Monday, 10 October 2011

பாலுமகேந்திரா: கலைப் படமும் வியாபாரப் படமும்

    பாலுமகேந்திரா: கலைப் படமும் வியாபாரப் படமும்
    கேள்விகள்: யமுனா ராஜேந்திரன்



கேள்விகள்:கலைப்படத்துக்கும் வியாபாரப்படத்துக்கும் இருக்கிற பிரிவினை சம்பந்தமான கேள்வி இது.
இதில் முதல் வகை, சமூகப் பொறுப்புள்ள அல்லது கலைப்பிரக்ஞையுள்ள தீவிரமானவர்களின் மற்றும்
அவர்களுக்கான படம் எனப் புரியப்பட்டிருக்கிறது. வியாபார சினிமா, வெறுமனே காசு
பண்ணுவது என்றும், பொழுது போக்குவதற்காகத் தேர்ந்துகொள்கிற படம் எனவும் விளங்கிக்
கொள்ளப்படுகிறது. திரைப்படம் பரந்துபட்ட மக்களைப் போய்ச்சேரவேண்டும் என நினைக்கிறவர்கள்
இரண்டுக்கும் இடையிலான ஒரு சினிமா வடிவத்தை யோசிக்கிறார்கள். அதனைச் சமாந்தர சினிமா
என நாம் சொல்லலாம்.

நட்சத்திர அந்தஸ்தைப் பயன்படுத்துவது, ஜனரஞ்சக சினிமா வடிவங்களாக இருக்கிற நகைச்சுவை,
வன்முறை வடிவங்களை சீரியஸ் பிர்ச்சினையைச் சொல்லப் பயன்படுத்துவது, அப்புறம் இரண்டரை
மணிநேரப்படம் என்கிறபோது, பார்வையாளனை சோர்விலிருந்து திசைதிருப்புவதற்காக,
பாட்டையும் நடனத்தையும் பொருத்தமான இடங்களில் கரைந்து போகச் செய்து தர்க்கபூர்வமாகப்
பாவிப்பது.. கடைசியாகப் பார்த்தால் பரந்துபட்ட பார்வையாளனிடம் போக எல்லாக் கலைஞர்களுமே
விரும்புகிறார்கள்..

இந்த வகையை இப்போது சமூகப் பிரக்ஞையுள்ள எல்லா இயக்குனர்களுமே பாவிக்கத்
தொடங்கிவிட்டார்கள். இந்தியாவில் நிஹ்லானி, தென் அமெரிக்காவில் ஸொலானஸ், உங்க சந்தியா
ராகம், வீடு, தவிர்ந்த மூன்றாம் பிறை, அழியாத கோலங்கள், மூடுபனி மாதிரிப் படங்களைக்கூட
நான் அப்பிடித்தான் பார்க்கிறேன். இந்தச் சூழலில் கலைப்படம் வியாபாரப்படம் என்கிற
பிரிவினைக்கான தேவையிருக்கிறது என நினக்கிறீர்களா?

உதாரணமாக, நிஹ்லானியினுடைய படம் ஒன்றைச் சொல்ல வேண்டும்.. புகழ் பெற்ற வங்க இடதுசாரி
எழுத்தாளர் மஹா ஸ்வேதாதேவியினுடைய ஹஸார் ஸர்ராஸ்கி மா என்கிற வங்க நாவலை Mother of
1084 என்கிற பெயரில் நிஹ்லானி படமாக எடுத்திருக்கறார். கதை எழுபதுகளில், வங்காளத்தில்
எழுந்த நக்ஸலைட் எழுச்சி அதனுடைய வீழ்ச்சி பற்றியது.

ஒரு அம்மா, மகனுடைய பிணம் பிணவறையில இருக்கிறது. அடையாளம் காட்டுங்கள் என
போலீஸிலிருந்து அம்மாவுக்குப் போன் வருகிறது. போகிற அம்மா, தன்னுடைய மகனுடைய
கொலைக்கான காரணத்தை தேடிப்போகிறாள். போகும்போது, அன்றைய வங்க அரசு, ரௌடிகள்
போன்றவர்களுடைய அடாவடிகள், போலீஸ் அராஜகம், இந்தச் சமூகத்தினுடைய கொடுமைகள்,
எல்லாவற்றையும் அவள் தெரிந்து கொள்கிறாள். அவள் தன்னுடைய மகனுடைய காதலியையும்
சந்திக்கிறாள். அந்தப் பெண்ணோடு சேர்ந்து, தன்னுடைய மகனுடைய நம்பிக்கைகள் சரி என்பதனைப்
புரிந்துகொண்டு, தன்னளவில அதற்காகப் போராடவும் முடிவெடுக்கிறாள்.

இந்தக் கதை, மூன்று தளத்தில் செயற்படுகிறது. ஒன்று தாய் மகன் எனும் அந்த ஜீவாதாரமான
தொப்புள்கொடி உறவு. மற்றது காதலிக்கும் அவனுடைய கொலை செய்யப்பட்ட காதலனுக்கும்
இருக்கிற உறவு. மூன்றாவதாக முக்கியமான பின்னணியாக அந்தக் கால சமூகக் கொடுமையைப்
பற்றிய சித்திரிப்பு இந்தப் படத்தில் இருக்கிறது. உங்களுடைய பட பாட்டுக்கள் மாதிரி
பின்னணியில ஒரு பாட்டும் வருகிறது.

இந்தப் படம் திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும் நல்லா ரிசீவ் பண்ணப்பட்ட படமாக இருக்கிறது.
உண்மையில் இந்தப்படம் கலை சினிமா, வியாபார சினிமா என்கிற எல்லைகளை மீறிப் போய்விடுகிறது.

பாலு: எனக்கு ஏற்பட்ட உலக சினிமா அனுபவம், அதாவது என்னுடைய திரைப்படக்கழகக்
காலகட்டமான அறுபதுகளினுடைய பிற்பகுதி எழுபதுகளினுடைய முற்பகுதியில் இருந்த உலக
சினிமா, இந்தியாவில் அந்தச் சமயத்தில் சின்னச் சலனம், ஸத்யஜித்ரே, மிருணாள் சென், அடுர்
கோபாலகிருஷ்ணன், அரவிந்தன், குமார்ஷஹானி, கிரிஷ் கர்னர்ட், கிரிஷ் காஸரவள்ளி இந்த
மாதிரி இருந்த ஒரு சலனம். இந்தச் சமரசமற்ற சினிமா. அப்பறம் சமாந்தர சினிமா. அப்பறமாக
பிரதான சினிமா என்கிற இதில், என்னுடைய சிந்தனைகள் அந்தக் காலகட்டத்தில்
அழுத்தமானதாகவும் இன்றைக்கு இருக்கக்கூடிய சிந்தனைகளில் இருந்து வேறுபட்டதாகவும் இருந்தது.

அந்தக் காலகட்டத்தில் அப்படியான ஒரு பாகுபாடு அவசியம் என நான் நினைத்துக் கொண்டு
இருந்தேன். அது தவிர்க்க முடியாதது எனவும்; நினைத்துக் கொண்டிருந்தேன்.. இந்தப் படம்
செய்வதென்றால் இதனை இப்பிடித்தான் செய்யமுடியும்.. இதற்குள் பாட்டும் கூத்தும் வைத்து,
இதனை நாசப்படுத்த முடியாது. என்ன காரணத்துக்காக நான் பாட்டையும்; கூத்தையும் கொண்டு
வருகிறேன் என்றால், இதை வியாபாரரீதியாக நான் பண்ண வேண்டியதாக, அதனை விற்க வேண்டியதாக
இருக்கிறது. அதனால் இதனைக் கொண்டு வருகிறேன்.. இதனை ஒரு முரண்பாடாகவும்
நெருடலாகவும் அந்தக் கால கட்டத்தில் நினைத்துக் கொண்டிருந்தேன்..

இப்போது எனக்கு இருக்கிற என் அனுபவம் காரணமாக, இன்னும் அதிகமான படங்களையும், இன்னும்
அதிகமான சிந்தனைகளையும் உட்கொண்ட அந்த விளைவு காரணமாக, இப்போது நான் நினைக்கிறேன்,
ஒரு அழுத்தமான ஒரு காத்திரமான விஷயத்தைச் சொல்வதற்கு, வியாபார ரீதியாகவும் அது
வெற்றி பெறக்கூடிய அம்சங்களை இதற்குள் கொண்டு வந்து, அதையும் சேர்த்து இந்த விதமான
அழுத்தமான கதையைச் சொல்ல வரும்போது, அதில் இரண்டு மூன்று விஷயங்களை நாம் பார்க்க
வேண்டியிருக்கிறது.

ஒன்று இந்தக் கதையை நாம் தொட்டதற்கான நோக்கமென்ன? இது மிக மிக முக்கியமான ஒரு கேள்வி.
இந்தக் கேள்விக்கு வெளியே வந்து, ஒருவர் பதில் சொல்லக்கூடிய கேள்வியும் அல்ல இது. உனக்கு
நீயே விடை சொல்லிக் கொள்ள வேண்டிய ஒரு கேள்வி இது.

உன்னுடைய மிக நெருக்கமான நண்பனுக்கோ, மனைவிக்கோ, பிள்ளைக்கோ கூட, நீ இந்தக் கேள்விக்கு
பதில் சொல்வதற்கு உட்காருகிற மிகப்பெரும்பாலான சமயங்களில், நீ ஒரு போலியாக மாறக்
கூடிய ஒரு சூழ்நிலை, இந்தக் கேள்விக்கு இருக்கிறது. உனக்குள் நீ தனிமையா இருக்கக்கூடிய
சமயத்தில், நீ இந்தக் கேள்வியைக் கேட்டு, இதில் சொல்லப்படுகிற விஷயம் என்னைத் தாக்கியது,
இதற்காக நான் வருத்தப்படுகிறேன், இதற்காக நான் கோபப்படுகிறேன், இதனை என்னுடைய ஊடகத்தின்
மூலம் நான் பகிர்ந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் எனக்கு மண்டை வெடித்துவிடும் என்ற ஒரு
பதில் உனக்குள் கிடைக்குமானால், இதனைச் சொல்வதற்கு நீ எடுத்துக்கொள்கிற ஒரு நட்சத்திர
நடிகர் அப்புறம் வேறு சில சமாச்சாரங்கள் இவை எல்லாம் ஓரளவு நியாயப்படுத்தக் கூடியதாக
இருக்கும்.

இந்த உள்ளடக்கம், இதில் சொல்லக்கூடிய விஷயம் என்னைக் கிஞ்சிதமேனும் ஒரு மனிதப்பிறவி
என்கிற அளவில், என்னை எதுவுமே செய்யவில்லை, நான் இதனை முழுக்க முழுக்க வியாபாரமாக்க
முடிகிற, விலை கூறி விற்கப்பட வேண்டிய ஒரு அற்புதமான கச்சாப்பொருள் எனப் பார்ப்பது,
இதனை நான் எடுத்தால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய், சமூக அக்கறையுள்ள சினிமா இயக்குனர்
என்கிற ஒரு அங்கீகாரம், (அது மகா மகாப் பொய் என்பது உனக்குத் தெரியவேண்டும், ஆனா அது
உனக்குள்ள கிஞ்சிதமும் இல்லை) கிடைக்கும். இரண்டாவது வியாபார ரீதியாகவும் சினிமா
வெற்றி பெறும்.

இந்தக் கேள்வியை அந்தந்த இயக்குனர்கள் அவரவர்களே கேட்டு பதில் சொல்லிக் கொள்ள வேண்டும்.
நுணுக்கமான பார்வையாளர்கள் இதனை எப்படித் தெரிந்து கொள்வது? உனக்குள் எழுந்த ஏதோ ஒரு
சலனம் காரணமாக இந்தப் பிரச்சினையை நீ தொட்டாயா? அல்லது உனக்கு இது மிகவும் உகந்த
வியாபாரப் பொருள் என்பதற்காக இதனைத் தொட்டாயா? என்கிற கேள்வியை அவன் கேட்டுக்கொள்ள வேண்டும்.

உங்க அப்பா இறந்து போய்விட்டார்.. ஒருசெய்தி சொல்ல வருகிறேன். அதைச் சொல்ல வேண்டுமெனில்
அதைச் சொல்வதற்கு எனக்கு நிறையத் தெரிவுகள் கிடையாது. நீ ஒரு கடுமையான இதய நோயாளி.
அதனால் உனக்கு எளிமையாக்கிச் சொல்ல வேண்டும் என்பதற்காக, உம் உம் உம் உம், உங்கப்பா செத்துப்
போயிட்டார், எனச் சொல்ல முடியுமா? அந்தந்தச் செய்திக்கான, அந்தந்த நிகழ்வுக்கான அடிப்படை
மரியாதை என ஒன்று இருக்கிறதில்லையா? அதை நீ பாட்டும் கூத்தும் போட்டுக், கும்மாளமும்
போட்டுக் கொண்டு, நீ சொல்ல ஆரம்பிக்கும்போது உன்னுடைய நோக்கத்தில் நான் சந்தேகம் கொள்கிறேன்.

அதையே ஒரு தொழில்நுட்ப வல்லுனன் செய்கிறபோது, ஸ்பீல்பர்க் மிகப் பெரிய வியாபாரப்
படமெல்லாம் செய்திருக்கிறார். அவர் அதனை வித்தியாசமான பாணியில் செய்தார். அங்கு எந்த
விதமான பாசாங்கும் கிடையாது. அந்தத் தொழில்நுட்ப வல்லுனனுடைய முழு நேர்த்தியோடேயும்,
தற்கால விஞ்ஞானத்தினால் கைகூடி வந்த சகல கிராபிக்ஸ் அனுபவங்களையும் வைத்து, அவன் வந்து
ஒரு கற்பனைக் கதையையோ, வன்முறைக் கதையையோ, நம்பத் தகுந்த முறையில் உனக்குக்
கொடுக்கிறான். அதில் எந்தப் பாசாங்கும் இல்லை. அதே சமயத்தில அவர் Schindlers List படம்
சொல்லப் போனபோது, அவரளவில் அவருடைய இடையீடு; எப்பிடியிருக்கும்? அவர் வந்து பக்கா
வியாபாரி. அந்தப் படத்தை முற்றிலும் வித்தியாசமான படமாக அவர் செய்தார். அந்தச் சாத்தியம்
இருக்கும்போது அவர்கள் அந்தப் பிரச்சினையத் தொடுகிறார்கள். அதை மிகப் பெரிய படமாகவும்
அவர்கள் தருகிறார்கள்.

வீடு படம் பதினொரு லட்சத்து ஐம்பதாயிரம் ருபாய்க்குள் எடுக்கப்பட்ட படம். நான் மிக
நேர்மையாகச் செய்த படம். இந்தச் செலவு பண்ண, பணம் போனா மசுராச்சுன்னு, வந்த புரொடியூஸர்
கிடைத்ததால் படம் அப்படி வந்தது. ஆனால் ஆச்சர்யகரமாக அந்தப்படம் பிரதான நகரங்களில் எல்லாம்
75 நாட்களுக்கு மேல் ஓடியது. நான் என்னென்ன உணர்வுகளை அந்தப்படத்தில பகிர்ந்து கொண்டேனோ,
அந்த உணர்வுகளை முழுவதுமாக வாங்கிக்கொண்டு, நான் நினைத்ததை விடவும் அதிக அழுத்தமாகப்
பார்வையாளர்களே அதை எனக்குத் திருப்பிச் சொல்ல முற்பட்டார்கள். இது திரையரங்குகளில்
வெளியாகி ஓடிக்கொண்டிருந்தபோது எனக்கு ஒரிரு கடிதம் வரும். இது ஓடி முடிந்து,
தேசிய ஒளிபரப்பில் ஒரு மதிய நேரம் துணைத் தலைப்புகளோடு இதைக் காண்பித்தபோது, நீங்கள்
நம்ப மாட்டீர்கள், மூன்று வாரங்களில் எனக்கு 100 கடிதங்கள் வந்தன. இந்தியா முழுவதிலும்
இருந்து வந்தது. அதுவும் ஒரே ஒரு தரம் ஒளிபரப்பினதாலே வந்தது..

உன்னுடைய கவலை ஐந்து டிக்கெட்தானே விலைபோகப் போகிறது, ஐம்பதாயிரம் இல்லையே
என்கிறதுதான். அதுதான் உன்னுடைய கவலையே அல்லாமல், ஐந்து பேர்கள்தான் பார்க்கிறார்கள்
என்பதில்லை.  

கேள்விகள்:நான் படம் பார்த்த அல்லது படம் பார்க்கிற கலாச்சாரத்தினைப் பற்றித் தெரிந்த அனுபவத்தில்
இருந்து சில விஷயங்களை என்னால் சொல்ல முடியும். ஐரோப்பாவில் ஓரளவுக்கும்,
அமெரிக்காவிலேயும், மாற்றுச் சினிமாக் கலாச்சாரம் என்பது ஒரு நிறுவனமாக இருக்கிறது.
சில இயக்குனர்கள், நினைத்தபடி படம் எடுக்கக் கூடிய நிலை அங்கு இருக்கிறது. அந்த
மாதிரிப் படங்களுக்குப் போட்ட பணம் திரும்பி வரக்கூடிய உத்தரவாதங்கள் அதற்கென்றிருக்கிற
தியேட்டர்களினாலும் அதற்கென்றிருக்கிற அடிப்படை உத்தரவாதமுள்ள பார்வையாளர்களாலும்
இருக்கிறது.

உதாரணமாக, இங்கிலாந்து லண்டனில் இருக்கிற ரெனுவார், ரிட்சி, கர்ஸான் போன்ற தியேட்டர்கள்,
இன்ஸ்டியூட் ஆப் கன்டம்பரரி ஆர்ட்ஸ், நேஷனல் பிலிம் தியேட்டர் போன்ற அமைப்புகள் இதற்கென்றே
இயங்குகிறன. சமகால சினிமாவில் மாரக்சியக் கருத்தியலின் தாக்கம் என்று கருத்தரங்குகள்
நடத்தக் கூடியதாகவும், கடப்பாடுடைய பட இயக்குனர்கள் சேர்ந்து செயல்படக்கூடியதாகவும்
இருக்கிறது. இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றது தெரிகிறது. ஒன்று, இந்த மாதிரி
அமைப்புகளை அங்கிருக்கிறவர்கள் சேர்ந்து பிரக்ஞைபூர்வமாக உருவாக்கியவை. இரண்டாவது, இந்த
மாதிரி இயக்குனர்கள் படம் செய்கிற முறையில் மாற்றம் வந்தது (changed attitude
towards film making) போன்றவற்றைச் சொல்லலாம். இந்தியாவில், தமிழ் நாட்டில், இங்கு
காத்திரமான படங்களை இயக்குகிறவர்களுக்குள்ளே நிறைய அபத்தமான, அரசியல் சார்ந்த, அல்லது
தனிமனிதக் குரோதங்கள் நிறைய இருக்கின்றன. பிலிம் சொஸைட்டி இயக்கம் கூட ரேயினுடைய
காலத்துக்குப் பின்னாடி பலமான இயக்கமாக இங்கு இருக்கிறதாகத் தோன்றவில்லை.

இந்தச் சூழலில், இந்தியாவில், தமிழ்நாட்டில் எப்பிடி மாற்றுச் சினிமாக் கலாச்சாரத்தை
உருவாக்க முடியும் என நினைக்கிறீர்கள்?

பாலு: அந்த அமைப்பு அப்பிடி இருக்கும் என்றால், அப்படியான அமைப்பை எப்படியாவது
ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் அப்பிடியான அக்கறையுள்ள ஆட்களினுடைய அஜாக்கிரதை
காரணமாக, ஒரு வேற்றுமை காரணத்தினால், அப்பிடியான அமைப்பு இங்கு ஏற்படாமல் போனது
மிகப் பெரிய துரதிருஷ்டம். ஐம்பதுகளின் மத்தியிலிருந்து அறுபதுகள் வரையிலும்
அப்படியான இயக்கம் நன்றாகத்தான் இங்கு தோன்றியது. அதில் ஈடுபட்டவர்கள் நம்பிக்கையை
இழந்துவிட்டார்கள். மிகச்சரியான காரணமாக கடினமாக முயற்சி செய்யவில்லை எனச் சொல்லலாம்..
அரசை வற்புறுத்துவதற்கு, பிற அமைப்புக்களை வற்புறுத்துவதற்கு, அதிகரித்தபடியிருந்த,
சாதாரணமாகச் சினிமாவுக்குப் போகிறவனின் மனநிலையைப் புரிந்த கொள்வதற்கு கடினமாக
முயற்சி செய்யவில்லை எனச் சொல்லலாம். எந்த முயற்சியுமே எடுக்கவில்லை. அவரவர்கள், அவரவர்
குழுவில் உட்கார்ந்து, அவ்வப்போது ஏதோ ஒரு முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். அதில் ஒரு
சிலருக்கு அவர்கள் செய்கிற முயற்சிகளை மட்டுமே தலையில் தூக்கிவைத்துக் கொண்டு, விலை
கூறி விற்பதற்கான ஆற்றல் இருந்தது. அவர்கள் உலக அளவில் விற்றார்கள். நல்ல விஷயம். அவர்கள்
இன்றும் இருக்கிறார்கள். இந்த வியாபாரத் தோது இல்லாத பட இயக்குனர்கள் வந்து இல்லாமல்
போய்விட்டார்கள்.

நான் இந்தச் சினிமா ரசனை என்கிற விஷயத்தை, பள்ளி இறுதி வருஷமான பத்தாம்
கிளாசிலேயாவது, ஒரு நாளைக்காவது ஒரு பாடமாக வையுங்கள் என்று சொன்னேன். எல்லா
மேடைகளிலேயும் பதினஞ்சு இருபது வருடமாக நான் இதைச் சொல்லிக் கொண்டு வருகிறேன்.

கேள்விகள்:கலைஞர்களை உபயோகிப்பது தொடர்பான ஒரு கேள்வி. ஸத்யஜித்ரேயை எடுத்துக்கொண்டால், சவுமித்ர
சாட்டர்ஜி தான் அவருடைய பெரும்பாலான படங்களில் இருப்பார். அது மாதிரி உங்களுடைய
படங்களில் திரும்பத் திரும்ப சில கலைஞர்களைப் பாரக்கமுடியும்.

பாலு: கதை நேரம் பார்த்தீர்களானால், எல்லாப் படங்களிலும் கலைஞர்கள் பத்துப் பேர்தான்
இருப்பார்கள். அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.. கதை நேரத்தைப் பார்த்தீர்களானால் அது
வந்து ஒரு புது வகையான நடிப்புப் பள்ளி சார்ந்த குழுவாக இருக்கும். அதிகமாக
வாழ்க்கையினுடைய யதார்த்தம், அப்புறம் நடத்தை சார்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள். நான்
அதைத்தான் முயற்சி செய்கிறேன்.. அதற்கு நான் இவர்களுக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும்.
நானும் இந்தச் செயல்போக்கில் கற்றுக் கொள்கிறேன். நடிப்பு நுட்பங்கள் எனும் அளவில்
செம்மைப்படுத்துவது, பல்வேறு மனித நடத்தைகளை செயல்படுத்திக் காட்டுவது எனச் செய்கிறோம்.
எங்களுக்குச் சுதந்திரம் இருக்கிறது. எங்களைக் கேள்வி கேட்க யாருமில்லை. நாங்கள்
நாடகபாணியாகச் செய்வதில்லை. அதீத நடிப்பைச் (over act) செய்வதில்லை. நிஜத்தில்
நிகழ்வதை நாம் பதிவு செய்யவேண்டும்.

எல்லாம் சாத்தியமானதுக்குக் காரணம், ஒரு குழுக் கலைஞர்களோடு நான் வேலை செய்ததுதான்.
மற்றது அவர்களுக்குப் பயிற்சி கொடுத்தது. எல்லோரும் எனக்காக இரண்டு நாள்
காத்திருந்தார்கள். அப்படித்தான் நாங்கள் வேலை செய்தோம். நான் அர்ச்சனாவை என் படங்களில்
திரும்பத் திரும்ப பாவித்த மாதிரி, பாலச்சந்தரை எடுத்துக்கொண்டால், அவர் சரிதாவைப்
பாவித்திருக்கிறார்.

கேள்விகள்:அமெரிக்காவில் இப்போது நிறைய இயக்குனர்கள், டைரக்டர்ஸ் கட் என (directors cut)
அவர்களது படங்களை வெட்டுக்களின்றி மறுபடியும் ரிலீஸ் செய்கிறார்கள். இரண்டு முக்கியமான
படங்களைச் சொல்லலாம் என்றால், ரிடலி ஷ்காட்டினுடைய /Blade Runner,///கொப்போலாவினுடைய
/Apocalypse Now///என்று சொல்லலாம்.

இப்படியான படங்கள் இப்போது வருவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. என்னவெனில், அப்போது
அமெரிக்காவினுடைய ஸ்டுடியோ முறைமைக்கு (studio system) இயக்குனர்கள் அடிபணிந்து
தங்களுக்கு விருப்பமில்லாத வகையில் கட்செய்து, படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். இப்போது
நல்ல படங்களைப் பார்க்கிற சினிமாப் பார்வையாளர்களுடைய வளர்ச்சியில இந்த மாதிரிப்படங்களை
முழுசாகப் பார்க்கவென்றே ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் தங்களுடைய படைப்புத்
திருப்திக்காக இயக்குனர்கள் தாங்கள் விரும்பிய மாதிரி படத்தை மறுபடி
வெளியிடுகிறார்கள்.. டைரக்டர்ஸ் கட் படங்கள் நன்றாக ஓடவும் செய்கிறது.

இப்படி படமுதலாளிகள் உங்களுக்குச் சிரமம் கொடுத்து, டைரக்டர்ஸ் கட் என ஏதேனும் படங்கள்
கொண்டுவருகிற மாதிரி நிலைமை உங்களுக்கு இருக்கிறதா?

பாலு: என்னைப் பொறுத்த அளவில் என்னுடைய படைப்புகள் ஆரம்பிப்பதற்கு முன்னாடி பிரச்சினைகள்
இருந்திருக்கிறது. உதாரணமா நீங்கள் கேட்டவை படம். ஐந்து பாட்டோடு நாலு சண்டை வைத்து
ஒரு படம் எடுக்கப் போவதென்று நானாகவே முடிவு செய்துவிட்டேன். மற்றபடி என்னுடைய எந்தப்
படத்திலும், சார் இப்பிடி மாத்துங்க, இது தேவையில்ல, இன்னுங் கொஞ்சம் மறுபடி சூட்
பண்ணுங்க அல்லது இது வந்து குப்பை, இதை சிருஷ்டிபூர்வமா பண்ணுங்க என்கிற மாதிரி எந்த
விதமான தலையீடும் எனக்கு இருந்ததில்லை.

கேள்விகள்:உங்களுடைய புத்தக அலுமாரிகளில் இருக்கிற புத்தகங்களை நான் பார்த்துக்கொண்டிருந்தேன்..
அதில் வேட்கை (desire) சம்பந்தமாக நிறையப் புத்தகங்கள் வைத்திருக்கிறீர்கள். உங்கள் படங்களை
ஒரே வார்த்தையில் வரையறை செய்ய முடியுமென்றால், வேட்கை சம்பந்தமான பல்வேறு சாத்தியங்களை
அது பரீட்சித்துப் பார்த்திருக்கின்றன என்று சொல்ல முடியும். உங்கள் அலுமாரியில் இயற்கை
சார்ந்த விஷயம் சம்பந்தமாகவும் நிறையப் புத்தகங்கள் இருக்கிறன..

இயற்கை சாரந்த விஷயங்கள் உங்களுடைய ஒளிப்பதிவு முறையில், கதை சொல்லலில், என்ன விதமான
பாத்திரம் வகிக்கிறது?

பாலு: இயற்கையை என்னுடைய கதைகளில் ஒரு பிரிக்க முடியாத பகுதியாகத்தான் நான்
பாவிக்கிறேன். மனிதனுடைய உளவியலில் சூழல் வந்து மிகப் பெரிய பாதிப்பைக்
கொண்டிருக்கின்றது என நான் பலமாக நம்புகிறேன். புவியியல் ரீதியில் எடுத்துக்கொண்டால்,
மனிதனுடைய அறிவுபூர்வமான சாத்தியம் மற்றது அவனது நடத்தைகள் போன்றனவற்றை
எடுத்துக்கொண்டால், குடும்பத்தில் அடுத்த வீடுகளில் அப்புறம் அடுத்த கிராமத்தில், புவியியல்
அம்சங்கள் நீங்கள் இருக்கிற வீடு, நீங்கள் சின்ன வயதிலிருந்து நீங்கள் தூங்கி எழுந்த உங்களுடைய
ரூம், அதிலிருந்து நீங்கள் பார்த்த காட்சிகள், அந்தக் காட்சிகளுடைய வெவ்வேறு பரிமாணங்கள்,
இதில் காலத்துக்கும் வரக்கூடிய மாற்றங்கள், அது உங்களில் சில பாதிப்புகளை
விட்டிருக்கும்.. அது உங்களுடைய குணச்சித்திரத்தையும் நீங்கள் சிந்திக்கிற முறையையும்
தீரமானிக்கும்.

ரொம்பவும் நெருக்கமான ஒரு சூழலுக்குள் நீங்க உடலால் இருக்கிற மனிதன் எனும் பட்சத்தில்,
உங்களுக்கு அது ஆகாயத்தில பறக்க வேண்டும் எனும் உணர்வை, வெளியில் வந்து பறக்க வேண்டும்
எனும் உணர்வை உங்களுக்கு உருவாக்கும். ஓரு கதாபாத்திரத்தை நான் படைக்கிறபோது அந்தக்
கதாபாத்திரத்திற்கான உளவியல் ரீதியிலான பின்புலங்கள் என்ன என்கிறதை முழுவதையுமே நாம்
முடிவு பண்ணிக் கொள்ளவேண்டும்.. அந்த முடிவு செய்த விஷயங்களையெல்லாம் நான் படத்தில்
உபயோகப்படுத்துகிறேனா இல்லையா என்பதெல்லாம் வேறு விஷயம். இவ்வாறு நான் புவியியல்
விஷயங்களையும் தீர்மானித்துக் கொள்வேன்.

கேள்விகள்:ஒரு காட்சி ஞாபகம் வருகிறது. அழியாத கோலங்களில் வெண்ணிற ஆடை மூர்த்திக்கும் ஊர்
விபச்சாரிக்குமான பாலுறவை வைத்து காட்சி அமைத்திருந்தீர்கள். அந்தப் படப்பிடிப்பிடம்
ஞாபகம் வருகிறது. ஒரு துளி சொல்நெறியில் நீங்கள் தவறியிருந்தாலும் அது
நீலப்படமாகியிருக்கும்.

பாலு: அங்கு என்ன நடந்ததென்றால். இலைமறை காயாக நான் காண்பித்திருக்கிறேன்.
பாவாடையையும் எடுத்துவிட்டான். பிராவையும் எடுத்துவிட்டான் என்கிறதும் தெரியவேண்டும்.
அதி விரசமாவும் இருக்கக்கூடாது. அதனை பயல்கள் பார்க்கிறதும் தெரிய வேண்டும்.. அது ஒரு
பாழடைந்த கோயிலாக இருக்க வேண்டும். எதையும் வெளிப்படையாகப் பக்கத்திலிருந்து
நேரடியாகப் பார்க்கமுடியாத ஒரு இடம். அதைத் தேடிப் பிடித்தேன். குன்னத்தூருக்குப்
பக்கத்தில் ஒரு பாழடைந்த கோயில். அதைக் காண்பிக்காமலேயே உங்களுக்குக் குறி விறைப்பு
வருகிற மாதிரிச் செய்தேன். அந்தப் பயல்களை அங்கே போய் நிற்க வைத்துவிட்டு, வெறுமனே
அதையும் இதையும் காட்டிவிட்டு, அந்தப் படத்தில் பாத்தீர்களானால் டைட் குளோசப் ஷாட் அந்தக்
காட்சியில்தான் வரும். நீங்க எதையும் காண்பிக்கத் தேவையில்லை. ஆனால் அப்பவும் உங்களுக்கு
குறி விறைப்பு வருகிற மாதிரி மட்டுமல்ல, முஷ்டி மைதுனத்தில் ஸ்கலிதம் வருகிற
மாதிரியும் செய்தேன்..

No comments:

Post a Comment