பெண்கள். அதிலும் அழகான பெண்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புகள் அதிகம் உள்ள ஒரு துறை.

‘நிழல்கள் ரவி’ திரைப்பட இயக்குனர். ரேவதி மனைவி. இயக்குனரை வெறி பிடித்தவள் போல் காதலிக்கும் நடிகை ரோகிணி. மும்முனைப் போட்டியில் யார் வெற்றி பெற்றது என்று பார்த்தால் யாருமே இல்லை. ரேவதி தன் மண வாழ்க்கையில் தோற்றுப் போனவளாக, ஆதரவற்ற தன் வேலைக்காரியின் பெண் குழந்தையைத் தன் பொறுப்பில் வளர்க்கிறாள். நடிகை ரோகிணி “நீ எனக்காக உன் பெண்டாட்டிய விட்டுட்டு வந்தே. நாளைக்கு இன்னொருத்திக்காக என்ன விட்டுட்டுப் போக மாட்டேன்னு என்ன நிச்சயம்? என்று நிழல்கள் ரவியை விட்டு விலகி விடுவாள். நிழல்கள் ரவி போக இடமில்லாமல் மீண்டும் மனைவிடம் சேர முயற்சிப்பார். நீங்க இப்படி வந்து நின்ன மாதிரி நான் வந்திருந்தா நீங்க என்ன செஞ்சிருப்பீங்க? என்று கேட்டுட தன் வாழ்க்கையைத் தொடரும் ரேவதி.

இந்தப் படத்தில் பெண்ணீயம் என்று பெரிதாகப் பேசப்படவில்லை என்றாலும் சமூகத்தில் இரு தளங்களில் இருக்கும் இரு பெண்கள். ஆனால் இருவருமே ஆண்களால் ஏமாற்றப்படுகிறார்கள். ஆனால் ஆண்கள் இல்லாமல் வாழ முடியும் என்ற முடிவுக்கு வருகிறார்கள். ரேவதி, ரோகிணி இருவருமே நடிப்பில் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருப்பார்கள். ரேவதி ஒரு பார்ட்டியில் தன் கணவனையும் அவனுடன் ரோகிணியையும் பார்த்து விட்டுக் குடித்து விட்டு உளருவது, ரோகிணியிடம் போனில் தன் புருஷனை விட்டுத் தரும்படி கெஞ்சுவது என்று உணர்ச்சிப் பிழம்பாக அசத்தியிருப்பார். ரோகிணி மன அழுத்த நோயாளியாக, நிழல்கள் ரவியைப் பாடாய் படுத்தியெடுப்பார். ‘அர்த்’ என்ற ஹிந்தி படத்தைத் தழுவி எடுத்த படம். தழுவி என்று சொல்லமுடியாது. அப்படியே அதைத் தமிழில் எடுத்தார் என்று சொல்லலாம். ஹிந்தியில் ஷப்னா ஆஸ்மி, ஸ்மிதா பாட்டில், குல்பூஷன் கர்பந்தா நடித்த படம். மஹேஷ் பட் என்ற இயக்குனர் தன் சொந்த வாழ்க்கை அனுபவங்களை அப்படியே பதிவு செய்தார் என்று அவரே சொல்லியிருக்கிறார். அவர் பர்வீன்பாபி என்ற நடிகையுடன் இருந்த போது அவர் மனைவிக்கும் பர்வீன்பாபிக்கும் நடந்த போராட்டத்தை அப்படியே திரையில் காட்டினார்.

நிஜ வாழ்க்கையிலும் பர்வீன் பாபி மன நிலை பிழன்றவராகக் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் இருந்தார். 2005 ஆம் ஆண்டு நீரிழிவு நோய் முற்றிய நிலையில் யாருமற்ற அனாதையாகத் தன் வீட்டில் இறந்து கிடந்தார். அவர் இறந்த பிறகு மஹேஷ் பட் மீண்டும் ‘வொ லம்ஹே’ (அந்த கணங்கள்) என்ற திரைப்படத்தை எடுத்தார். அதுதான் பர்வீன்பாபியின் உண்மையான கதை என்று சொல்கிறார். அதை மறுக்கவோ, மறைக்கவோ அப்போது பர்வீன்பாபி இல்லை.

மகேஷ் பட், பாலு மகேந்திரா என்ற இரு இயக்குனர்களும் அந்த அப்பாவி மனைவி படும் பாட்டை ஒரு குற்ற உணர்வோடு பதிவு செய்திருக்கிறார்கள். பாலு மகேந்திரா தன் கதாநாயகியரோடு கொண்டிருந்த உறவை அகிலாம்மா என்று வாஞ்சையோடு அழைக்கப்படும் திருமதி பாலு மகேந்திரா எந்த மன நிலையில் ஏற்றுக் கொண்டார் என்பது பாலு மகேந்திராவுக்கு மட்டும் தான் தெரியும். மகேஷ் பட்டும் பர்வீன்பாபி மட்டுமல்லாது தன் இரண்டாவது மனைவி என்று பல பெண்களோடு பழகிய இயக்குனர். திரைப்படம் என்ற ஒன்று தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இயக்குனர்கள், நடிகைகள் காதல் என்பது இயல்பான ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. ஹாலிவுட், பாலிவுட் என்ற பேதமில்லாமல் இயக்குனர்கள் தன் திரைப்படத்தில் தொடர்ந்து ஒரு நடிகைக்கு வாய்ப்புத் தருவது, அந்த நடிகைக்கு நண்பன், பாதுகாவலன், காதலன், கணவன் என்று அவதாரமெடுப்பதை இன்று வரை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதில் முரண்பாடான ஒன்று ஹிந்தித் திரைப்பட உலகில் வித்தியாசமாகச் சிந்திக்கும் அறிவுஜீவிகள் என்று கருதப்பட்ட ஷப்னா ஆஸ்மி, ஸ்மிதா பாட்டில் இருவரும் இந்தத் திரைப்படத்தில் சிறப்பாக நடித்துப் பல விருதுகள் பெற்றனர். ஆனால் இருவருமே இரண்டாவது மனைவியாக மூத்த மனையிவிடமிருந்து தங்கள் துணவர்களைக் கவர்ந்து கொண்டவர்கள். ஸ்மிதா பாட்டில் ராஜ் பாபரோடு வாழ்ந்து ஒரு குழந்தை பிறந்ததும் உடல் நலமில்லாமல் இறந்து போனார். ராஜ் பாபர் மீண்டும் தன் முதல் மனைவியிடம் சரணடைந்து அந்தப் பெண்மணி கணவனையும் மன்னித்து, ஸ்மிதா பாட்டிலின் குழந்தையையும் வளர்த்தார்.

நிராதரவாக நிற்கும் ரேவதிக்கு உதவி செய்யும் நல்ல நண்பனாக வரும் அரவிந்த் சாமி. அவர் ரேவதியிடம் தன் காதலைச் சொல்லியதும் அதை அவர் ஏன் மறுக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. ஆண்கள் எத்தனை முறை இடறினாலும் அதைப் பெருந்தன்மையோடு ஏற்கும் சமூகம், பெண் மறுமணம் செய்து கொள்ள நினைப்பதைக் கூடத் தவிர்க்கிறது. சாதாரண நடுத்தர வர்க்கத்துப் பெண்ணான ரேவதி நிழல்கள் ரவி மறுபடியும் மனம் மாறி வரும் போது ஏற்க மறுப்பது மட்டுமே அவள் பெண்ணீயத்தின் தொடக்கம். பிறகு மீண்டும் அவளது புது வாழ்வு ஒரு ஏழைப் பெண்ணின் தாயாகத் தொடருவது அவளை உன்னத நிலைக்குக் கொண்டு செல்வது. மறுமணம் செய்து கொண்டால் அந்த அவள் அந்த உன்னத நிலையிலிருந்து தாழ்ந்து விடுவாள் என்று எந்த ஆண் துணையும் எனக்கு வேண்டாம் என்று முடிவெடுக்கிறாளோ என்று நினைக்கத் தோன்றியது.

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் மீண்டும் ஒரு கிராம அலை அடித்து பிரபு, கார்த்திக், சத்தியராஜ், சரத்குமார் போன்ற கதாநாயகர்கள் கிராம ராஜன்களாக வலம் வந்து, தாலி செண்டிமெண்ட், கோவில் கொடை, தீமிதி, மஞ்சள் புடவை என்று குலவையிட்டுக் கொண்டிருந்த போது ‘மறுபடியும்’ திரைப்படம் ஒரு யதார்த்தத் திரைப்படத்தைப் பார்த்த திருப்தியை ஏற்படுத்தியது.

‘மறுபடியும்’ மறுபடியும் பார்க்க முடிந்தால், இந்தப் பின் கதைகளுடன் பார்த்தால் கோவலன் மாதவியிடம் இருந்து விட்டால் ஏது சிலப்பதிகாரம்? என்று நினைக்கத் தோன்றும்.

No comments:

Post a Comment