Monday, 10 October 2011

பாலுமகேந்திராவின் வீடு

பல வருடங்கள் கழித்து மீண்டும் பார்க்கும்போது புதிதாய் பல விஷயங்களை உள் வாங்க முடிந்தது. இளையராஜா பாலுவிற்குத் தன் ஒட்டுமொத்த உன்னதங்களையும் வாரி வழங்கி இருக்கிறார். வீடு படத்தின் மிகப் பிரதானமான விஷயம் இசைதான். இத்தனை வருடங்களுக்குப் பின்னரும் அந்த வயலினிசையும், குழலிசையும் மனதை என்னவோ செய்தது. ராஜாவிற்கும் ரகுமானிற்கும் இருக்கும் மிக முக்கியமான வித்தியாசம் நிலைத் தன்மையாகத்தான் இருக்க முடியும். நாட்பட நாட்பட எல்லாமுமே தேய்ந்து போவது இயல்புதான். சில விஷயங்கள் மட்டுமே முதல் முறையின் அதே பரவசத்தை வாழ்நாள் முழுமைக்கும் தக்க வைத்துக் கொள்கின்றன. ராஜாவின் சில இசைக்கோர்வைகள் அந்த ரகம். வீடு படத்தில் இடம்பெற்ற மூன்று இசைக்கோர்வைகளும் Nothing But wind தொகுப்பிலும் கேட்ட நினைவு. எது முன்னர்? எது பின்னர்? எனத் தெரியவில்லை.

பானுச்சந்தர் ஒரு பேட்டியில் இப்படி சொன்னார். “பாலு அர்ச்சனாவோட ஒரு படம் பண்ண கூப்பிட்டிருந்தார். படத்தோட கத என்ன சார்னு கேட்டேன். ஒரு பொண்ணு வீடு கட்றா ன்னு நிறுத்தினார். அப்புறம் என்ன சார்னேன். அவ்ளோதான் என்றார்”.

ஒரு திரைப்படத்தின் மொத்த கதையையும் ஒரு வாக்கியத்தில் சொல்வது அத்தனை எளிமையாய் இருக்காதுதான். ஆனால் வீடு படத்தின் கதையை ஒரு வாக்கியத்தில் சொல்லிவிடலாம். இலக்கியத்திலும் சரி, திரையிலும் சரி அடக்கி வாசித்தல் என்பது மிக முக்கியமானது. ஒரு படைப்பு தன்னளவில் சில பார்வைகளைத் திறக்கச் செய்ய வேண்டுமே தவிர படைப்பாளியின் திணிப்பாக இருக்கக் கூடாது. தமிழ் சினிமாவைப் பொறுத்த வரை இந்த தன்னை முன் நிறுத்துதலில் கமலும் பாலச்சந்தரும் மிக மோசமான உதாரணங்கள்.

வீடு படம் எல்லா விதத்திலும் கச்சிதமான படைப்பாக இருந்தது. கலாராணி காண்ட்ராக்டரைத் திட்டித் தீர்க்கும் காட்சியில் மட்டுமே நம்மால் உரத்த சப்தத்தைக் கேட்கமுடிகிறது. பாலச்சந்தரின் ஐம்பதிற்கும் மேற்பட்ட ‘பெண்ணிய’ படங்கள் சொல்லத் தவறியதை மூன்று நிமிடக் காட்சியில் பாலு கச்சிதமாக முன் வைத்திருப்பார். இந்த ஒரு காட்சியைத் தவிர்த்து மற்ற எல்லாக் காட்சிகளின் வசனங்களும் வயலினிசை, குழலிசை போலத்தான் காதில் விழுகிறது.

தாத்தா கதாபாத்திரம் ரொம்பவே பிடித்திருந்தது. பாலு வயோதிகத்தின் அழகை வெகு நுணுக்கமாய் பதிவு செய்திருப்பார். அந்தோணி செத்துப் போய்விட்ட தகவலை நண்பர் சொல்லும்போது சொக்கலிங்க பாகவதர் துணுக்குறும் காட்சி ஒன்று போதும். மரணத்திற்கான காத்திருப்பை அத்தனை அழகாய் வெளிப்படுத்தியிருந்த காட்சி அது. படத்தின் எல்லாக் காட்சிகளுமே குறுங்கவிதைகள்தாம். பெரும்பாலும் சின்ன சின்ன ஷாட்களிலேயே முடிந்து போகிற திரைக்கதை. கேமிராவின் கோணம், வெளிச்சம், வண்ணம் எதைப்பற்றியும் கிஞ்சித்தும் கவலைப்படாமல் செல்லுலாய்டில் கச்சிதமாய் ஒரு கவிதையை சாத்தியமாக்கி இருக்கிறார்.

படத்தின் நீளமான ஷாட் தாத்தா வீட்டைப் பார்க்கப் போகும் காட்சிதான். அவர் கிளம்பும்போதே இந்தக் காட்சி இப்படித்தான் முடியும் என யூகிக்க முடிகிறது. பேருந்தில் குடையைத் தவறவிடும் காட்சியிலேயே அவரது மரணம் ஊர்ஜிதமாகிறது. மரணத்தை தொலைபேசியில் கேட்கும் அர்ச்சனாவின் அதிர்ச்சியும், இருள் கவியும் நேரத்தில் ஆட்கள் சூழ எரியும் சிதையும், ஒரு மரணத்தை முழுமையாகப் பதிவு செய்ய போதுமானவை.

அர்ச்சனா பிறந்ததே பாலுவின் படங்களில் நடிப்பதற்குத்தானோ? என்ற சந்தேகம் இந்த படத்தைப் பார்க்கும் போதும் வரலாம். பெண்மை மீதான ஆழமான கனவுகளை, மிகை பிம்பங்களை வளர்த்துக் கொள்ள அர்ச்சனா போன்றவர்கள் காரணமாக இருக்கிறார்கள் என்பதைத் தவிர்த்து அவரின் மீது எனக்கெந்த பிரச்சினையும் இல்லை.

No comments:

Post a Comment