Monday, 24 October 2011

ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திராவை . இவர் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி எனும் சிற்றூரில் பிறந்தவர். பெஞ்சமின் மகேந்திரா என்ற பாலு மகேந்திரா யாரிடமும் உதவி ஒளிப்பதிவாளராக இல்லாமல் பூனே திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலையக் கற்றுக் கொண்டு தமிழ்த்திரையுலகில் நுழைந்தவர். இவர் ஒளிப்பதிவு செய்த முதல் தமிழ்ப்படம் முள்ளும் மலரும் 1977ல் வெளியானது. ஆனால் அதற்கு முன்னரே கேரள அரசின் மாநிலவிருதை ஒளிப்பதிவுக்காக 1972லேயே பெற்றவர். இவரது பட்டயப்படிப்பு திரைப்படத்தைக் கண்டு செம்மீன் படப்புகழ் ராமு காரியாத் தனது நெல்லு படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அழைத்தார். அந்த படத்திற்கு விருது கிடைத்ததைத் தொடர்ந்து சுக்கு, சட்டக்காரி, பணிமுடக்கு போன்ற முக்கியமான மலையாளைப்படங்கள் பலவற்றுக்கு ஒளிப்பதிவு செய்தார்.
பாலுமகேந்திரா இயக்கிய முதல் படம் கோகிலா என்ற கன்னடப்படம். தமிழில் இயக்கிய முதல் படம் அழியாத கோலங்கள். அதற்குப் பின் மூடுபனி, மூன்றாம் பிறை, நீங்கள் கேட்டவை, இரட்டை வால் குருவி, வீடு, சந்தியாகிரகம், வண்ண வண்ண பூக்கள், மறுபடியும், சதிலீலாவதி, ராமன் அப்துல்லா, ஜூலி கணபதி, அது ஒரு கனாக்காலம் போன்ற படங்களைத் தமிழில் இயக்கினார். அதே சமயம் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் இடையிடையே ஓலங்கள், நீரஷ்னா, சத்மா ஆகிய படங்களையும் இயக்கி வந்தார்.
ஒரு படைப்பாளி அல்லது கலைஞன் தான் சார்ந்த துறை மூலம் தனக்கு மட்டு மின்றி பிறருக்கும் ஒரு அடையாளத்தை உருவாக்குகிறான். அந்த பெருமையும் இவருக்கு உண்டு. இவர் இயக்கிய கதைநேரம் பல படைப்பாளிகளின் ஆக்கங்களைக் காட்சிப்படுத்தி சின்னத்திரை மூலம் அடையாளம் காட்டியது. இவருக்கான மற்றொரு சிறப்பம்சம் இவர் பெற்ற விருதுகள். இயக்கம்(வீடு, சந்தியாகிரகம், வண்ன வண்ண பூக்கள்), சிறந்த திரைக்கதை(கோகிலா, அழியாத கோலங்கள்), படத்தொகுப்பு(ஜூலி கணபதி) ஆகிய மூன்று துறைகளிலும் தேசிய விருது பெற்ற ஒரே கலைஞன் என்ற பெருமை இவரையே சாரும்.
தனக்கென ஒரு தனி பாணியினை வகுத்துக் கொண்டவர்களில் பாலுமகேந்திரா முன்னோடி. இயற்கை ஒளியினை அதிகமாக பயன்படுத்துவது இவரது தனித்துவம் எனலாம். ஒரு விதை மரமாகி அதிலிருந்து ஆயிரமாயிரமாய் விதைகளை விட்டுச் செல்லுதலே அந்த விதையின் பூரணத்துவம். பாலுமகேந்திரா எனும் விருட்சமும் அப்படித்தான் பூரணத்துவம் பெற்று நிற்கிறது. இவரிடம் உதவியாளராக பணியாற்றிய பாலா, சீமான், வெற்றிமாறன், ராம் ஆகிய இயக்குனர்கள் தனக்கென ஒரு தனித்துவத்தை வரித்துக் கொண்டவர்கள்தாம்.

No comments:

Post a Comment