பாலுமகேந்திராவின் “மூன்றாம் பிறை”
கமல் தேசிய விருது பெற்றார்
பாலுமகேந்திராவின் டைரக்ஷனில் உருவான “மூன்றாம் பிறை”யில் பிரமாதமாக நடித்து தேசிய விருது பெற்றார், கமலஹாசன்.கமல் தேசிய விருது பெற்றார்
ஒளிப்பதிவாளராக தன் கலை வாழ்க்கையைத் தொடங்கிய பாலுமகேந்திரா, 1977-ம் ஆண்டில் “கோகிலா” என்ற கன்னடப்படத்தை இயக்கி டைரக்ஷன் துறையிலும் முத்திரை பதித்தார்.
இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் கமலஹாசன். நாயகி ஷோபா. மற்றும் ரோஜா ரமணி, மோகன் ஆகியோரும் நடித்தனர்.
1969-ம் ஆண்டு புனேயில் உள்ள திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவாளருக்கு பயின்று வந்தபோதே, பாலுமகேந்திராவின் மனதில் “கோகிலா” கதை உருவாகி விட்டது.
ஒரு விமானப் பயணத்தின்போது, “கோகிலா” கதையை கமலிடம் பாலுமகேந்திரா கூறினார். அப்போதே கமலுக்கு கதையின் மீது ஈர்ப்பு ஏற்பட, படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
ரோஜா ரமணி நடித்த கேரக்டரில் முதலில் நடிகை சில்க் நடிப்பதாக இருந்தது. ஆனால் கடைசி கட்டத்தில் ரோஜாமணியே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
24 நாட்களில் உருவான படம்
24 நாட்களில் 26 பிலிம் ரோல்களில் படத்தை குறித்த நேரத்திலும் சிக்கனமாகவும் எடுத்து முடித்திருந்தார், பாலுமகேந்திரா.
“கலர்ப்படங்கள்” அவ்வளவாக வராத காலம் என்பதால் இந்தப் படத்தையும் கறுப்பு – வெள்ளையில்தான் ஒளிப்பதிவு செய்தார், பாலுமகேந்திரா.
அந்த ஆண்டில் கர்நாடக அரசின் சிறந்த திரைக்கதைக்கான விருது இந்தப் படத்துக்கு கிடைத்தது. அதோடு சிறந்த ஒளிப்பதிவாளர் விருதையும் பாலு மகேந்திரா பெற்றார்.
இந்தப்படம் கர்நாடகாவில் மட்டுமின்றி, தமிழ்நாட்டிலும் கன்னட மொழியிலேயே வெளியிடப்பட்டு, பெரிய வெற்றி பெற்றது. சென்னையில் திரையிடப்பட்ட எமரால்டு தியேட்டரில் 100 நாட்களுக்கும் மேலாக ஓடியது.
இந்த சமயத்தில்தான் கே.பாலசந்தர் டைரக்ஷனில் கமல் நடித்த “மரோசரித்ரா” தெலுங்குப்படம் சென்னை சபையர் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. ஒரே வளாகத்தில் இருந்த 2 தியேட்டர்களில் கமல் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் பேசி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.
“கோகிலா”வுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் கடந்த 28 வருடங்களாக எந்த கன்னடப்படமும் இதுபோன்ற வெற்றியைக் கண்டதில்லை என்கிறார், இந்தப்படத்தின் உரிமையை வாங்கிய ஆர்.ஜி.வெங்கடேஷ்.
“கோகிலா”வுக்குப் பிறகு 4 ஆண்டுகள் கழித்து பாலுமகேந்திரா தமிழில் “அழியாத கோலங்கள்” படத்தை முற்றிலும் புதுமுகங்களை வைத்து இயக்கியபோது கமல் அவரை சந்தித்தார். “உங்கள் இயக்கத்தில் வரும் முதல் தமிழ்ப்படத்தில் நான் இல்லாமலா? நானும் இருக்கிறேன்” என்று உரிமை எடுத்துக்கொண்ட கமல், படத்தில் கவுரவ வேடத்தில் நடித்தார். “நண்பர்களுக்கு கமல் சார் கொடுக்கும் முக்கியத்துவம் இது” என்கிறார், டைரக்டர் பாலுமகேந்திரா. இந்தப்படம் வெற்றி விழாவையும் கடந்து 26 வாரங்கள் ஓடியது.
மூன்றாம் பிறை
இப்படி தனது படத்துக்கு ஒரு “கெஸ்ட்ரோல்” மூலம் மரியாதை கொடுத்த கமலுக்காக பாலு மகேந்திரா உருவாக்கிய கதைதான் “மூன்றாம் பிறை.” கமல் ஜோடியாக ஸ்ரீதேவி நடித்தார். படம் 329 நாள் ஓடி வெற்றி பெற்றது.
அதோடு இந்தப்படத்தை “சத்மா” என்ற பெயரில் கமல் – ஸ்ரீதேவி நடிப்பில் உருவாக்கினார். இதுவும் நூறு நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்டது.
இந்தப்படம் மூலம் கமலுக்கு இந்தியிலும் “பிரமிக்க வைக்கும் நடிகர்” என்ற பெயர் கிடைத்தது.
தேசிய விருது
“மூன்றாம் பிறை” படத்தில் சிறப்பாக நடித்ததற்காக, 1982-ம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகருக்கான தேசிய விருதை கமல் பெற்றார். அகில இந்திய சிறந்த ஒளிப்பதிவாளர் விருது பாலு மகேந்திராவுக்கு கிடைத்தது.
படம் முழுக்க நடிக்கும் வாய்ப்பு ஸ்ரீதேவிக்குத்தான் இருந்தது. விபத்தில் மன நிலை பாதிக்கப்பட்ட 18 வயதுப்பெண், 10 வயது சிறுமியின் குணநலன் கொண்ட பெண்ணாக மாற, அவரை `குழந்தை’ போல் பராமரித்து பாதுகாக்கும் பொறுப்பு கமலுக்கு வந்து சேர்கிறது. `குழந்தைக்குணம்’ கொண்ட ஸ்ரீதேவிக்கு என்ன வேண்டுமானாலும் செய்யத் தயங்காத கேரக்டரில் கமலும் ஜொலித்தார்.
முடிவில் ஸ்ரீதேவிக்கு மன நிலை சரியாகிவிட, இடைப்பட்ட நாட்களில் தன்னை பாதுகாத்த, போஷித்த, உயிரையே வைத்திருந்த கமலை முழுவதுமாக மறந்து விடுகிறார். கமல் பலவிதங்களில் நினைவூட்டிப் பார்த்தும் அவர் நினைவு வளையத்துக்குள் கமல் வரவே இல்லை. கடைசியாய் ஸ்ரீதேவிக்கு பிடித்த `குட்டிகரணம்’ கூட அடித்து நினைவூட்ட முயலும் கமலை “யாரோ பிச்சைக்காரன் பாவம்” என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும் ஸ்ரீதேவி, அவருக்கு கொஞ்சம் சில்லரைக் காசை போட்டு விட்டு ரெயிலில் தன் சொந்த ஊருக்குப் பயணிக்கிறார்.
கிளைமாக்சில் தன்னை யார் என்று நிரூபிக்க, கமல் படும் அந்த 5 நிமிட வேதனைகள்தான் நடிப்பில் அவருக்கு தேசிய விருதை தேடித்தந்தது.
இந்தப்படத்தில் நடிகை சில்க் சுமிதாவும் இருந்தார். தனது அதிகபட்ச கவர்ச்சியால் தமிழ்த் திரையுலகை ஆட்டி வைத்திருந்த சில்க், இந்தப் படத்திலும் தனக்கான காட்சிகளில் கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்கவில்லை. கமலுடன் சேர்ந்து “பொன்மேனி உருகுதே” என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டார். படத்தின் வெற்றிக்கு இந்த பாடல் காட்சியும் ஒரு காரணமாக அமைந்தது.
மிகுந்த திறமையுடன் பாலு மகேந்திரா உருவாக்கிய “மூன்றாம் பிறை”, ரசிகர்கள் கண்களில் பூரண நிலவாய் இன்றும் ஒளிவிடுகிறது.

No comments:
Post a Comment