Sunday, 9 October 2011

ஷோபா என்னும் அழியாத கோலம்












னவு காணும்
வேலைக்காரியாய்த்தான்
முதலில் ஷோபாவைப்
பார்த்தேன். தெருவில், கோவிலில்,
கடைவீதியில் பார்க்கும் ஒரு
சாதாரணப்பெண் போல இருக்கிறார்
ஷோபா என ஆனந்தவிகடன் சொன்னது மிகச் சரியானதுதான். அறிமுகம் செய்த கே.பாலச்சந்தருக்கு
இந்த இடத்தில் நன்றி சொல்லிக்கொள்ள வேண்டும். அங்குமிங்கும் பார்த்து, சரத்பாபுவின் செண்ட்டைத் திருட்டுத்தனமாய் போட்டுக்கொண்டு கண்ணாடியில் தன்னுடலைப் பார்க்கும் அந்த நேரத்தில் மிக நெருக்கத்தில் உணர்ந்தேன். எந்தப் பின்னணியிசையுமின்றி,  சரத்பாபுவிடம் அந்த உடலைப் பகிர்ந்து கொண்ட போது எதையோ இழந்துபோனவனாய் பார்க்கமுடியாமல் பார்த்து உட்கார்ந்திருந்தேன். அனுமந்துவின் வலி என்னிடம் இருந்தது. நிழல் நிஜமாக தெளிந்த பிறகு ஷோபாவின் முகத்தில் இருக்கும் நிதானத்தையும், பக்குவத்தையும் காணும் கமல்ஹாசனிடம் இருக்கும் பிரமிப்பு என்னிடம் இருந்தது. கடைசியில் சரத்பாபுவை மறுக்கிறபோது ஷோபாவைத் தூக்கிக் கொண்டாடி இருக்கிறேன். அன்று ஷோபா ஒரு நல்ல நடிகையாக மட்டுமேத் தெரிந்தார்.


வானவில் பின்புறம் மலர்ந்திருக்க ‘அடி பெண்ணே...” என மலையடிவாரத்தில்  ஒடிவருகிற போதுதான் என் பதின்மப் பருவத்தின் சிலிர்ப்போடு ஷோபாவை நேசிக்க ஆரம்பித்தேன். அந்தப் பெரிய குங்குமப் பொட்டும், மூக்குத்தியும் எவ்வளவு அழகானவையாக இருந்தன.  செந்தாழம் பூவென்று அப்போது சரத்பாபு காதலித்துக்கொண்டு இருந்தார்.
 
 
பிறகு குடையோடு வந்தது இந்து டீச்சர். வெளி யாவையும் நிழல் போலாக்கி மயங்கி நிற்கும் அந்த மாலைச்சூரியனிலிருந்து உணர்வுகள் சுதிகொள்ள ஆரம்பிக்கும். பஞ்சுக்கதிர்களாய் காற்றில் உற்சாகமாய் பொங்கிக்கொண்டு இருக்கும் புற்கூட்டத்திலிருந்து சலீல் சௌத்தரியின் இசை எழும்பும் அந்த தருணத்தில் சட்டென பரவசமாகிறது உள் பூராவும். வாய்க்கால்களும், வரப்புகளும், மரத்தடிகளுமாய் கிராமத்தின் அழகெல்லாம் காட்சிப்பறவைகளாய் இசையில் சிறகு விரிக்கும். “பூவண்ணம்.... போல நெஞ்சம்.... பூபாளம் பாடும் நேரம்...” என்னும் வரிகளில் உடல், உள்ளம் எல்லாம் லேசாகி விட, வாழ்க்கை எவ்வளவு சுகமானதாகவும், ரம்மியாகவும் ஆகிப்போகிறது. அதோ, ஆர்கண்டிச் சேலையில் தேவதையாய் ஷோபா ஒற்றை வரப்பில் நடந்துவர, திரவம் போல கசிந்துருகிப் போகிறேன். இசை, பாடல், குரல், காட்சி, உருவங்கள் என அனைத்தும் ஒன்றிப்போய் மிதக்கும் அந்தக் காலப்பரப்பில் போதைகொண்டு இன்னும் என் இளமை வாடாமல் கிடக்கிறேன்.
 
 
தொடர்ந்து ஏணிப்படிகள், ஒரு வீடு ஒரு உலகம், பசி என்று வேறு வேறு பிம்பங்களில் வந்தாலும் எனக்குள் எல்லாம் அழியாத கோலமாகவே மீட்டிக்கொண்டு இருந்தது. law of diminishing utility பற்றி உதாரணங்களுடன் புரொபசர் பொன்ராஜ் வகுப்பறையில் விளக்கிக்கொண்டு இருக்கும் போது ஷோபாவின் கண்ணை வரைந்து கொண்டு இருப்பேன். பாடப்புத்தகங்கள், நோட்டுக்கள் முழுக்க ஷோபாவின் முகங்களே முளைத்திருந்தன.  சிரிக்கும்போது குழந்தையும், மௌனமாய் இருக்கும்போது முதிர்ச்சியும், எப்போதும் ஓடிக்கொண்டு இருக்கும் புத்திசாலித்தனமும், குறுகுறுப்பும்தான் ஷோபா. வேகம் கூடிய நடையும் தெறிப்புகளாய் வந்து மறையும் சிறுவெட்கமும் அழகு. அந்த உருவம், அசைவுகள்,  உரையாடும் பாவம் எல்லாம் என் பிரியத்திற்குரியச் சாயல்களாயிருந்தன. என் தேவதைக்குரியவையாக இருந்தன. புல்வெளிகளில், கடற்கரையில் நான் ஷோபாவுடன் நடந்து கொண்டு இருந்தேன். நான் எதோ சொல்ல ஷோபா வெட்கப்பட்டுச் சிரிப்பதை உணர்ந்தேன். என் இனிய பொன் நிலாவாக வான்வெளியில் வைத்துப் பார்த்துக்கொண்டு இருந்தேன். விளக்குகள் அணைக்கப்பட்ட இருளில் இருந்து ஷோபா வெளியேறி நாளாகியிருந்தது.
 
 
அது எப்படி என்று தெரியவில்லை. அது ஏன் என்றும் தெரியவில்லை. இனக்கவர்ச்சி என்பதெல்லாம் தாண்டிய உறவாக அதை வரித்துக்கொண்டேன். வெதுவெதுவென எப்போதும் ததும்பிக்கொண்டு இருக்கிற நினைவுகள் என்னை மிருதுவாக வருடிக்கொண்டிருந்தன. தொலை தூரத்து நட்சத்திரமே என்பதை புரிந்து கொண்டாலும், அது என் பாதையில் மட்டும் சிந்திய ஒளியை எல்லாம் பத்திரமாக்கி வைத்துக்கொண்டிருந்தேன்.
 
 
ஒருநாள் வானொலியில் ஷோபா தற்கொலை செய்து கொண்டதாக ஒரு பெண் சொன்னாள். பத்திரிகையில் படங்களுடன் செய்திகள் வந்தன. அன்று நான் சாப்பிடவில்லை. பைத்தியம் போலக் கிடந்தேன். மரணம் குறித்து வந்த செய்திகளும், சர்ச்சைகளும் எனக்கு முக்கியமானதாய் படவில்லை. அருமையான ஒன்றை இழந்த சோகம் மட்டுமே என் நாட்களில் அப்பிக்கொண்டிருந்தது. இனி இந்த உலகில் எந்தப் பெண்ணும் அழகானவளாய், ரசனைக்குரியவளாய் இருக்க மாட்டாள் என்றெல்லாம் தோன்றியது. ச்சீப் பைத்தியம் என்று என்னையே நான் கோபப்பட்டாலும், அதுதான் உண்மையென்று அழுத்தமாக உறைத்துக் கொண்டிருந்தது.
 
 
ஆனால் ஷோபா எங்கும் போய்விடவில்லை. திரும்பவும் உயிரோடு எழுந்து வந்திருக்கும் செய்தியை ரகசியமாக வைத்துக் கொண்டேன். நான் வரைந்த ஷோபாக்கள் என்னைச் சுற்றி நடமாடிக் கொண்டு இருப்பதைப் பார்த்தேன். கால அமைதி கொண்டு நிற்கிற ஷோபா இப்போது.
 
 
ஆமாம், கு.ப.ராஜகோபாலனுக்கு ஷோபா எப்படித் தெரியும்? கள்ளங்கபடமற்ற நூருன்னிஷாவாக வடிவம் பெற்று எழுந்து நின்றது ஷோபாவேதான். அப்புறம் பார்த்தால் ஸ்டெப்பி புல்வெளிகளில் பாடித்திரிந்து கொண்டிருந்த என்னருமை ஜமிலாவும், “இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் பாபு” என்று தலையைக் கோதிவிட்ட யமுனாவும் ஷோபாதான். பிலிம் சுருள்களுக்குள்ளிருந்து விடுபட்டு, நான் நேசிக்கிற பெண்களுக்குள் எதோ ஒரு வார்த்தையின், அசைவின் வழியாக ஷோபா கூடு பாய்ந்து விடுவதை அறிந்து கொண்டேன். 
 
 
அந்த இடத்தை நிரப்ப முடியாத பெண் ஷோபா. ‘மேகமே... மேகமே’ என்று சுஹாசினி புல்வெளியில் உட்கார்ந்திருக்கிற நாட்கள் சில வந்தன. “பூவே பூச்சுடவா” என நதியா துள்ளித் திரிந்த நாட்கள் சில வந்தன. அவர்கள் போன சுவடு தெரியவில்லை. நான் தேடவுமில்லை. ஷோபா மட்டும் திரும்ப திரும்ப வந்து கொண்டே இருக்க முடிகிறது. நேற்று கூட ஷாஜஹானின் எழுத்தில் அண்ணியாக வந்து “நாளை இந்த நேரம் பார்த்து” என்று பாடிக்கொண்டு இருந்ததைக் கேட்டேனே.
 
 
காலம் எவ்வளவோ கடந்து போனாலும், எந்த அற்புதத்தையும், அழகையும் நாம் இழந்து போவதில்லை. ரசனைகளின் சித்திரங்கள் வயதுகள் தாண்டியும் கூடவே வருகின்றன. எப்போது பார்த்தாலும் வான்வெளியில் சட்டென்று  கண்ணில் படுவதாய் எல்லோரும் தங்களுக்கென்று ஒரு நட்சத்திரம் வைத்திருக்கிறார்கள். அறிவு பூர்வமான புரிதல்களுக்குள்ளும், பக்குவங்களுக்குள்ளும் அடைபடாத அழியாத கோலங்கள் இவை.
 
 
இரண்டு வருடங்களுக்கு முன்பு பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி பிரச்சினைகள் குறித்து நாங்கள் எடுத்திருந்த ‘இது வேறு இதிகாசம்’ ஆவணப்படத்தை வெளியிட மதுரைக்கு பாலுமகேந்திரா வந்திருந்தார். விமான நிலையத்தில் வரவேற்றதிலிருந்து கிட்டத்தட்ட ஒருநாள் முழுக்க அவரோடு ஒரு ஓட்டல் அறையில் கூடவே இருந்தேன். நிறைய விஷயங்கள் பேசிக்கொண்டு இருந்தார். எழுத்தாளர்கள் தமிழ்ச்சினிமாவிற்குள் வரவேண்டியதன் அவசியம் பற்றிச் சொல்லிக்கொண்டு இருக்கும்போது, “நீங்களும் நன்றாக எழுதுவீர்களே” என்றேன். “நான் எழுத்துக்களை வாசிப்பேன். எங்கே எழுதினேன்?” என்றார். கொஞ்சமும் யோசிக்காமல் “ஷோபா அவர்கள் இறந்தபோது குமுதத்தில் அந்த நினைவுகளை ஒரு தொடராக எழுதினீர்களே... நான் அதை விடாமல் படித்திருக்கிறேன். ரொம்ப நல்லாயிருந்தது” என்றேன். பதில் எதுவும் சொல்லாமல் அமைதியானார். தர்மசங்கடமாயிருந்தாலும், நானும் அமைதியாயிருந்தேன். நீண்ட அந்த மௌனத்தில் இருந்து எழுந்து வந்து கொண்டிருந்தார் ஷோபா! 
 
 
பி.கு:
 
லிப்டில் ஏறி, ஆபிஸ் அறைக்குள் புகுந்து கொண்ட அந்த இளைய கமல், அன்று வந்த கடிதங்களை பார்வையிடுவார். எங்கோ இருக்கும் அவரது கிராமத்திலிருந்து பால்ய கால சினேகிதனின் கடிதம் வந்திருக்கும். ஆபிஸ் பியூனை அழைத்து  “யாரையும் கொஞ்ச நேரம் உள்ளே விடவேண்டாம்” என்று சொல்லிவிட்டு, கடிதத்தை படிக்க  ஆரம்பிப்பார். “நம்ம இந்து டீச்சர் இல்ல, இந்து டீச்சர் அவங்க இறந்துட்டாங்க..” என்ற வரிகளோடு கடிதமும், ‘அழியாத கோலங்களும்’ ஆரம்பிக்கும். நானும் என் கதவுகளை கொஞ்ச நேரம் பூட்டிக்கொண்டிருக்கிறேன். அதுதான் இந்த 300வது பதிவு.

No comments:

Post a Comment