Monday, 10 October 2011

பாலுமகேந்திரா: திரைப்படமும் அரசியலும்

பாலுமகேந்திரா: திரைப்படமும் அரசியலும்
கேள்விகள்: யமுனா ராஜேந்திரன் 

 கேள்வி :வாசகப் பரப்பு, விழிப்புணர்வு போன்றவை நல்ல சினிமா உருவாவதற்கு முக்கியம். ஆனால்,
தமிழ்ச் சூழலில் பிரச்சினை வேறு மாதிரி என நினைக்கிறேன். தியோடர் பாஸ்கரன் இது
சம்பந்தமாக எழுதியிருக்கிறார். தமிழ்சினிமாவைக் கையிலெடுத்தவன், முதலில்
பார்த்தீர்களானால் நம் சமூகத்தில் மேல்தட்டில் இருந்து வந்தவன் தான் எடுத்தான். பிராமணர்கள்தான்
எடுத்தார்கள். காலனியாதிக்க கால கட்டத்தில் தேசபக்தியை பக்தி மரபோட சேர்த்து இவர்கள்
வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதற்குப் பிறகு, சினிமாவினுடைய காட்சிரூப அர்த்தத்தினது
முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளாத, சீர்திருத்தத்தினுடைய கருவியாகப் புரிந்து கொண்ட
திராவிட அரசியல் பரம்பரையினர் இருந்தார்கள்..

தமிழ் இடதுசாரிகள் சினிமாவைப் பற்றிப் பெரிதாக அக்கறைப்படவேயில்லை.
எழுத்தாளர்களிலேயும், பாரதிதாசன் புதுமைப்பித்தன், தமிழ் ஒளி, ஜெயகாந்தன் இப்படிச்
சிற்சில விதிவிலக்குகள் தவிர பிறர் அக்கறைப்படவில்லை. தீவிரமான இடதுசாரி அரசியலைக்
கொண்டிருந்தவர்கள் சினிமாவை எதிர்மறையாகப் பார்க்கக் காரணம் என்னவெனில், சினிமா கீழான,
நீர்த்துப் போன, பொய்யான கலை. இதில் மேலான விஷயங்களை, தீவிர விஷயங்களைச் சொல்லமுடியாது
என அவர்கள் நினைத்தார்கள். சினிமா ஆரோக்கியமற்ற மிகச் சாதாரணமான பாமர மக்களுக்கான கலை
என்கிறதால், இவர்கள் இதற்குள்ளே நுழையவுமில்லை. அக்கறைப்படவுமில்லை. மிகக் கேவலமாகச்
சினிமாவை மதிப்பிட்டார்கள். இந்த நிலைமைதான் இன்றைவரைக்கும் இருக்கிறது எனச் சொல்லலாம்.

பாலு: சினிமா வந்த காலத்திலிருந்தே தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலக்கியவாதிகள்,
சினிமா ஏன் ஒரு கீழான கலை என, கீழான ஊடகம் என மதிப்பிட்டார்கள் எனில், இதற்கு தெளிவான
காரணங்கள் நான் சொல்ல முடியும். நீங்கள் சொன்னீர்கள் பார்த்தீர்களா, சினிமாவினுடைய ஆரம்ப
காலத்திலிருந்து இன்றைக்கு வரைக்கும் ஆதிக்கம் செலுத்துகிறவர்கள் மேற்குடிக்காரர்களாகத்தான்
இருந்தார்கள் எனச் சொன்னீர்கள்.. அது உண்மைதான். அவர்களுக்கு சினிமா மேல் ஒரு அசூயை
இருந்தது. கிராமத்தில் கூத்தாடிகளுக்குப் பெரிய மரியாதை இருந்ததாகத் தெரியவில்லை.
இருக்கவில்லை. அவர்களைக் கலைஞர்கள் என இந்த உயர்குலத்தோர் ஒப்புக் கொள்ளவேயில்லை. இவர்கள்
கூத்தாடுகிறவர்கள், தங்களைப் போன்றே இன்னொரு ஊடகத்தில் பயின்று கொண்டிருக்கும் சக
படைப்பாளிகள் எனப் பார்க்கவேயில்லை. இவர்கள் அவர்களை என்றுமே அங்கீகரித்ததில்லை..

சினிமா இங்கே வந்தபோது, தமிழகத்திலேயும் இந்தியாவிலேயும் வந்தபோது, அந்த கூத்தினுடைய
ஒரு நீட்சியாகத்தான் இந்த உயர்குலத்தோர் பார்த்தார்கள். அந்தக் கூத்தாடிகளின்
விகர்சிப்பாகத்தான் வந்த இந்தச் சினிமாவையும், சினிமாக்காரர்களையும், இந்த உயர்குலத்தினர்
எனச் சொல்லப்படுகிறவர்கள், இதில் எழுத்தாளர்களும் அடங்குகிறார்கள், பார்த்தார்கள். இந்தக்
கூத்தோடு சம்பந்தப்பட்டவர்களுக்கும், சினிமாவோடு சம்பந்தப்பட்டவர்களுக்கும், பட்டென்று
வெளியில் தெரிந்துவிடக்கூடிய, ஏனென்றால் ஒரு சராசரி எழுத்தாளனைவிட ஒரு ஓவியனைவிட
ஒரு இசைக் கலைஞனைவிட இந்தக் கூத்து ஆடுபவனோ, நடிகனோ நடிகையோ இயக்குனரோ யாரோ,
அவர்கள் பிரபலமாக இருப்பதனால், அவர்கள் தொடர்ந்து வெளிச்சத்தில் இருக்கிறார்கள். அவர்களைப்
பற்றிய அனைத்தையும் உங்களால் தெரிந்து கொள்ள முடியும்.

சினிமாக்காரனுக்குக் கிடைத்த அதீதமான புகழ் காரணமாக, மேடை காரணமாக, இவனுடைய
ஒழுக்கம் அறம் சார்ந்த விஷயமெல்லாம் அலசப்படும். இவனுடைய தவறுகள், தனிப்பட்ட வாழ்க்கையில்
இருந்த ஒழுக்கமின்மை பூதாகரப்படுத்தப்பட்டு, ஒரு வதந்தியாக்கிக் கொச்சைப்படுத்தப்படும்.

சம்பந்தப்பட்ட மனிதர்கள் மேல் இருந்த ஒரு அசூயை, இந்த ஊடகத்தின் மேலும் வந்தது. ஆனால்
ஊடகம் அதை உபயோகப்படுத்துகிற ஒருத்தரோடு ஏதும் செய்வதற்கில்லை. துரதிருஷ்டவசமாக,
சினிமா என்கிற ஊடகம் சினிமாக்காரர்களுக்குக் கொடுத்த அல்லது கொடுக்காமல் விட்ட
முக்கியத்துவத்தினால் அவப்பெயர் பெற்றது. முகமது யூசுப் என்கிற இலக்கியவாதி
சமப்பாலுறவு நடவடிக்கைக்காக சிறைக்குப் போனார். அவர் மறுபடியும் எழுத்துக்குத்
திரும்பினார். இங்கு கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது என்னவெனில், அவருடைய
சிருஷ்டிகரமான சிந்தனை.. இங்கு என்ன நடந்ததென்றால், ஒரு புதிய கலை மரியாதை பெற்றுக்
கொண்டுவருவதாக இங்கு வந்தபோது, இங்கிருந்த முன்னைய எழுத்தாளர்கள் ஓவியர்கள் எல்லோரும்,
அவர்களும் இதனை ஒரு முட்டாள்தனமான அசூசையோட பார்த்தார்கள், அது ஒரு போலித்தனமான
பார்வை எனத்தான் நான் சொல்லுவேன்.

இங்கு எழுத்தாளனுடைய வாழ்க்கை இல்லாமல் அவனுடைய படைப்புகள் மட்டுமே வெளியில்
வைக்கப்படுகிறதால் அவன் தப்பித்துக் கொள்கிறான்.. இந்த படைப்பாளிகள் எனச்
சொல்லப்படுகிறவர்கள் சினிமாவை ஒரு காரியமாக எடுத்துக் கொள்ளாமல் விலகியிருந்ததற்குக்
காரணம், இந்தச் சினிமாவின் பால் அக்கறை காட்டாததனால்தான். அக்கறை காட்டாததினால் என்கிறதை
விடவும், வெறுத்ததன் காரணமாக அல்லது விலக்கி வைத்ததன் காரணமாக இதற்கான எந்தப்
பங்களிப்பையுமே அவர்கள் செய்யவில்லை.

ஒரு நல்ல சினிமா வந்ததென்றால், மலையாளத்தில் பாத்தீர்களானால் அத்தனை படைப்பாளிகளிடமும்
எழுத்தாளர்களிடமும் சினிமாவுக்கான அங்கீகாரத்தையும், அந்தஸ்தையும் கொடுப்பதற்கான ஒரு
குழு உணர்வு அங்கே இருக்கிறது. தமிழ்நாட்டில் அது இல்லை. ஒரு நல்ல சினிமா தமிழில்
வருகிறபோது, அதனைக் கண்டுகொள்ளாமல் இருக்கிற விவரம் தெரிந்தவர்களும், விவரம் தெரியாத
காரணத்தால் அதைக் கண்டு கொள்ளாதவர்களும் தான் தமிழில் நிறைய இருக்கிறார்கள்.

கேள்வி : ழுத்தாளர்களுக்குச் சினிமாவின் பாலான விலக்கத்துக்குக் காரணம், அவர்களுடைய போலித்தனமான
ஒழுக்க அறவியல் காரணங்கள்தான் ஒரு அம்சம் என நாங்கள் பார்க்கலாம். ஆனால் இடதுசாரிகளும்
ஓரளவு புரட்சிகரமான காரணங்களுக்காவும் சினிமாவுகுள் வந்தவர்களும் இந்தக் காரணங்களுக்காக
விலகி இருந்தார்கள் என நாம் சொல்லமுடியாது.  ஏனெனில், இது ஜனங்களிடம் போகக்கூடிய
மிகப் பெரிய ஜனரஞ்சக ஊடகம். காங்கிரஸ் கட்சியினுடைய ஆரம்பகாலப் பிரச்சாரங்கள் சினிமா
மூலம் போனது. தேசபக்தி, தேசியம் என்று போனது. அதற்குப் பிறகு இதனுடைய வலிமையை
உணர்ந்து கொண்டவர்கள் திராவிட அரசியல் இயக்கத்தினர். ஆனால் இடதுசாரிகள் கேரளத்திலும்
வங்காளத்திலும் ஓரளவு சினிமாவுக்குள் வந்திருக்கிறார்கள். படைப்புக்களையும் இன்று
வரைக்கும் கொடுத்து வருகிறார்கள். தமிழகத்தில் இடதுசாரிகளின் பார்வையும் இந்த
இலக்கியக்காரர்களுடைய சுத்த சுயம்பவான கலாச்சாரம், உயர்ந்த கலாச்சாரம் என்கிற
பார்வையிலிருந்து வந்ததாக இருக்கலாம்.

பாலு: அநாவசியமான ஒரு வெறுப்பு, ஒரு காழ்ப்புணர்வு இது. ஒரு கீழான ஊடகம் என அவர்கள்
நினைத்தார்களே தவிர, இதனால் சினிமாவோடு தங்களைச் சம்பந்தப்படுத்திக் கொள்ளக் கூடாது என
ஒதுங்கி நின்ற அந்தப் பெரியமனுஷத்தனம், அது ஒரு காரணம் என நான் நினைக்கிறேன்.

கேள்வி :தமிழ் சினிமாவில் காலனியாதிக்க சினிமா, பின் காலனியாதிக்கச் சினிமா, திராவிட
சினிமா, சமகால பின்-திராவிட சினிமா என (POST-DMK CINEMA) இப்படி நான்கு
கட்டமாகப் பார்க்கலாம். இதில் பாலு மகேந்திரா என்கிற கலைஞனுடைய படங்கள் எந்தப் பிரிவில்
வருகிறது என நினைக்கிறீர்கள்? உங்களுடைய படங்கள் கீழ் மத்தியதர வர்க்க அல்லது மத்தியதர
வர்க்க ஆண் பெண் உறவுகளை வைத்துப் பேசிய படங்கள் என்றால், தமிழ் சினிமா வரலாற்றில்
பாலுமகேந்திரா என்கிற கலைஞனுடைய பாத்திரமென்ன?

பாலு: வரலாற்று ரீதியாக நீங்கள் பார்க்கிறபோது, என்னுடைய படங்கள் ஆண் பெண்ணினுடைய, ஒரு
குடும்பத்தின் அங்கத்தவர்களுக்கிடையேயான, மனிதர்களுக்கிடையே இருக்கும் உறவுகளைச்
சித்தரிக்கும் படங்களாகவே பெரும்பாலுமான சமயங்களில் இருந்திருக்கிறது.
சத்யஜித்ரேவினுடைய படங்களை எடுத்திட்டுக் கொண்டால் பிரதித்வந்தி என்கிற படம் வேலையில்லாத
இளைஞன், வேலையின்மைப் பிரச்சினை பற்றிய படம், சமூகப் பிரச்சினையை நேரடியாகச் சொன்ன
படம், அப்புறம் அவர் கடைசியில் எடுத்த ஜனசத்ரு படம், இது இரண்டும் தீவிரமான அரசியல்
படங்கள்தான். சமூகப் பிரக்ஞை கொண்ட படங்கள்தான். ஆனால், சாருலதா அவருக்குத் திருப்தியைக்
கொடுத்த படம். இந்தச் சாருலதா ஆண் பெண் உறவை அடிப்படையாகக் கொண்ட கதைதான் என்றாலும்,
வேலை நிமித்தம் கணவனுக்கு மனைவிக்காகக் கொடுக்க வேண்டிய நேரத்தையும் அன்பையும் கொடுக்க
முடியாமல் போகிற ஒரு சூழ்நிலையில், ஒரு இளைஞன் அந்தக் குடும்பத்துக்குள் நுழைகிறான்.
ஒரு தென்றல் மாதிரி அல்லது எதிர்பாராத ஒரு புயல் மாதிரி நுழைகிறான். அந்தச் சூழலில்
இந்த மனைவி ரொம்பக் கொஞ்சம் இயல்பாக ஆட்டம் காண்கிறாள். ஆடிப்போகிறாள். அந்த ஆட்டத்தைக்
கணவனால் அவதானிக்க முடிகிறது. அதைப் புரிந்த உடனே அவன் நெஞ்சு வெடித்துப் போகிறது.
அவன் ஒரு சுத்தமான வங்காள அறிவுஜீவி. ஒரு பத்திரிக்கையினுடைய ஆசிரியர். ஒரு இலக்கில்
போய்க்கொண்டிருக்கிறவன். மனைவி பிரச்சினையை அவன் ரொம்ப நாகரீகமாக எதிர் கொள்கிறான்.
இதில் ரேவினுடைய ஆளுமை அங்கு பிரதிபலிக்கிறது.. ரே எப்போதுமே நாடகத்தனமான
எதிர்வினைக்குப் போனது கிடையாது. ரேயினுடைய படங்களில் கர்ப்பம் கொண்ட பெண் கிடையாது.
அவர் தனது படங்களில் அதைக் காண்பித்ததே கிடையாது. ஆனால், தனிப்பட்ட முறையிலான
திருமணம்; மீறிய உறவு பற்றிய படம்தான் சாருலதா.

கேள்வி :மாதவி முகர்ஜிக்கும் ரேவுக்கும் இருந்த, இரண்டு பக்கமும் கொழுந்து விட்டெரிந்த நேசம்
பற்றிச் செய்தி வந்தது

பாலு: ஆமாம். அவர் குடும்பத்துக்குள் கூட, இது பிரச்சினையை உருவாக்கியது.. இதைப்
பற்றி யார் கவலைப்பட்டார்கள்? ஏன் நீ இதை எனக்குச் செய்கிறாய்? என்றுதான் அந்த மனுஷன்
அழாக்குறையாக ஒரு நேர்முகத்தில் சொல்லியிருந்தான். இதற்குள் இந்தப் படத்தினுடைய இன்னொரு
பரிமாணத்தைப் பார்த்தோமெனில், இது அந்தக் காலத்தில் இருக்கக்கூடிய ஒரு சுத்தமான வங்காள
அறிவுஜீவி, தனிப்பட்ட மனிதர்களுக்கிடையிலான கதையாக இருந்தாலும் அந்தக் காலத்திலிருந்த
ஒரு சமூகச் சூழல் துல்லியமாகப் பதிவு செய்கிற ஒரு ஆவணமாகத்தான் அந்தப் படம் இன்றைக்கும்
இருக்கிறது. அந்த வகையில் ரேயினுடைய சாருலதாவாக இருந்தாலும் சரி, அபராஜிதாவாக
இருந்தாலும் சரி, அபு சன்சாராக இருந்தாலும் சரி, நான் முன்னாடி சொன்ன மாதிரி
பிரதித்வந்தி, ஜனசத்ரு மாதிரி வெளிப்படையான அரசியல் பேசுகிற படங்கள் தவிர, இது
வரைக்கும் அவர் எடுத்த எல்லாப் படங்களுமே சமூக ஆவணங்கள்தான். அந்தந்தக் காலகட்டத்தில்
இருக்கக்கூடிய சமூகங்களைப் பிரதிபலித்த, உறவுகளைப் பிரதிபலித்த ஆவணங்கள்தான்.
அறுதியாகச் சமூகத்தினுடைய சட்டதிட்டங்கள் போன்றதெல்லாம் உறவுகளுக்குள் கட்டுண்டதுதான்-

தனிமனித உறவுகளை நான் விடவில்லை. ஒரு அரசியல் கட்சியின் தலைவி அல்லது அரசியல்
கட்சியின் தலைவன் என நான் போகிறேன். இதுவும் உறவுகள் சம்பந்தமானதுதான். இது ஒரு
கட்சிக்கும் இன்னொரு கட்சிக்குமான உறவு. ஒரு கட்சியில் இருக்கக்கூடிய தொண்டனுக்கும்
தலைவனுக்குமான உறவு. இந்தத் தலைவனுக்காக இந்தக் கட்சியில அவன் இருக்கிறானா,
கொள்கைக்காக இருக்கிறானா என்கிற இதைப் பற்றின பகுப்பாய்வுக்கு நான் போகிறபோது,
தனிமனித உறவுகளைப் பற்றி நான் சித்தரிக்கிறேன் என நீங்கள் கொள்ளக் கூடாது. உன்னத படங்கள்
என்பன ஏற்கனவே உருவாக்கப்பட்டுவிட்ட படங்கள்தான். ரேயினுடைய படங்கள் எல்லாமே ஒரு வகையில்
தாய்க்கும் மகனுக்கும் உள்ள அன்னியமாதல் (alienation) பற்றியதுதான். மகன் வளரும் போது
உருவாகும் அன்னியமாதல்..

நான் நேச்சர் சேனலில் ஒரு படம் பார்த்தேன். கங்காரு பற்றியது. அதற்கு அதனுடைய
பாக்கெட்டுக்குள்ளேயே முலைகள் அமைந்திருக்கிறது. அதனுடைய குட்டி பால்
குடித்துக்கொண்டிருக்கிறது. அதற்குள் உட்கார முடியாத அளவுக்கு இது வளர்ந்துவிட்டது.
அந்த விவரணக்காரன் அப்போது சொல்கிறான்: இப்போது அந்தத் தாய்க்குத் தெரியும் - நிச்சயமாகப்
பிரிவு என்பது இப்போது வந்துவிட்டது. தாய்க் கங்காரு, பால் குடித்துக் கொண்டிருந்த அந்தக்
குட்டியை ரொம்ப மெல்லமாக வெளித் தள்ளுகிறது. குடித்துக் கொண்டிருந்த குட்டி அதை
எதிர்பார்க்கவில்லை. முதல் முதலாக இப்படி நடக்கிறது. ஒரு நம்ப முடியாத
பிரமிப்போடேயும் பயத்தோடேயும் குட்டி, தாயைப் பார்க்கிறது. தாய் இதைக் கவனிக்காமல்
திரும்பிப் போய்க் கொண்டே இருக்கிறது. இயற்கையாக இருக்கிறது, அன்னியமாதல் அங்கு
இருக்கிறது. பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையில், பிரதானமாகக், குறிப்பாக மகன்
வளரும்போது, மகனுக்கும் தாய்க்குமான அன்னியமாதல் இருக்கிறது. அபராஜிதாவில் ரொம்ப ரொம்ப
அழகாக ரே அதைக் காண்பித்திருக்கிறார். இது ஒரு பிரபஞ்ச உண்மை. இது மனிதர்களுக்கு
மட்டுமே உரியதல்ல. எல்லா உயிரினங்களுக்கும் உரியது..

எனக்கு அடிப்படையாக என்ன படுகிறதென்றால், சில சமயங்களில், எனக்கு நிச்சயமாகத்
தெரியவில்லை, இப்படி இருக்கலாம், இந்த விமர்சனங்கள் அல்லது விமர்சனப் பார்வைகள்
எல்லாவற்றையுமே பாத்திகட்டி வகைப்படுத்தித் தீர வேணும் என்கிற வேகம், அதைக் கொஞ்சம்
நிதானப்படுத்தி சினிமா சம்பந்தமாகக் கொஞ்சம் பிரக்ஞைபூர்வமாக இருக்கலாமோ என்றுதான்
தோன்றுகிறது.         

கேள்வி :நீங்க சொன்னபடி ரேயினுடைய படங்களில் தனிப்பட்டதையும், அரசியல் ரீதியானதையும் பிரிச்சுப்
பார்க்கமுடியாது என்கிறது உண்மைதான்.. ஆனா அவருடைய படங்களில் எல்லாமே ஒன்றுக்கொன்று
தொடர்புள்ளதாகத்தான் இருக்கிறது.. ரேயினுடைய படங்கள், பிரதித்வந்தி, ஜனசத்ரு அப்புறமாக
அவருடைய கடைசிப் படமான அகாந்துக் போன்றவற்றை எடுத்துப் பாரத்தால், அவருடைய வளர்ச்சியில்
ஒரு திருப்பம் ஒன்று இருக்கிறதைப் பார்க்க முடியும்.

ரேயினுடைய படங்களை நான் அடிக்கடி திரும்பத் திரும்பப் பார்க்கிறதுண்டு. ஒரு முறை பத்து
நாளில், அவருடைய முழுப் படங்களையும் பார்த்தேன். அவருடைய பிற்காலத்திய படங்களில்,
அதீதமாக அரசியல் திருப்பம் இருந்தது என்கிற முக்கியமான வித்தியாசத்தை என்னால பார்க்க
முடிந்தது..

பாலு: நீங்கள் சொல்கிறபடி, ரேயினுடைய பத்துப் பன்னிரண்டு படங்களை ஒன்றாகப் பார்க்கக்கூடிய
சந்தர்ப்பம் எனக்கு அமைந்தது.. ஏறக்குறைய, நீங்கள் உணர்ந்த மாதிரித்தான் நானும் உணர்ந்தேன்.
அதிக அளவில், பிரக்ஞைபூர்வமாக அரசியல் ரீதியில் படங்கள் இருக்க வேண்டும் என்கிற
சுயபிரக்ஞையோடு, ரே முயற்சி செய்வதைப் பார்க்க முடிந்தது.. எனக்கு அவருடைய படங்களை
நான் புரிந்து கொண்ட வகையிலேயும், தனிப்பட்ட முறையில் அவரைத் தெரிந்து கொண்ட
வகையிலேயும், அவரோடு நேரடியாகப் பேசிப்பழகின அனுபவத்திலிருந்து அவரைப் புரிந்து
கொண்ட வகையிலேயும், வங்காளத்திலேயும் சரி, பிற இடங்களிலேயும் சரி, ரே மேல் இப்படியான
கடுமையான விமர்சனம் இருக்கிறது. அதாவது மனித உறவுகள் என்கிற அம்சத்திலிருந்துதான் ரே
சிந்திக்கிறார் என்கிற விமர்சனம்.

இவர் அரசியல் பிரச்சினைகளைத் தொட்டதே கிடையாது என்கிற விமர்சனம் இருந்தது. தபன்
சின்ஹா, புத்ததாஸ் குப்தா போன்றவர்கள் இப்படி விமர்சனங்களை முன் வைத்தார்கள். பிற்காலத்திய
ரே படங்களில் வெளிப்படையான அரசியல் வருவதற்கு, அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
பிற்காலத்தில் ஆத்மார்த்தமாகவே இப்படியான படங்கள் கொண்டுவர வேண்டிய தேவைகள் இருக்கிறது
என்பதனை அவர் உணர்ந்திருந்தார் என்பதும் ஒரு முக்கியமான காரணமாக இருக்கலாம். ஒரு
படைப்பாளி, தன்னுடைய சிந்தனைப் போக்கை பிடிவாதமாகக் கடைபிடிக்கிறார் என்றோ, சில
காலங்களுக்கப்புறம் அவர் அதனை மாற்றிக் கொள்ளக்கூடாது என்றோ அல்லது அதிலிருந்து மாறுபடக்
கூடாது என்றோ, விடுபடக்கூடாது என்றோ சொல்வதற்கு யாருக்கும் எந்தவித உரிமையும்
கிடையாது. 

கேள்வி :நீங்கள் உங்களுடைய திரைப்படக் கழக நாட்களுக்கு முன்னாடி, இலங்கையில் இருந்த காலத்தில்,
நீங்கள் எழுதிக் கொண்டிருந்த காலத்தில் எழுதிக் கொண்டிருந்த பல்வேறு எழுத்தாளர்களைக்
குறிப்பிட்டீர்கள். எஸ்.பொ, டொமினிக் ஜீவா, செ.யோ போன்றவர்கள். மற்றது உங்களது நெருங்கிய
நண்பராக இருக்கிறவர் கணேசலிங்கன், ஒரு தீவிரமான அரசியல் நாவலாசிரியர். இப்படியான
முற்போக்கு, நற்போக்கு, கலை இலக்கிய விவாதங்கள் நடந்த பின்னணியில இருந்து நீங்கள்
உருவாகியிருக்கிறீர்கள்..

இலங்கைத் தமிழ் எழுத்துக்களில் அரசியல் உணர்வு என்பது முக்கியமான அம்சம்- ஒரு காலத்தில்
வர்க்கப் பார்வை, அப்புறம் டானியல் மாதிரி இருக்கிறவர்கள் முன்வைத்த தலித் பார்வை, அதற்குப்
பிறகு இப்போது உக்கிரமாக வருகிற தமிழ் இன விடுதலைப் பார்வை. இப்படிப் பார்த்தால் அதி
உயர் அரசியல் பிரக்ஞையுள்ள பின்னணியிலிருந்து வந்த உங்களிடமிருந்து வந்த படைப்புகளில்,
இது வரைக்கும் மனிதப் பரிமாணம்தான் அதிகமாக இருக்கிறதேயொழிய, அரசியல் பரிமாணம்
அதிகமாக இல்லை. நீங்கள் வளர்ந்த சூழலில் அரசியல் பரிமாணம் என்கிறது ஒரு முக்கியமான
விஷயம். ஒரு சில படங்களில் இருக்கிற ஒரு சில காட்சிகள் தவிர, யாத்ரா பட நக்ஸலைட்
சித்திரவதை மற்றது போலீஸ் வன்முறைக் காட்சிகள் தவிர, உங்கள் படங்களில் அரசியல் பரிமாணம்
என்கிறது இல்லை.

இது வந்து பிரக்ஞைபூர்வமாக நீங்கள் கடைபிடிக்கும் நிலைபாடு எனில், அதற்கு என்ன காரணம்?
அல்லது அடி மனத்தில் அப்படி நேர்ந்ததா? ஏன் இந்த அரசியல் பிரக்ஞை வெளிப்படையாக உங்கள்
படைப்புகளில் இல்லாமல் இருக்கிறது?

பாலு: சமகாலத்திய இந்திய எழுத்தாளர்களோடு ஒப்பிடும் போது, இலங்கைத் தமிழர்கள்
தங்களுடைய வாழ்வில் எதிர்கொண்டு வருகிற பல்வேறு அழுத்தங்கள், நெருக்கடிகள் போன்றவைகள்
அவர்களுடைய எழுத்துக்களில் வருகிறது. அந்த எழுத்துக்கள் இப்போது சமீப காலங்களில் இன்னும்
உக்கிரமாக இருக்கிறது. நமக்கு மேலோட்டமான சில பிரச்சினைகள் தான் இருக்கிறது. சில
சம்பவங்கள் அதற்கும் மேலே வாழ்க்கையினுடைய சில குரூரங்கள் என என்னுடைய படங்களில்
வெளிப்படையாக அரசியல் இல்லாமல் போனதற்கு இந்த இரண்டு காரணங்களுமே பொருந்தும்.

No comments:

Post a Comment