Monday, 10 October 2011

சினிமாவுக்கு ரத்த வெறி வேண்டுமா? – இயக்குநர் பாலுமகேந்திரா


நம் சமூகத்தில் தவிர்க்க  முடியாமல் ஆதிக்கம் செலுத்துகிற ஊடகமாக திரைப்படம் மாறிப் போயிருந்தாலும் அது குறித்த வெளிப்படையான விமர்சனங்கள் அபூர்வமாகிவிட்ட நிலையில் – சென்னையில் ”சன்டே இண்டியன்”  பத்திரிகை சார்பில் ”தமிழ் சினிமா – உலக சினிமா” கருத்தரங்கம் அண்மையில் நடந்தது.
தலைமையேற்றவர் இயக்குநர் பாலுமகேந்திரா. அவருடைய பேச்சில் மனம்விட்டுப் பரிமாறிக் கொள்கிற மென்மை தெரிந்தது. ”முன்பெல்லாம் நமது படங்கள் ஒலிச்சித்திரத்தை ஒளிப்பதிவு பண்ணிய மாதிரி தான் இருந்தன. இருந்தாலும் அதை நிராகரித்துவிட முடியுமா?  பொழுது போக்காக யாரும் தன் குடும்பத்துடன் சென்று எந்தத் தயக்கமும் இல்லாமல் பார்க்கக்கூடிய விதத்தில் அவை இருந்தன. எந்த மனமும் அதனால் மோசமானபடி பாதிக்கப்படவில்லை.
அதற்குப்பிறகு இப்போது எடுக்கப்படுகிற படங்களும் பொழுதுபோக்கிற்காக எடுக்கப்பட்டாலும் குடும்பத்துடன் சென்று பார்க்கக் கூடிய விதத்தில் இப்போதுள்ள படங்கள் இருக்கிறதா? அளவுகடந்த வன்முறை அநேகப் படங்களில் இருக்கிறது. எங்கும் ரத்தவெறி நிறைந்திருக்கிறது. இப்படித்தான் திரைப்படத்தை எடுக்க வேண்டுமா? வெகுஜன சினிமாவுக்கு வணிகநோக்கு இருப்பது அவசியம் தான். இருந்தாலும் இந்த அளவுக்கு ரத்தவெறி வேண்டுமா என்பதை இளைய  இயக்குநர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
சமீபத்தில் பார்த்த ஒரு திரைப்படம். அதன் பெயரைச் சொல்ல விரும்பவில்லை.
படத்தில் ஒரு காட்சி. ஒருவரைக் குத்திக் கொல்கிற காட்சி. அதைக் காட்டுகிற போது திரையரங்கில் எழுந்து நின்று கை தட்டுகிறார்கள் பார்வையாளர்கள். பார்த்துக் கொண்டிருந்த நான் அதிர்ந்து போனேன். கொலைக் காட்சியில் தெரியும் குரூரத்தை ரசித்துக் கை தட்டுகிற அளவுக்கு – இது என்ன விதமான ரசனை?
இன்னொன்று – நல்ல சினிமா என்பது என்ன?  நம்முடைய வாழ்க்கையை ரத்தமும் சதையுமாகப் பிய்த்து எடுக்கப்பட்ட மாதிரி இருந்தால் அது நல்ல சினிமா. நல்ல உணவு மாதிரி இது ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம். உலக சினிமா என்று சொல்கிறோமே. அமெரிக்காவில் எடுக்கப்படுகிற வெகுஜனப் படங்கள் நம் பார்வைக்கு வருகின்றன. நாம் இன்றைக்குச் சிலாகிக்கிற ஈரானிய சினிமா உலகிலும் வெகுஜன சினிமா என்கிற ஒன்று இருக்கத்தானே செய்யும்.
இந்த வெகுஜன அளவுகோலை மீறி நான் எடுத்தவை இரண்டு படங்கள் தான். வீடு, சந்தியாராகம் இரண்டையும் குறைந்த பட்ஜெட்டில் நாற்பது லட்ச ரூபாய்க்குள் எடுத்தேன். அதைத் தொடர்ந்து நான் ரசித்த சிறுகதைகளை தனியார் தொலைக்காட்சியில் தொடராகப் பண்ணினேன். திரைப்படத்தில் நான் ஊன்றி நிற்க முடிந்ததற்குக் காரணம் நான் வாசித்த இலக்கியம் தான். அதுதான் என்னுடைய படங்களுக்கான அஸ்திவாரம், பலம,  எல்லாமும்.
திரைப்படத்தில் பங்காற்ற விரும்புகிறவர்கள் தொடர்ந்து நல்ல இலக்கியத்தை வாசிக்க வேண்டும். அப்போது தான் எதை எப்படிக் காட்சிப்படுத்த முடியும்? எந்த மாதிரியான மொழியில் சொல்ல முடியும் என்பதை உணர முடியும் . உள்ளடக்கம், அதை வெளிப்படுத்துவதற்கான உருவம் இரண்டையும் அந்த வாசிப்புதான் உருவாக்கிக் கொடுக்கும்.”  என்று தன்னுடைய அனுபவங்களின் பின்னணியில் இதமான மொழியில் சொல்லிக் கொண்டு போனார் பாலுமகேந்திரா.
அடுத்துப்பேச வந்த ”மைனா” பட இயக்குநரான பிரபுசாலமன் தன்னுடைய பட அனுபவத்தை விவரித்தார். ”எந்த நடிகருக்காகவும் எந்த கேரவன் வேனுக்கு முன்னால் காத்துக்கிடந்து நான் படம் பண்ணவில்லை. கதை முடிவானதும் கேமிராவைத் தூக்கிக் கொண்டு மலைப் பகுதிக்குப் போய்விட்டேன். அங்குள்ள மக்களைப் பயன்படுத்திக் கொண்டேன். அப்போதுதான் மண்ணின் தன்மையையும் வெளிக் கொண்டுவர முடியும். நானே தயாரித்ததால் குறிப்பிட்ட சில காட்சிகளை அதன் நீளத்தைக் குறைக்காமல் பதிவாக்கினேன். மற்ற தயாரிப்பாளர்களாக இருந்தால் தயங்கியிருப்பார்கள். மண்ணின் மொழியில் சொன்னால் ரசிக்கத் தயாராக இருக்கிறார்கள் மக்கள். இப்போது இயக்கிக் கொண்டிருக்கும் ”கும்கி” யிலும் இதே பாணியைத்தான் பின்பற்றியிருக்கிறேன். கேமிரா கோணங்களைக்கூட வெகு இயல்பாகப் பண்ணியிருப்பதை ”மைனா”  படத்தில் பார்த்திருக்கலாம்.”
ஆடுகளம் பட இயக்குநரான வெற்றிமாறன் ”படத்தில் சில சமயம் வன்முறைக் காட்சி இடம்பெறுவது அதன் தேவை கருதித்தான். ஆடுகளம் படத்தில் எங்கும் வலிந்து வன்முறை புகுத்தப்பட்டிருக்காது. வன்முறை வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கிறபோது அது படத்திலும் இடம் பெறத்தானே செய்யும்.” என்றார்.
கைவசம் குறிப்புகளுடன் சினிமா அரசியல் பற்றிப் பேச வந்தார் இயக்குநரும், நடிகருமான மணிவண்ணன். ”அரசியலை நம் வாழ்விலிருந்து பிரித்துவிட முடியாது. ஒவ்வொன்றிலும் கலந்திருக்கிறது அரசியல். சார்லி சாப்ளினின் ”மாடர்ன் டைம்ஸ்”  படத்தில் எப்பேர்ப்பட்ட அரசியல் சொல்லப்பட்டிருக்கிறது. அதில் ஒரு காட்சியில் பல இயந்திரப் பற்களுக்கிடையில் சிக்கி வெளி வருவார் சாப்ளின். ஒரு தொழிலாளி சக்கையாகிக் கிடப்பதை இதைவிட வலுவாக எப்படிச் சொல்ல முடியும்? இப்படிப் பல படங்கள்.
நம்முடைய திரைப்படங்களில் சுதந்திரத்திற்கு முன்னால் சில புரட்சிகரமான கருத்துக்களை எதிர்ப்புகளுக்கிடையில் சினிமாவில் சொன்னவர்கள் இருந்தார்கள். சுதந்திரத்திற்குப் பிறகு அந்த அரசியல் உணர்வு குறைந்து போய்விட்டது. நமக்கு மிகவும் அருகில் இருக்கிற இலங்கையில் நடந்த இனப்படுகொலை நம்மை உலுக்க வேண்டாமா?ஆனால் இப்போது புதுப்புது இயக்குநர்கள் தமிழ் சினிமாவுக்குள் வந்திருக்கிறார்கள். அவர்கள் புதுக்கோணத்தில் படங்களை எடுக்கிறார்கள்.
‘பூ’ படத்தில் ஒரு காட்சியைப் பார்த்தபோது நான் கண் கலங்கிவிட்டேன். அதில் இரண்டு பனை மரங்களைக் கூட கதாபாத்திரங்களைப் போலப் பயன்படுத்தியிருந்தார்கள். இது எந்தத் தொழில் நுட்பமும் சார்ந்ததல்ல. கதைக்களம் சார்ந்த விஷயம். இப்போது கேமிராவும், ஒலிப்பதிவுக் கருவிகளும் அதிநவீனமாக வந்து கொண்டே இருக்கின்றன. இருந்தாலும் அதன் வழியாக எதைச் சொல்லப் போகிறோம்? இங்குள்ள எந்த வாழ்க்கையைச் சொல்லப் போகிறோம்?
அந்த விதத்தில் தமிழ் சினிமாவை வளப்படுத்துகிற விதத்தில் புதிய இயக்குநர்கள் உருவாகுவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
ஈரானிய வாழ்க்கையைச் சித்தரிக்கிற படத்தை உலக சினிமா என்று ரசித்தால் – நம்முடைய வாழ்க்கையை அசலாகச் சித்தரிக்கிற தமிழ்ப்படத்தை ஏன் அப்படிச் சொல்லக் கூடாது? அப்படிப் பார்க்கும்போது இங்குள்ள மனிதர்கள் சார்ந்த அழுக்கான அம்சங்கள், அந்த வட்டார மொழி, அவர்களுடைய சண்டை சச்சரவுகள் எல்லாம்தான் வரும். அதை ஒதுக்கிவிட முடியாது.” என்று பேசிய மணிவண்ணன் பேச்சுக்கு நல்ல வரவேற்பிருந்தது.
”சொல்லாமலே”,  ”பூ” படங்களை இயக்கிய சசி தன்னுடைய ”பூ” பட அனுபவத்தைச் சுவாரசியமாகச் சொன்னார். ” பூ” – படம் எடுப்பது என்று முடிவானதும் அந்தக் கரிசல் மண்ணுக்குப் போக வேண்டும் என்று தயாரிப்பாளரிடம் சொல்லிவிட்டு அங்கு போய்விட்டேன்.
கரிசல் மண்ணில் உள்ள பல தீப்பெட்டித் தொழிற்சாலைகளுக்குப் போனேன். அங்கு பணியாற்றிய தொழிலாளர்களைச்  சந்தித்துப் பேசினேன். பட்டாசுத் தொழிற்சாலைகளுக்கும் போனேன். திரைப்படத்தில் பட்டாசுத் தொழிற்சாலை இதுவரை இடம்பெறாததால் சூழ்நிலையை சற்று மாற்றினேன்.
அங்கு வயற்காட்டில் ஆடுகளை வைத்து ”கிடை” வைக்கும் கீதாரிகளின் அனுபவத்தைப்பெற அங்குபோய் அவர்களுடன் ஒருநாள் இரவில் தங்கினேன். ஒரு வயல்வெளி. அதில் நூற்றுக்கணக்கான ஆடுகள். சிறு குட்டிகளை மட்டும் தனியாக அடைத்திருந்தார்கள்.
காலை விடிந்ததும் ஆட்டுக் குட்டிகளைத் திறந்து விடுவார்கள். எதிரே இருக்கிற ஆட்டு மந்தையில் தங்களுடைய தாய் ஆடுகளைத் தேடிக் குட்டிகள் கத்திக் கொண்டே ஓடுவதைப் பார்த்தபோது எனக்குச் சிலிர்ப்பாக இருந்தது. ஆனால் திரைக் கதைக்குள் இந்தக் காட்சி பொருந்தி வராததால் அதை சினிமாவுக்குள் நான் கொண்டு வரவில்லை. அங்குள்ள மனிதர்கள், அவர்கள் பேசும் வட்டாரமொழி என்று பல விஷயங்களை அங்கு சென்று தங்கிக் கற்றுக்கொண்டு படம் எடுத்ததால் ‘பூ’ படத்தை அசலான வாழ்க்கைக்கு நெருக்கமாக இருக்கிற விதத்தில் எடுக்க முடிந்தது” என்று பேசினார் இயக்குநர் சசி.
பல நூறு கோடி ரூபாய் பணம் புழங்கும் தமிழ்த் திரைப்பட உலகில் இம்மாதிரியான விவாதங்களும், கேள்விகள் எழுவதற்கான வாய்ப்பும் அடிக்கடி உருவானாலே – அது திரையுலக அடிப்படையில் சில சலனங்களையாவது ஏற்படுத்தும்.

No comments:

Post a Comment