Monday, 10 October 2011

என் படங்களின் நெகட்டிவ் அழிந்து விட்டது" - பாலுமகேந்திரா கண்ணீர்!

உலகிலேயே அதிக திரைப்படங்கள் தயாராகும் மொழிகளில் தமிழும் ஒன்று. ஆனால், இதுவரை தமிழ் சினிமாவுக்கென முறையான ஆவண காப்பகம் இங்கு கிடையாது. இந்த குறைபாட்டால் சில நல்ல படங்களை நாம் இழந்து கொண்டிருக்கிறோம்.

சத்யாஜித்ரேயின் புகழ் பெற்ற திரைப்படம் 'பதேர் பஞ்சலி.' சர்வதேச அளவில் பல விருதுகளை பெற்றது. இதன் ஐம்பதாவது ஆண்டு நிறைவை ஒட்டி கேன்ஸ் திரைப்படவிழாவில் இப்படம் சிறப்பு திரையிடலாக திரையிட முடிவு செய்யப்பட்டது.
ஆனால், அதற்குப் பிறகுதான் இந்தியாவில் 'பதேர் பஞ்சலி'யின் ஒரு நெகடிவ்கூட இல்லை என்பது தெரிய வந்தது. தீவிர தேடலுக்குப்பின் கலிபோர்னியாவிலுள்ள பல்கலைக்கழகம் படம் வெளியானபோது படத்தின் பிரிண்ட் ஒன்றை பணம் கொடுத்து வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
சிதிலமான நிலையிலிருந்த அந்த பிலிமை, ஒரு கோடி ரூபாய் செலவழித்து புதுப்பித்து பிறகு கேன்ஸில் திரையிட்டார்கள்.
இந்தப் படத்திற்கு ஏற்பட்ட நிலைமை பாலுமகேந்திராவின் 'வீடு', 'சந்தியாராகம்' படங்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது. 'அது ஒரு கனாக்காலம்' திரைக்கதை வெளியீட்டு விழாவில், 'வீடு', 'சந்தியாராகம்' படங்களின் நெகடிவ்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்ததை குறிப்பிட்ட பாலுமகேந்திரா, "என் காலத்திற்குப் பிறகு எனது படங்கள் என் பெயரை சொல்லும் என நினைத்தேன். அதற்கு வழி இல்லாமல் போகும் போல் இருக்கிறதே" என கண்கலங்கினார்.
திரைப்படங்களுக்கு மானியங்களை வாரியிறைக்கும் அரசு, நல்ல திரைப்படங்களுக்கு ஓர் ஆவண காப்பகத்தை ஏற்படுத்துவது மிக மிக அவசியம்!

No comments:

Post a Comment