பாலுமகேந்திரா: இலக்கியமும் திரைப்படமும்
கேள்விகள்: யமுனா ராஜேந்திரன்
கேள்வி :தமிழ்ச் சூழலில் இலக்கியவாதிகளுக்கும் சினிமாக்காரர்களுக்குமான இடைவெளியும் வெறுப்பும்
தவிர்க்கமுடியாத ஒரு பிரச்சினையாக இருக்கிறது. இதற்கு இரண்டு மீடியம்
சம்பந்தமானவர்களும், பரஸ்பரம் இன்னொரு மீடியத்திலிருக்கிற தனித்தன்மைகளைப் புரிந்து
கொள்ளாததுதான் காரணமென்று தோன்றுகிறது. உங்களுடைய படைப்பனுபவத்தில் நீங்கள் இதை எப்படி
எதிர்கொள்கிறீர்கள்?
பாலு: நான் கதை நேரத்தில் எடுத்துக் கொண்ட கதைகள், இந்த மீடியம் மாற்றத்துக்கு இணக்கமான
கதைகளாக, எனக்குப் பிடித்த கதைகளாக இருக்கிறது. அற்புதமான இலக்கியப் படைப்புக்கள் என
அங்கீகாரம் செய்யப்பட்ட பல கதைகள், அதற்குப் பக்கத்திலேயே நான் போக முடியாமல் இருக்கிறது.
ஏனெனில், இந்த ஊடக மாற்றம் என்பது, எழுத்து என்கிற ஊடகத்திலிருந்து சினிமா என்கிற
ஊடகத்திற்கு மாற்றம் செய்கிறபோது, சில கதைகள்தான் அந்த ஊடக மாற்றத்துக்கு இணக்கமாக
அமைகிறது. ஏன் நீங்கள் அதைச் செய்யவில்லை, இதைச் செய்யவில்லை என்கிற பட்சத்தில், அந்தக்
கதைகள் அற்புதமான கதைகள், இன்றைக்கும் என் நெஞ்சுக்குள்ளே பொத்திவைத்து ரசிக்கிற கதைகள்
அவை. ஆனால், நீங்கள் சொல்கிற அந்தக் கதைகளை காட்சிரூபமாகச் (visualise) செய்வதற்கு
எனக்குப் பயமாக இருக்கிறது. அதுக்கான காரணங்கள் ரொம்பச் சாதாரணம்.
ஒரு கதையை நான் சிறுகதை என்கிறபோது, ஒரு படைப்பு என்கிற ரீதியில் அதை
அணுகுகிறபோது, (இசையில் ஒரு படைப்பு வரலாம், ஓவியத்தில் ஒரு படைப்பு வரலாம்,
கட்டிடக் கலையில் ஒரு படைப்பு வரலாம், நாடகத்தில் ஒரு படைப்பு வரலாம்), படைப்பு
என்கிறபோது இரண்டு விஷயங்கள் அதற்குள் முக்கியமாக வருகிறது. ஒன்று அதனுடைய உருவம்
மற்றது அதனுடைய உள்ளடக்கம். இது ஒவ்வொரு ஊடகத்திலேயும் ஒவ்வொரு படைப்புக்கும் வேறு
வேறு வகைகளில் இருக்கிறது. ஒரு ஊடகத்தில் இயங்கிக் கொண்டிருக்கிற ஒரு
படைப்பாளியினுடைய ஆற்றலை நான் மதிப்பிட வேண்டும் என்கிற பட்சத்தில், ஒரு
படைப்பாளியென்கிற கோணத்திலிருந்து மட்டும், (வேறு சில கோணங்கள் இருக்கிறது, அதனை நான்
பின்பாகச் சொல்கிறேன்) இவனுக்கு அந்த ஊடகத்திலிருக்கிற ஆற்றலை நான் மதிப்பிடறதுக்கு
உட்காரும்போது, வடிவத்தைத்தான் நான் அதிகம் சார்ந்திருக்கிறேன்.. அப்புறம்தான் உள்ளடக்கம்..
எழுதுவது என எடுத்துக் கொண்டால், எழுத்தில் இவனுக்கிருக்கிற ஆளுமை, லாவகம், இவனுக்குக்
கைவந்த அல்லது கைவராத எளிமை, இந்த விஷயங்கள் எனக்குச் சொல்கிறது, அவருடைய எழுத்து
சார்ந்து அவர் என்ன மாதிரி எழுத்தாளர் என என்னால் தெரிந்து கொள்ள முடிகிறது. இவனுடைய
உள்ளடக்கத்தை வைத்து நான் என்ன புரிந்து கொள்கிறேன்? இவனைப் புரிந்து கொள்கிறேன்..
இவனுடைய சார்புகளை நான் புரிந்து கொள்கிறேன்.. இவனுடைய குணாதிசயங்களை ஓரளவுக்கு
என்னால் ஊகிக்க முடிகிறது. இவன் ஒருவேளை தீவிரமான இடதுசாரியாக இருப்பானோ என்கிற
அந்தமாதிரி விஷயங்களைக் கண்டுபிடிக்க முடிகிறது.
ஆனால் படைப்பாளி என்கிற முறையில் ஊடகத்தில் இவனுடைய பாண்டித்யம் என்ன என்பதா முக்கியம்?
இந்த இரண்டு சமாச்சாரங்களையும் வைத்துக்கொண்டு நான் சிறுகதையை அணுகுகிறபோது, நான்
சினிமாவாக மாற்றுகிறபோது, உன்னுடைய ஊடகத்தில் உனக்கிருக்கிற ஆளுமை, பாண்டித்யம்
எல்லாவற்றையும், நான் கூடையில் தூக்கிப்போட வேண்டியிருக்கிறது. அது எனக்கு உபயோகப்படாத
போணியாகாத சரக்கு. எனக்கு இது வேண்டாம். எனக்கு இது கிஞ்சிதமும் வேண்டாத விஷயம். இதை
நான் என்னுடைய மொழியில் சொல்லப் போகிறேன். உன்னுடைய மொழி எனக்கு அவசியமில்ல. இந்த
மொழியும் உள்ளடக்கமும் சேர்ந்ததுதான் உன்னுடைய படைப்பு. இந்த இரண்டும் சேர்ந்த ஒரு
பிணைப்புக்காகத்தான் உனக்கு இலக்கிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
உன்னுடைய பாத்திரப் படைப்புக்களை நான் கடன் வாங்கிக் கொள்ளலாம்.. உன்னுடைய அமைப்பை,
முறையை (structure) நான் கடன் வாங்கிக் கொள்ளலாம். ஆனால், அதை என்னுடைய மொழியில நான்
சொல்லப் போகிறேன். இதற்கும் உனக்கும் சம்பந்தமில்லை. ஒரு சிறுகதையை நான் எடுக்கும்போது,
எனக்கு நான் அதனை ஒரு கச்சாப் பொருளாகத்தான் எடுக்கிறேனே தவிர, கலைப் படைப்பாக இதனை
நான் எடுக்கவில்லை. கலைப் படைப்பு என்கிற அந்த அங்கீகாரம் எனக்கு முக்கியமில்லாமல்
போவதற்கு இது ஒரு முக்கியமான காரணம். கலைப் படைப்புகளைத் தொட்ட இயக்குனர்கள் தலைகீழாக
விழுந்து போகிறதும் இதனால்தான்.
எழுத்து உனக்குத் திட்டமிட்ட வகையிலான சுதந்திரத்தைத் தருகிறது.. சினிமா ஒரு
குரூரமான (brutal) ஊடகம். லயோலா காலேஜில் நான் காட்சிரூபத் தொடர்பூடகம் (visual
communication) சொல்லித் தருகிறேன்.. நான் அவர்களுக்கு ஒரு உதாரணம் சொன்னேன். ஒரு
ஊரில் ஒரு பாட்டி வடை சுட்டுக் கொண்டிருந்தாள். நமக்குச் சொல்லப்பட்ட முதல் கதை. இது
வந்து பல தலைமுறைகளைத் தாண்டி இன்னும் பல தலைமுறைகளுக்குப் போகக் காத்திருக்கிற கதை.
இது ஒரு அற்புதமான கதை.. காலத்தால் பரிசோதிக்கப்பட்ட கதை. உலகத்தின் தலைசிறந்த
கதைகளில் இது ஒன்று. ரொம்பவும் எளிமையான கதை.
ஒரு ஊரில் ஒரு பாட்டி வடை சுட்டுக் கொண்டிருந்தாள். ஒரு வரி. ஒரு ஊரில்: ஒரு கதை
இடம் (location) சொல்லப்பட்டாயிற்று. ஒரு பாட்டி: குணச்சித்திரம் (character)
அறிமுகம் பண்ணப்பட்டாயிற்று. வடை சுட்டுக்கொண்டிருந்தாள்: செயல் (action)
சொல்லப்பட்டாயிற்று.. இதனை என்னுடைய தாத்தாவோ பாட்டியோ ஏழு எட்டு வயதிருந்தபோது இந்த
வரியைச் சொன்னபோது, நான் உடனடியாகக் கிரகித்துக்கொண்டு அடுத்த வரிக்கு
ரெடியாகிவிட்டேன். ஆனால் இந்தச் சாதாரண வரியை நான் சினிமாவாக ஆக்கவேண்டுமென்றால் நான்
தலையைப் பிய்த்துக்கொள்ள வேண்டும்..
ஒரு ஊரில்: எங்கே, மலைப் பிரதேசமா, நகர்ப்புறமா, கிராமப்புறமா என்ன? ஒரு பாட்டி:
எப்படியான பாட்டி, என்ன வயசு, என்ன புடவை கட்டியிருக்கிறாள், காதில் பாம்படம்
இருக்கிறதா, மொட்டை போட்டிருக்கிறாளா என்ன? படப்பிடிப்புக்கு போவதற்கு முன்னாடி சின்னச்
சின்ன விஷயங்கள் கூட இறுதி பண்ணப்பட்டாக வேண்டும். ஒரு சினிமாப் படைப்பாளி என்ற
வகையில், சின்னச் சின்ன விஷயங்களையும் நான் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது. என்னுடைய
முதிர்ச்சி அல்லது முதிர்ச்சியின்மைக்கேற்ப, என்னுடைய கற்பனை வளம் அல்லது கற்பனை
வளமின்மைக்கு ஏற்ப, இதுதான் ஊர், இதுதான் பாட்டி, இப்படித்தான் வடை சுட்டுக்கொண்டிருந்தாள்
எனச் சொல்வேன். இதுதான் சினிமாவுக்கும் இலக்கியத்துக்கும் இருக்கிற மிகப் பிரதானமான
வித்தியாசம்.
எழுத்து கொடுக்கிற சுதந்திரத்தை சினிமா தராது. இவன் தீர்மானித்து, இருட்டுக்கு கூட்டிக்
கொண்டுபோய் உட்காரவைத்து, பார் என்கிறதுதான் சினிமா. மகா மகா போக்கிரித்தனமான
குரூரமான ஊடகம் சினிமா. அதுதான் சினிமாவின் வலிமை. அந்த நகர்கிற பிம்பத்தில் உன்னை
மாற்றிக் கொள்கிறாய், கமல்ஹாசனாக, சிறிதேவியாக உன்னை மாற்றிக் கொள்கிறாய்.
இலக்கியத்துக்கும் சினிமாவுக்குமான இந்த வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். நான்
ஏன் இதைச் சொல்கிறேனென்றால், நான் ஆரம்பத்தில் ஒரு எழுத்தாளன். அப்புறம் தான் சினிமாவுக்கு
வந்தேன். இன்றைக்கு சினிமா என்னை முழுவதுமாக ஆக்கிரமித்திருக்கிற இன்றைக்கும் கூட, நான்
வெறிகொண்ட ஒரு வாசகனாக இருக்கிறேன்.
நேற்று வரைக்கும் வந்த நல்ல சிறுகதை, நல்ல நாவல் என எல்லாவற்றையும் தேடித்தேடிப்
படிக்கிற வாசகனாகத்தான் நான் இருக்கிறேன். அதனால் எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு
கொடுக்கப்பட்டபோது, தொலைக்காட்சியில் உனக்கு 52 வாரத்துக்கு நேரம் தருகிறோம் என்றபோது,
நான் சிறுகதைகள் எழுதக் கூடியவன், குறும்படமும் எடுப்பேன்.. நான் எடுத்துக் கொண்ட
கதைகளில் ஒன்று இரண்டு இலக்கிய அங்கீகாரம் பெற்ற கதைகளாகவும் இருக்கலாம். பெரும்பாலான
கதைகளை இலக்கியக் கண்ணோட்டத்தில் பார்க்கிறபோது இலக்கிய அங்கீகாரம் கொண்ட, உன்னதம் கொண்ட
கதைகளாக இவை இல்லை..
கதைகள் என்று அதனைப் பார்க்கிறபோது அழுத்தமான உள்ளடக்கம் கொண்ட கதைகளாக அவைகள்
இருக்கிறது. இந்த நல்ல விஷயங்களை மட்டும் நான் எடுத்துக் கொண்டேன். அதனை நான்
குறும்படங்களாகச் செய்தேன். என்னா பண்றாரு இவரு என்கிறார்கள். பட்டுக்கோட்டை பிரபாகரப்
பண்ணீட்டு இருக்காரு. சுஜாதாவப் பண்ணீட்டு இருக்காரு என்கிறார்கள். ராணி பத்திரிக்கையில்
நிருபராக ஒரு பையன், 23 வயசு கூட இல்லை, தாம்பத்ய நினைவுகள் என ஒரு கதை. நான் அதை
ஒரு அற்புதமான கலைப் படைப்பாக ஆக்கியிருக்கிறேன். பல தீவிர எழுத்தாளர்கள் எனக்கிருக்கிற
இந்தப் பிரச்சினையைப் புரிந்து கொள்வதேயில்லை.
கேள்வி :மேற்கில் செவ்வியல் இலக்கியம் என இருக்கிற எல்லா நாவல்களுமே சினிமாவாக வந்துவிட்டது.
இப்போது சேக்ஸ்பியர், தாஸ்தயாவ்ஸ்க்கி, டால்ஸ்டாய் என்றாலும் சரி, அதற்குப் பிற்பாடு காம்யூ,
ஸார்த்தர், காப்கா என எடுத்துக் கொண்டாலும் சரி, சமகாலத்தில் குந்தர்கிராஸ், அம்பர்தோ
எக்கோ, கார்ஸியா மார்க்வஸ் என எடுத்துக் கொண்டாலும் சரி, தீவிரமான இலக்கியமெல்லாம்
சினிமாவாக வந்துவிட்டது. இந்திய மற்றும் தமிழ்ச் சூழலில் பார்த்தால், அப்படியான தீவிர
இலக்கியம் என்பது சினிமாவுக்குள் வரவில்லை. இதற்கான காரணமாக நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
நீங்கள் பேசும்போது சொன்னீர்கள், ஒரு ஊடகத்திலிருந்து, குறிப்பாக இலக்கியத்திலிருந்து,
இன்னொரு ஊடகத்துக்குள் கொண்டு வரும்போது, சினிமாவுக்குக் கொண்டுவரும்போது, அந்தந்த
ஊடகத்துக்குள் இருக்கிற பிரச்சினைகளைப் பற்றிச் சொன்னீர்கள். அப்படிப் பார்க்கும்போது சில
படைப்புக்களை சினிமாவுக்குள் கொண்டுவருகிற சாத்தியமே இல்லை என்கிற மாதிரி எனக்குத்
தோன்றியது. அப்படிப் பார்க்கும்போது, ஒரு சின்ன உதாரணம் சொல்லலாம் எனில் இலண்டனில்
பாரிபிகன் சென்டரில் நடந்த தாஸ்தயாவ்ஸ்க்கி திரைப்படவிழாவை நான் பார்த்தேன், எங்களுக்குத்
தெரியும் தாஸ்தயாவ்ஸ்க்கியினுடைய படைப்புக்களில் காட்சிபூர்வமான அம்சம் (visual
aspects) என்பதே துப்புரவாக இல்லை. அவருடைய படைப்புகளில், இயற்கை வர்ணணைக்கும்
புறச்சூழலுக்கும் இடமேயில்லை. மனிதனுடைய உளவியல் போராட்டங்களை, அந்த அளவில் அவனுக்குள்
ஏற்படுகிற உளவியல் சிக்கல்களைத்தான் அவர் விவரித்துக்கொண்டு போகிறார். இன்னும்
உரையாடல்தான் அவருடைய நாவல்களில் நெருக்கடிகளைத் தீர்க்கிற அம்சமாக இடம்பெறுகிறது.
இருந்தாலும் அவருடைய நாவல்கள் திரைப்படமாக்கப்பட்டிருக்கிறது.
சினிமாவினுடைய வலிமை என நான் பாரக்கக்கூடியது என்னவெனில், அது பரவலான
மக்களுக்கிடையில் போகிறது. ஒரு குறிப்பிட்ட நேர வரையறைக்குள், மற்றது ஒரு
வரையறுக்கப்பட்ட இடத்துக்குள், சினிமா மிகப்பெரிய அனுபவத்தைக் கொடுக்கக்கூடியதாக
இருக்கிறது. குறைந்தபட்ச சமரசத்தோடு, தமிழிலேயும் இப்படியான படைப்புகளை சினிமா
எனும் ஊடகத்துக்குள் கொண்டு போகக்கூடிய தேவையொன்று இருக்கிறது.
இன்னும் கல்வி வளர்ச்சி இல்லாத நமது நாடுகளில், உயர்ந்த தளத்திலான படைப்புக்களை நாம்
பரந்துபட்ட மக்களிடம் கொண்டு போகவேண்டிய தேவையும் இருக்கிறது.
பாலு: பிரதான காரணம் இலக்கியத்தில், எழுத்தில் சொல்லும்போது வெளிப்படுகிற அந்த கம்பீரம்,
ஆளுமை, அந்த ரூபம், இதை நான் என்னுடைய ஊடகத்தில் கொடுக்க முடியாமல் போகிறபோது, அந்தப்
படைப்பைப் படித்த ஒரு வாசகனுக்கு, அந்த எழுத்தைப் படிக்கிறபோது ஏற்பட்ட ஒரு
சுகானுபவம், அவனுக்குக் கிடைக்கிற கற்பனை சுதந்திரம், அந்தக் கற்பனை சுதந்திரம்
சினிமாவில், அந்தத் தளத்தில் மறுக்கப்படுகிறது. அதற்கு உதாரணமாகத்தான் பாட்டி வடை சுட்ட
கதையைச் சொன்னேன். எழுதி முடிந்தால் அந்தப் படைப்பு பூர்த்தியாகவிட்டது எனக் கொள்ளக்
கூடாது என நான் நினைக்கிறேன். வாசகன் படித்து அனுபவம் கொண்டபிறகுதான் அந்தப் படைப்புச்
செயல்போக்கு முடிகிறது என நான் நினைக்கிறேன்.
எழுத்து என்கிற இந்த ஊடகத்தினுடைய பற்றாக்குறை காரணமாக, (பற்றாக்குறை என நான் எதைச்
சொல்கிறேன் என்பதற்கு பின்னாடி வருகிறேன்) பற்றாக்குறை காரணமாகச் சொல்ல முடியாமல் போன
விஷயம், அப்புறம் கலாரீதியாகச் சொல்லாமலேயே தவிர்த்துக் கொண்ட விஷயம், ஊடகத்தின்
பற்றாக்குறை காரணமாகச் சொல்லாமல் போன விஷயங்களை வாசகன் இட்டு நிரப்பியபின்,
கலாரீதியாகவும் இட்டு நிரப்பியபின்தான், இந்தப் படைப்புப் பூர்த்தியாகிறதென நான்
நினைக்கிறேன். வாசகன் ஒரு சக படைப்பாளியாக மாறுகிறான். இது எழுத்து ஊடகத்தில்
இருக்கிற அட்டகாசமான நிலை. வாசகன் இப்படி இலக்கியத்தைத் தன் வயப்படுத்திக் கொள்கிறான்.
சினிமா பார்க்கிறவன் அப்படி இல்லை. ஒரு சில விஷயங்கள்தான் அவனுடைய கற்பனைக்கு
விட்டுவைக்கப்படுகிறது. காரணம் காட்சித்தன்மை.. இது ஒரு காரணம்.
இலக்கிய உன்னதம் என்று அங்கீகாரம் கொண்ட ஒரு படைப்பு, (இப்போது எழுத்து என்கிற
ஊடகத்தினுடைய பற்றாக்குறை என்ன என்பதனை நான் சொல்ல வருகிறேன்) எழுத்தில் சில விஷயங்களை
எடுத்துச் சொல்லவே முடியாது. சொற்களால் முடியாது. என்னைப் பொறுத்த அளவில் மொழி எனும்
போது, தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், மலையாளம் எனச் சொல்கிற இந்த அர்த்தத்தில் நான் அந்த
வார்த்தையை உபயோகிக்கிறேன். மொழி என்பது ஒரு ஊடகம். மொழி எப்படி இயங்கும்?
வார்த்தைகளிலான வாக்கியங்கள். வார்த்தைகளுக்கான அர்த்தங்கள். இந்த வார்த்தைகள் கோர்க்கப்படும்
விதத்தில் தொனிக்கும் வேறு அர்த்தங்கள். இந்த வார்த்தைகள் சொல்லப்படும் தொனியில் தொனிக்கும்
வேறு அர்த்தங்கள். ஒரே வார்த்தை வெவ்வேறு தொனியில் உச்சரிக்கப்படும்போது வெவ்வேறு
அர்த்தங்களைக் கொடுக்கலாம்
உதாரணமாக நீங்கள் கேட்கிறீர்கள், அப்ப நா கௌம்பட்டுமா? சரி நீ போயிட்டுவா. நா
கௌம்பட்டுமா? சரி போ. இதன் அர்த்தமே வேறு. இதனுடைய தொனியும் முகபாவ மாற்றமும்,
அவைகட்கு வேறொரு அர்த்தத்தைக் கொடுக்கும். இந்த வார்த்தைகளும் அதனுடைய அர்த்தங்களும் ஒரு
சாதாரணமான தளத்தில்தான் நமக்குத் தொடர்பு கொள்ள உதவுகிறது. அதற்கு அப்பால் பல
சமயங்களில் இந்த வார்த்தைகளில் சொல்லமுடியாத விஷயங்களுக்காக, நமது கையசைவுகளை,
முகபாவத்தைக் கடன்வாங்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
அவள் கண்கள் ரொம்ப அழகானது. அவளது கண்ணைப் பற்றி நான் என்ன சொல்லிவிட்டேன்? இலக்கியத்தில்
இந்தக் கண்ணைப்பற்றி வர்ணிக்கிறபோது கயல்விழியாள் என்கிறோம், கண் என்கிற அறிந்த விஷயம்.,
கண் என்கிற அறிந்து கொள்ளாத விஷயம் என இலக்கியம் மொழிக்குள் செயல்படுகிறது. காட்சிரூபம்
மொழி உசச்ரிப்புக்குள், இயற்கைக்குள், உடல் மொழிக்குள் அதனது அசைவுக்குள் செயல்படுகிறது.
இதைத்தான் இலக்கியத்தின் பற்றாக்குறை என்கிறேன்.
என்னுடைய நெருங்கிய நண்பனுடைய தாய் இறந்து போனாள். அந்தத் தாயின் சடலம் அவனுடைய வீட்டு
முகப்பில கிடத்தப்பட்டிருக்கிறது. இவன் அழுது அழுது ஓய்ந்து மேற்கொண்டு அழமுடியாது
திண்ணையில் கையில் தலைகவிழ்த்து உட்கார்ந்திருக்கிறான். நான் அந்தச் சாவுக்குப் போகிறேன்.
என்னுடைய நண்பனை, அவனுடைய தாயை நடுக்கூடத்தில் பிணமாகப் படுக்கவிட்டு, அழுது ஆற்றாது
கண்ணீர் வற்றிப் போய் திண்ணையில் உட்கார்ந்திருக்கும் என் நண்பனை, என்ன வார்த்தைகள் சொல்லி நான்
தேற்றட்டும்? வார்த்தைகள் இங்கு தோல்வியடைகிறது. வார்த்தைகள் இங்கு துயரமா தோற்றுப் போகிறது.
அங்கே போய் நான் ஏதாவது வார்த்தைகளை முட்டாள்தனமாகப் பேசி, ரொம்பவும் அநாகரிகமான, ஒரு
செயற்கையாக ஆனாலும் அது ஆகிவிடும். அதைவிட, எதுவுமே பேசாமல் அவன் பக்கத்தில் போய்
உட்கார்ந்து, அவன் கையை எடுத்து உங்கள் கைக்குள் வைத்துக் கொள்கிறீர்கள். இந்தப் பரிமாற்றத்தை,
இந்தத் தேற்றுதலை, எந்த வார்த்தைகளும் செய்துவிட முடியாது. பற்றாக்குறை என்று நான்
இதனைத்தான் சொல்ல வருகிறேன். மொழி போதாமை கொண்ட ஒரு ஊடகம். மொழி ஒரு துயரகரமான
(miserably) பற்றாக்குறையுள்ள ஊடகம்.
தாஜ்மஹால் என்று வையுங்களேன். கட்டிடக் கலையின் மாபெரும் அற்புதம். ஆயிரம் பக்கங்களில்
உருக்கமாக மாய்ந்து மாய்ந்து வர்ணித்து எழுதினாலும், தாஜ்மஹாலைப் படத்தில்கூட
பார்த்திருக்காத பார்வையாளனுக்கு, உன்னுடைய ஆயிரம் பக்கங்களைப் படித்தபிறகும் வராத
உணர்வை காட்சிரூபம் கொடுத்துவிடும்.
கேள்வி :மொழி சம்பந்தமான ஆய்வுகளைப் பார்க்கும்போது, மொழி நிறைய வரலாற்று ரீதியான
ஆதிக்கத்தையும் கறைகளையும் மௌன அர்த்தங்களையும் கொண்டிருக்கிற அதேபோது, கலாச்சார
ரீதியில் சார்புநிலையிலுள்ள பல விஷயங்களை மொழி தனக்குள் கொண்டு வருவதில்லை என்பது
தெரிகிறது. மொழி சிந்தனையின் ஊடகம் அல்லது கருவி என்று சொன்ன விஷயம் கூட இன்றைக்கு இல்லை.
பாலு: எமது உணர்ச்சிகளைத் துல்லியமாகச் சொல்ல மொழி போதுமானதல்ல.. உணர்ச்சிகளை
மட்டுமல்ல, ஒரு தடவை ஒன்றைப் பார்த்திருந்தால்தான் அதனைச் சம்பந்தப்படுத்த முடியும் அல்லது
கடன் வாங்கிச் சொல்ல முடியும். இந்த மொழியினுடைய இந்தப் பற்றாக்குறைதான், இந்த
ஊடகத்தினுடைய மிகப்பெரிய பலமும் கூட. இந்தப் பற்றாக்குறை காரணமாகச் சொல்லப்படாமல் விட்ட
விஷயங்களை, கலாபூர்வமாக வேண்டுமென்றே தவிர்த்துக் கொண்ட விஷயங்களை, ஒருத்தர் இட்டு
நிரப்புவதற்கான சுதந்திரம் இந்த மொழியில் இருக்கிறது.
இலக்கியங்களைச் சினிமா என்ற ஊடகத்துக்குக் கொண்டுவருவதற்கு முயற்சி பண்ணலாம். தப்பே
இல்லை. ஆனால், எழுத்து என்கிற ஊடகத்தைப் படித்திருக்கக்கூடிய ஒருவனுக்கு, அந்த மூலத்தை
அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட சினிமா மிகப் பெரும்பாலுமான சமயங்களில் ஏமாற்றத்தைக்
கொடுக்கக் கூடும். சில அபூர்வமான சமயங்களில், படிக்கும்போது ஏற்பட்ட சுகானுபவம் படத்தைப்
பார்க்கும்போதும் ஏற்படக் கூடும். ஆனால் அது ஒரு விபத்து. ஒரு விதிவிலக்காக அது
நடைபெறக்கூடும். இந்தக் காரணங்களுக்காக, அந்த ஊடகத்திலிருக்கிற உருவத்தை நான் முற்றிலும்
கைவிட வேண்டியிருக்கிறதனால், அந்த உள்ளடக்கத்தை மட்டும் நான் எடுத்துக் கையாள
வேண்டியிருக்கிற காரணத்தினால், நான் தயங்குகிறேன்.
நாம் பண்ணலாம். பண்ணக்கூடாது என்பது இல்லை. அந்த எழுத்தைப் படிக்காதவனுக்கு, எழுத்து
ஊடகத்தை எதிர் கொள்ளாதவனுக்கு இந்தப் படத்தைக் கொடுக்கலாம். ஏனென்றால், இவன் மூலத்தை
அறியாதவன். ஆகவே முதன் முதலாக எதிர்கொள்வதால் அந்தக் கரு இவனை ஆகர்ஷிக்கலாம்.
இலக்கியத்தைச் சினிமாவில் கொண்டு வரவேண்டும் எனச் சொல்வது விருப்பார்வ எண்ணம் (wishful
thinking). இதில் தப்பேயில்லை. என்னளவில், அந்த உருவத்தோட ஒரு இலக்கியத்தில் நான் பெற்ற
அனுபவம், இங்கே நஷ்டப்பட்டுப் போகுமோ என்கிற ஒரு பயம் எனக்கிருக்கிறது. ஒரு கதையை ஒரு
ஓவியமாக மாற்றுவது அவ்வளவு இலகுவான காரியமல்ல.. ஓவியனுடைய ஊடகத்திலிருக்கிற
பாண்டித்யம் காரணமாக அவனும் அதை பிரக்ஞைபூர்வமான தனித்த படைப்பாக ஆக்க முடியும். அந்த
நொடியில் தோன்றுகிற, கரையுடைத்த கற்பனா சுதந்திரம் இதில் இருக்காது. இப்படியான
விஷயங்களை ஒரு தனிப்பட்ட ஊடகம் சார்ந்த விஷயமாக நீங்கள் பார்க்க வேண்டுமே ஒழிய, ஒப்பிட்டு
நோக்கக் கூடாது என நான் நினைக்கிறேன். மாறுபட்ட ஊடகங்கள் மாறுபட்ட அலைவரிசையைக்
கொண்டிருக்கின்றன. மாறுபட்ட இலக்கணங்களைக் கொண்டிருக்கின்றன. ஆக, நமக்குள்ளயே ஒரு
கட்டுப்பாட்டை விதித்துக்கொண்டு, அந்தந்த ஊடகத்துக்குரியதாக அதனைப் பார்த்தால் அது நல்லது.
கேள்வி :மொழியினுடைய பற்றாக்குறை, அதனுடைய தனித்தன்மை போன்றவற்றையும் நாம் கவனத்தில்
எடுத்துக்கொண்டு பார்த்தால், இப்போது இந்திய சினிமாவினுடைய நல்ல படங்கள் எல்லாம் ஓரளவு
இலக்கியத்தில் இருந்து வந்திருக்கிறதைப் பார்க்கலாம். வங்கத்திலேயும், கேரளத்திலும்,
ரித்விக் கடக்கினுடைய படங்கள், ரேயினுடைய பெரும்பாலுமான படங்கள், கோவிந்த நிஹ்லானி
மற்றது அடுர் கோபாலகிருஷ்ணன், வாசதேவன் நாயர், கௌதம் கோஷினுடைய படங்கள் போன்றவை
எல்லாமுமே இலக்கியத்தை அடிப்படையாக் கொண்டது எனப் பார்க்க முடிகிறது. அப்பிடிப்
பார்த்தால் தமிழ்ச் சூழலில் அப்படி இல்லைன்னு சொல்லலாம்?
பாலு: இலக்கியத்துக்கும் சினிமாவுக்குமான இடைவெளி தமிழில் மிகப் பெரியது. அப்படியான
உறவேயில்லை, தமிழில் இப்படி இருந்ததாகவும் சரித்திரம் கிடையாது. ரேயைப் பற்றிச்
சொல்லும்போது, ரேயினுடைய காலத்தில் கடுமையான விமர்சனங்கள் ரேயிக்கு எதிராக
வைக்கப்பட்டது. பதேர் பாஞ்சாலியை எடுத்துக்கொண்டு ரே தன்னுடைய மீடியத்துக்கான மாற்றங்களைச்
செய்தபோது, நாவல் படித்த அறிவுஜீவிகள் கடுமையாக எதிர்க்கவும் செய்தார்கள். அதற்கு ரே
இப்படிப் பதில் சொல்லியும் இருந்தார்: ’நாவலின் ஒவ்வொரு வார்த்தைக்கும் முழுக்க முழுக்க
நான் விசுவாசமாக இருக்க வேண்டிய அவசியம் எனக்குக் கிடையாது. நாவல் என்னைத் தூண்டிப்
பாதித்தது. நான் ஒரு படம் எடுத்திருக்கிறேன்’ என்றார்.
கேரளாவில் எடுத்துக் கொண்டால், கேரளாவினுடைய வியாபார சினிமா உட்பட நான் சொல்கிறேன்,
கேரளாவில் அங்கீகரிக்கப்பட்ட நல்ல நாவல்கள், ஜனரஞ்சக நாவல்கள் கூட, ஏறக்குறைய எல்லா
நாவல்களுமே செம்மீன் உள்பட படமாக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் ஏன் அது நடக்கவில்லை என்கிறபோது, ஒரு சராசரி மலையாளிக்கும் ஒரு
சராசரித் தமிழனுக்குமான வித்தியாசத்தை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. கேரளப்
படைப்பாளிகளோடு பார்க்க தமிழில் எழுதிக் கொண்டிருப்பவர்கள், எந்தக் காலகட்டத்திலும், எந்த
வகையிலும் குறைந்தவர்கள் என்று சொல்லமுடியாது. ஆனால் வாசகர்களைப் பொறுத்தவரை,
கேரளாவில் அதிக அளவிலான எழுதப் படிக்கத் தெரிந்த விகிதத்தினாலோ என்ன காரணத்தாலோ
அவர்களிடம் நல்ல இலக்கியம், அரசியல், தமிழர்களோடு ஒப்பிடும்போது இருக்கிறது.
இங்கே சராசரி வாசகன் என எடுத்துக் கொண்டால் கல்கி, குமுதம், ஆனந்த விகடன் என
திருப்திப்பட்டுப் போகிற, அதை ஒரு தகுதி எனக்கூடக் கருதிக் கொண்டிருக்கிற வாசகச்சூழல்.
அங்கேயும் இப்படி ஜனரஞ்சக எழுத்துக்களைப் படிக்கிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அதற்கும்
அப்பாற்பட்டு, கொஞ்சம் காத்திரமான நல்ல இலக்கியங்களைப் படிக்க அவர்களுக்கு இருந்த கல்வி
வசதி, படிப்பறிவு அதிகரித்தபடியில் இருக்கிறதனால், இயற்கையாகவே அதிகமான
விழிப்புணர்வு இருக்கிறதனால் அவர்கள் அப்படி இருக்கிறார்கள். அவர்களுடைய வாசகர்கள்
இளையவர்கள், தமிழுடன் ஒப்பிடும்போது அவர்களது மொழி இளையமொழி. அவர்கள் மேலே போக
நினைக்கிறார்கள். தமிழை எடுத்திக்கொண்டீர்களானால், தமிழனுடைய கலாச்சார உணர்வு, இவன்
வந்து இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளினுடைய சிகரங்களைத் தொட்டவன். சிலப்பதிகாரம், சங்க
இலக்கியம், சங்கம் மருவிய இலக்கியம், பக்திப்பாடல்கள் என- இலக்கியத்தில் மட்டுமல்ல, கட்டிடக்
கலையில், இசையில், நடனத்தில், இலக்கணம் எழுதக்கூடிய அளவுக்கு பாண்டித்யம் உள்ளதாக இருந்த
ஒரு இனம் இது. நூற்றாண்டுகளாக அது எல்லாம் வீழ்ந்துவிட்டது. அதனால் நாம் இது
எல்லாவற்றுக்கும் புதிதாக இருக்கிறோம். புதிதாக ஒரு அறிதலோ கட்டி எழுப்பிப்
போகவேண்டும் என்கிற ஆர்வமோ நம்மிடம் இல்லை.
இலங்கைத் தமிழரோடு ஒப்பிட்டுப் பாரத்துச் சொல்ல வேண்டுமென்றால், அவன் கலாச்சார ரீதியாகத்
தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்கிறான். ஒரு இலக்கை அடையவேண்டுமென்று அவன் போகிறான்.
ஆனால் இங்கு நாம் கல் தோன்றி முன் தோன்றாக்காலத்தே மூத்தகுடி என இருக்கிறோம். தமிழனுக்கு
அருமையான அடையாளம் இருக்கிறது. அது இவனுக்குச் சொந்தமானதல்ல. இவனுடைய
மூதாதையர்களுக்குச் சொந்தமானது

No comments:
Post a Comment