Saturday, 8 October 2011

பாலு மகேந்திராவின் வருத்தம்!

இன்றைய இளம் இயக்குநர்கள் பலருக்கு படிக்கும் பழக்கமே இல்லை. டிவிடியுடன் அவர்களது உலகம் சுருங்கிப் போகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார் இயக்குநர் பாலுமகேந்திரா.

மோசர் பேரின் மூன்றாவது தயாரிப்பான பூ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நடந்தது. ஸ்ரீகாந்த், பார்வதி ஜோடியாக நடித்துள்ள பூ திரைப்படத்தை ரோஜாக்கூட்டம், சொல்லாமலே, டிஷ்யூம் படங்களை இயக்கிய சசி இயக்கியுள்ளார்.

எழுத்தாளர் தமிழ் செல்வனின் நாவலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் இது. இசைத் தட்டின் முதல் பிரதியை எழுத்தாளர் தமிழ்செல்வன் வெளியிட அதனை, சசியின் குரு இயக்குநர் வசந்த் பெற்றுக் கொண்டார்.

விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பாலு மகேந்திரா பேசியதாவது:

இன்றைய இளம் இயக்குநர்கள் டிவிடியைப் பார்ப்பதோடு தங்கள் அறிவுத் தேடலை நிறுத்திக் கொள்கிறார்கள். படிக்கிற பழக்கமே அவர்களுக்கு இல்லை.

அதனால்தான் என் உதவியாளர்களுக்கு ஒரு உத்தரவு போட்டிருக்கிறேன். தினமும் ஒருகதை படிக்க வேண்டும். அதை சுருக்கமாக எழுதி என்னிடம் காட்ட வேண்டும் என்பதே அது.

ஆனால் சசி, தன்னுடைய இந்தப் படத்தை ஒரு நாவலின் அடிப்படையில் உருவாக்கியிருப்பது சந்தோஷமாக உள்ளது. உண்மையில் இந்தக் கதையை நான் தான் கேட்டிருந்தேன். அப்போது இதன் திரைப்படமாக்க உரிமை சசிக்குக் கொடுப்பட்டுவிட்டதை அறிந்து சந்தோஷப்பட்டேன், என்றார்.

விழாவில் இயக்குநர்கள் பாலா, அமீர், மிஷ்கின் உள்ளிட்ட முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் பங்கேற்றனர்.

மோசர் பேர் நிறுவன தலைமை செயல் இயக்குநர் தனஞ்செயன் அனைவரையும் வரவேற்றார்.

No comments:

Post a Comment